ஓமந்தையில் சோதனைச்சாவடியில் இராணுவ சோதனைகளை படைத்தரப்பு நிறுத்தியது !

ஏ-9 வீதியில் அமைந்துள்ள ஓமந்தை சோதனைச்சாவடியின் சோதனை நடவடிக்கைகள் இன்று சனிக்கிழமை முதல் நிறுத்தப்பட்டிருக்கின்றன. ஏ-9 வீதியூடாக நாட்டின் வடபகுதியிலிருந்து தென்பகுதிக்கும் தெற்கிலிருந்து வடக்குக்கும் பயணிக்கும் பயணிகளின் வசதி கருதியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
ஓமந்தை இறம்பைக்குளம் கிராமத்தில் அமைந்துள்ள இந்த சோதனைச்சாவடி யுத்த மோதல்கள் நடந்த காலம் தொட்டு இயங்கி வந்துள்ளது.
யுத்த காலத்தில், இரண்டு நாடுகளுக்கிடையிலான சோதனைச்சாவடியைப் போன்று இங்கு சோதனைகள் நடந்துவந்தன. வாகனங்கள் பதிவு செய்யப்பட்டதன் பின்னரே பயணிக்க அனுமதிக்கப்பட்டு வந்தன. பொருட்களை ஏற்றி வருகின்ற வாகனங்களில் இருந்து பொருட்களும் இறக்கி சோதனையிடப்பட்டிருந்தன.
யுத்தம் முடிந்த பின்னர், பயணிகளின் பொதிகள் சோதனையிடப்படுவது நிறுத்தப்பட்டு, அவர்களின் ஆள் அடையாள ஆவணங்கள் சோதிக்கப்பட்டுவந்தன. இதற்காக பயணிகள் வாகனங்களில் இருந்து இறங்கி நடந்து சென்று சோதனை முடிந்த பின்னர் மீண்டும் தமது வாகனங்களில் ஏறிச் செல்லும் நடைமுறை இருந்தது.
பின்னர், பயணிகளைச் சோதனையிடும் நடவடிக்கை நிறுத்தப்பட்டிருந்தது. வாகனங்களில் இருந்து பொருட்களை இறக்கி ஏற்றும் நடவடிக்கையிலும் தளர்வு ஏற்பட்டிருந்தது. ஆயினும் வாகனங்களைப் பதிவு செய்யும் நடைமுறை தொடர்ந்தும் இருந்துவந்தது.
வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள், தனியான கருமபீடம் ஒன்றில் பதிவு செய்யப்பட்ட பின்னரே தொடர்ந்து பயணிக்க அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com