கடத்தப்பட்ட மகனை இராணுவ சீருடையுடன் தலையாட்டியாக கண்டேன் – தந்தை சாட்சியம்.

கடத்தப்பட்ட என் மகனை இராணுவ சீருடையுடன் தலையாட்டியாக கண்டேன் என தந்தை ஒருவர் காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழு அமர்வின் போது சாட்சியம் அளித்துள்ளார்.
மேலும் தனது சாட்சியத்தில் தெரிவிக்கையில்,

சிறுப்பிட்டியை சேர்ந்த செந்தில்நாதன் கஜேந்திரன் எனும் எனது மகன் திராட்சை தோட்டம் வைத்து திராட்சை பழங்களை விற்கும் தொழில் செய்து வந்தார்.

கடந்த 2006ம் ஆண்டு 11ம் மாதம் 29ம் திகதி அவ்வாறு திராட்சை பழங்களை விற்றுவிட்டு வீட்டுக்கு வந்த வேளை திடீர் என வீட்டுக்குள் புகுந்த கும்பல் துப்பாக்கியால் எனது மகனை தாக்கி கீழே வீழ்த்தி பின் புறமாக மகனின் கையை கட்டி முகத்திற்கு கறுத்த துணியால் கட்டி இழுத்து சென்றனர்.

அந்த கும்பலில் ஒருவர் இராணுவ சீருடையுடனும் மற்றையவர்கள் சிவில் உடையுடனும் வந்து இருந்தார்கள். வீட்டுக்கு வெளியே பெருமளவான இராணுவத்தினர் நின்று இருந்தார்கள்.

மகனை இழுத்து செல்லும் போது எம்மை நோக்கி சத்தம் போட்டால் மகனை சுட்டு விடுவோம் என கூறியதனால் நாம் சத்தம் போடாமல் இருந்தோம்.

அதன் பின்னர் மகனை பற்றிய தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. மகன் காணாமல் போய் ஓரிரு மாதங்களின் பின்னர். அயல் கிராமத்தை இராணுவத்தினர் சுற்றிவளைப்பு செய்து அக்கிராமத்தை சேர்ந்தவர்களை மைதானம் ஒன்றிற்கு அழைத்து சென்று இருந்தனர். அவ்வேளை அங்கு எனது மகனுக்கு இராணுவ சீருடை அணிந்து தலையாட்டியாக கொண்டு வந்து இருந்தனர்.

அன்றைய தினத்திற்கு பின்னர் மகனை பற்றிய எந்த தகவலும் இல்லை. என தனது சாட்சியத்தில் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds