கடத்தப்பட்ட மகன் கடற்படை சீருடையுடன் நின்றார் – தாய் சாட்சியம்

இராணுவத்தினரால் கடத்தப்பட்ட எனது மகன் நயினாதீவில் கடற்படை சீருடையுடன் நின்றார் என தாய் ஒருவர் சாட்சியம் அளித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சேவினால் மக்ஸ்வெல் பரணகம தலைமயில் உருவாக்கப்பட்ட காணாமல் போனோரை கண்டறியும் குழுவின் அமர்வு சனிக்கிழமை காலை யாழ்.மாவட்டத்தில் கோப்பாய் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. குறித்த அமர்வில் கோப்பாய் , கரவெட்டி மற்றும் பருத்தித்துறை பிரதேச செயலக பிரிவை சேர்ந்த 232 பேர் சாட்சியம் அளிப்பதற்காக அழைக்கப்பட்டு இருந்தனர். அந்த அமர்வில் காணாமல் போன தனது மகன் குறித்து சாட்சியம் அளிகையிலையே அவ்வாறு குறிப்பிட்டார். 
மேலும் தனது சாட்சியத்தில் குறிப்பிடுகையில், எனது மகனான அச்சுதன் வைகுந்தன் (வயது 22) நீர்வேலி வடக்கில் உள்ள எமது வீட்டில் இருந்த வேளை 2006ம் ஆண்டு 10ம் மாதம் 18ம் திகதி வீட்டுக்குள் புகுந்த கும்பல் ஒன்று வீட்டில் இருந்த பொருட்களை அடித்து நெருக்கி மகனை கயிற்றால் கட்டி இழுத்து சென்றனர். அதன் பின்னர் அச்செழு மற்றும் ஊரெழு இராணுவ முகாமில் மகனை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டனர். பின்னர் மகனை பற்றிய தகவல் எதுவும் இல்லை. மகன் கடத்தப்பட்டு ஆறு மாத காலம் கடந்த நிலையில் நயினாதீவு ஆலயத்திற்கு சென்ற எமது உறவினர்கள் மகனை கடற்படை சீருடையுடன் நயினாதீவில் கண்டு உள்ளனர். அதன் பின்னர் மகனை பற்றிய எந்த தகவலும் இல்லை. 
கடந்த 2013ம் ஆண்டு இறுதி கால பகுதியில் எமக்கு ஒரு கடிதம் வந்தது மகனை வவுனியா யோசப் முகாமில் தடுத்து வைத்து இருப்பதாகவும் அவரை மீட்க ஒரு இலட்ச ரூபாய் பணம் கொடுக்கவும் என. அதன் பிறகு கைதடியில் உள்ள ஒருவர் வந்து என்னிடம் ஒரு இலட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு இந்த பணத்தை இராணுவத்தினரிடம் வழங்கினால் முகாமில் இருந்து அதிகாலை மகனை விடுதலை செய்வார்கள் என கூறி பணத்தினை வாங்கி சென்றார். அதன் பிறகு எந்த தகவலும் இல்லை. பணத்தை பெற்றவரின் வீட்டினை அறிந்து அங்கு சென்று விசாரித்தால் பணம் வாங்கியவரின் மனைவி பிள்ளைகளே இருந்தனர். அவர்கள் கூறினார்கள் அவர் நீண்ட நாள வீட்டுக்கு வரவில்லை என அதன் பிறகு மகனை பற்றியோ பணத்தை பெற்றவர் பற்றியோ எந்தவிதமான தகவலும் இல்லை என தனது சாட்சியத்தில் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com