சற்று முன்
Home / கட்டுரைகள் / “கச்சான் வியாபாரிகளிடம் இலட்சங்கள் கப்பிறேட் நிறுவனங்களிடம் ஆயிரங்கள்” – விளம்பரக் கட்டண அறவீடு – சிறப்புப் பார்வை

“கச்சான் வியாபாரிகளிடம் இலட்சங்கள் கப்பிறேட் நிறுவனங்களிடம் ஆயிரங்கள்” – விளம்பரக் கட்டண அறவீடு – சிறப்புப் பார்வை

நல்லூர் திருவிழாக் காலத்தில் கச்சான் விற்பவர் முதல் அன்றாடா வியாபாரிகளிடம் 10 ஆயிரம் ரூபா முதல் 2 இலட்சம் ரூபா வரையான ஏலத்தொகைக்கு கடைகள் அமைப்பதற்கான நிலத்தினை வாடகைக்கு கொடுக்கும் யாழ்ப்பாணம் மாநகரசபை யாழ் மாநகரசபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் காப்பிறேட் நிறுவனங்கள் பாரிய விளம்பரப் பதாதைகளை அமைப்பதற்கு சுமார் 50 ஆயிரம் ரூபா வரையான தொகையினை மட்டுமே அறவிடுவது தெரியவந்துள்ளது.

இலங்கையின் பிரபல காப்பிறேட் வர்த்தக நிறுவனங்களின் கொழும்பிற்கு அடுத்தபடியான வர்த்தக தளமாக யாழ்ப்பாணம் விளங்குகின்றது. அவை யாழ் நகரின் மூலை முடுக்கெங்கும் தங்கள் வர்த்தக நிறுவனம் சார்ந்த பாரிய அளவுடைய விளம்பரப் பதாகைகளை காட்சிப்படுத்தியுள்ளன.

யாழ் குடாநாட்டில் சில விளம்பர பதாகைகள் உற்பத்தி நிறுவனங்கள் மாநகரசபை, உள்ளூராட்சி சபைகளில் நிலங்களை வாடகைக்குப் பெற்று அவ்விடங்களில் வர்த்த நிறுவனங்களுக்கு ஏற்றவாறான விளம்பரப் பதாகைகளை நிறுவி வருகின்றன. எனினும் குறித்த விளம்பரப் பதாகைகள் உற்பத்தி நிறுவனங்கள் சுமார் 20 X 40 அளவுடைய விளம்பரப் பதைகைக்கு சுமார் 4 இலட்சம் ரூபா வரையான தொகையினை வர்த்தக நிறுவனங்களிடமிருந்து வருட வாடகையாக அறவிடுகின்றபோதும் யாழ் மாநகரசபை அவற்றிற்கான வாடகையாக சுமார் 50 ஆயிரம் ரூபா வரையே அறவிடுகின்றமை தெரியவந்துள்ளது.

20 X 40 அளவுடைய விளம்பரப் பதைகை ஒன்ற யாழ் மாநகர எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் நிறுவும்போது குறித்த விளம்பர அளவான 800 சதுரஅடியை கணக்கில் கொள்ளாது விளம்பரம் நிறுத்தப்பட்டுள்ள கம்பிகளுக்கு இடைப்பட்ட நில அளவிற்கு மட்டும் (40 X 2) அல்லது (20X2) என்ற அளவில் வாடகை அறவிடப்படுவதான தகவல் தெரியவந்துள்ளது. அவையும் மிகக் குறைந்த அளவில் ஒரு சதுர அடிக்கு 100 ரூபா முதல் 150 ரூபா வரையே அறவிடப்பட்டுவருகின்றது. கொழும்பு உள்ளிட்ட பிரதேசங்களில் விளம்பர பதாகைகளின் முழு அளவு சதுர அடிக்கே வாடகைக் கட்டணம் அறவிடப்படுகின்றதோடு அதுவே கட்டண அறவீடு தொடர்பான விதிமுறை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் யாழ் மாநசரசபையின் கடந்த ஆட்சிக்காலத்தின்போது சுட்டிக்காட்டப்பட்டு யாழ் மாநகரசபையின் வாடகைக் கட்டணம் அதிகரிக்கப்பட்டபோதிலும் சில அரசியல்வாதிகளின் செல்வாக்கின்போது ஒரு மாத காலத்திலேயே வாடகைக் கட்டண அதிகரிப்பு இரத்துச் செய்யப்பட்டிருந்தது.

வருடாவரும் நல்லூர் உற்சவகாலத்தில் 25 நாட்களுக்கு கச்சான் வியாபாரிகள் உள்ளிட்ட நடைபாதை வியாபாரிகளிடம் நிலவாடகை என ஏலம் மூலம் சுமார் ஒரு இலட்சம் ரூபாவிற்கு மேற்பட்ட தொகையினை அறவிடும் யாழ் மாநகரசபையினர் பாரிய விளம்பர நிறுவனங்களிடம் ஒரு வடருட காலப்பகுதிக்கு சுமார் ஐம்பது ஆயிரம் ரூபாவினை நில வாடகையாக பெறுவது பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் குறித்த விளம்பரப் பதாகைகள் நிறுவுவது தொடர்பில் யாழ் மாநகரசபையினால் விதிக்கப்படுகின்ற கட்டண விபரங்கள் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் பெறப்பட்டுள்ளன. அவை தொடர்பில் தெரியவருகையில்,

01) யாழ் மாநகர சபைக்குச் சொந்தமான கட்டங்களின் மேல் விளம்பரப் பதாகைகள் அமைக்க – ஒரு சதுர அடிக்கு – ரூபா 150 + VAT வரி + NBT வரி (நில வாடகை பொருத்தமற்றது)

02) தனியார் கடைகளின் முன் விளம்பரப் பதாகைகள் காட்சிப்படுத்த – ஒரு சதுர அடிக்கு – ரூபா 150 + VAT வரி + NBT வரி (நில வாடகை பொருத்தமற்றது)

03) தனியார் காணி, வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான காணி, யாழ் பேருந்து தரிப்பிடம் உள்ளிட்ட இடங்களில் விளம்பரப் பதாகைகளைக் காட்சிப்படுத்த – ஒரு சதுர அடிக்கு – ரூபா 100 + VAT வரி + NBT வரி (நில வாடகை பொருத்தமற்றது)

என வாடகைக் கட்டணம் அறவிடப்படுவதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தரவுகள் பெறப்பட்டுள்ளன.

இதேவேளை ஒளியேற்றப்பட்ட தொலைக்காட்சியினைக் காட்சிப்படுத்துவதற்கு ஒரு சதுர அடிக்கு 1500 ரூபாவும் ஒளியேற்றப்பட்ட விளம்பரப் பதாகைகளுக்கு ஒரு சதுர அடிக்கு 500 ரூபாவும் அறவிடப்படுவதோடு தனியார் காணிகளில் மதில்களில் வர்ணம் பூச 300 ரூபாவும் அறவிடப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த விளம்பரங்களுக்கான ஒப்பந்த காலம் ஒரு வருடமாக உள்ளபோதிலும் பல நிறுவனங்கள் விளம்பரக் காலப்பகுதி முடிந்த பின்பும் தமது செல்வாக்கின் அடிப்படையில் விளம்பரப் பதைகளை அகற்றாது பிறிதொரு விளம்பர ஒப்பந்தம் உருவாகும் காலப்பகுதிவரை விளம்பரங்களை அகற்றாத தன்மையும் காணப்படுகின்றது.

யாழ்ப்பாணம் நல்லூர் ஆலத்தின் பின் வீதியில் தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியின் பின்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகைக்கா விளம்பர காலப்பகுதி 2018 மே மாதத்திற்கு முன்னர் முடிவடைந்தபோதும் 2018 ஒக்ரோபர் வரை குறித்த விளம்பரம் அகற்றப்படாமல் இழுத்தடிக்கப்பட்மையை நாம் முன்னர் செய்தியாக வெளியிட்டிருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடப்பாண்டில் யாழ் மாநகரசபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் 187 பாரிய விளம்பரப் பதாகைகளுக்கான அனுமதியை வழங்கியுள்ளதாக தகவல அறியும் சட்டத்தின் மூலமாக விபரம் தந்துள்ள யாழ் மாநகரசபையினர் 2018 ஒக்ரோபர் வரை குறித்த விளம்பரப் பதாகைகளின் மூலம் 52 இலட்சத்து 16 ஆயிரத்து 838 ரூபா நிதியினை வாடகைக் கட்டணமாகப் பெற்றுக்கொண்டதாக குறிப்பிட்டுள்ளனர்.

இதன் சராசரியை பார்க்கும்போது ஒரு விளம்பரத்திற்கு 10 மாதகாலப்பகுதியில் 27 ஆயிரத்து 897 ரூபாவே அறவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இக் கட்டணங்களை அதிகரிப்பதன் மூலம் யாழ் மாநசரசபைக்கான வருவாயினை அதிகரிக்க முடியுமான சூழல் உள்ளபோதிலும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு யாழ் மாநகரசபையினர் பின்னடிப்பது குறித்த விளம்பர நிறுவனங்களுடன் இரகசிய உடன்பாடுகள் ஏதாவது மேற்கொண்டுள்ளனரோ என்ற சந்தேகம் மக்களுக்கு எழுவதற்கு வாய்ப்புக்கள் இல்லாமல் இல்லை.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com