ஒற்றையாட்சியை ஏற்பதாக தமிழ்க் கூட்டமைப்பு இந்தியாவிற்கு வாக்களித்துள்ளது – கஜேந்திரகுமார் பரபரப்புக் குற்றச்சாட்டு

(31.07.

2015) தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஒற்றையாட்சி முறையிலான தீர்வுக்கு ஆதரவு வழங்குவுதாக இந்தியாவிற்கு உறுதியளித்துள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்
யாழ்.ஊடக அமையத்தில் வியாழக்கிழமை (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைப் பொறுத்தவரையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மாத்திரம் கூடாதவர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா ஆகியோர் நல்லவர்கள் என்று கூறுகின்றனர். இதன்மூலம் கூட்டமைப்பு ஒற்றையாட்சி முறைக்கு ஆதரவு வழங்குவதாகவுள்ளது என்றார்.
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றம் தொடர்பில் ஐ.நாவால் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் வெளியிடப்படவுள்ள போர்க்குற்ற விசாரணை அறிக்கை கசிந்துள்ளதாக சனல் 4 தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கத்துடன் பேசி ஒரு உள்ளக விசாரணையை நடத்தவதற்கு ஆலோசனைகள் வழங்குவதாக அந்த விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சணல் 4 தெரிவித்துள்ளது. இதனை நாங்கள் ஏற்கமாட்டோம்.
உள்ளக விசாரணையில் மனித உரிமை மீறல் மட்டுமல்ல, மனிதாபிமான சட்ட மீறல் தொடர்பான விசாரணையும் மேற்கொள்ளப்படவேண்டும் எனக் சொல்லப்பட்டது. இந்நிலையில் சர்வதேச மனித உரிமையாளர் ஆணையாளரிடம் கொடுக்கப்பட்ட விடயம் வெறுமனவே மனித உரிமை மீறல் மட்டும் ஆகும். இது ஏமாற்றத்தை வழங்குவதாக இருக்கின்றது எனச் சுட்டிக்காட்;டினார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளக விசாரணைக்கு தயார் என பகிரங்கமாகக் கூறி வருகின்றது. இதன் மூலம் நன்மை கிடைக்குமா? எனக் கேள்வியெழுப்பினார்.
ரணிலையும் மைத்திரியைப் பலப்படுத்த கூட்டமைப்பு தேர்தலில் போட்டியிடுகின்றனர். சமஷ்டி பற்றி 5 வருடங்களாக கதைக்காத கூட்டமைப்பு தற்போது அது தொடர்பில் பேசுகின்றது. நாங்கள் தமிழ்த் தேசம் என்ற அடிப்படையில் தீர்வு பெறவேண்டும். சிங்கள மக்கள் உள்ளக விசாரணையை கோருவது அவர்களின் கடமை. சர்வதேசம் தங்கள் நலன் தொடர்பில் அக்கறை கொள்ளும். எங்கள் நலன் தொடர்பில் அக்கறை செலுத்த வேண்டியது எங்கள் பிரதிகளே. இனியும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.
திரும்ப திரும்ப மக்களிடம் பொய் சொல்பவர்களை தமிழ் மக்கள் இனங்கண்டு அவர்களை மக்கள் நிராகரிக்க வேண்டும். அவ்வாறு இல்லையெனில் தமிழர்களின் பிரச்சினை ஒற்றையாட்;சிக்குள் முடங்கிவிடும். ஆகவே நாடாளுமன்ற தேர்தல் மூலம் தமிழ் மக்கள் சரியான முறையில் தீர்மானம் எடுக்க வேண்டும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com