ஒரு மாத காலத்துள் வட-கிழக்கில் 10 பேர் கைது 2 பேர் கடத்தல்

white_van_abduction_sri-lanka_18-02-2012சாவகச்சேரியில் தற்கொலை அங்கி மீட்கப்பட்ட சம்பவத்தின் பின்னர் கடந்த ஒரு மாத காலப்பகுதியி்ல் பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிசாரினால் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு இருவர் கடத்தப்பட்டுள்ளனர். இவர்களில் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதிகள் மூவரும் தமிழரசுக் கட்சியிய் இளைஞரணிச் செயலரும் உள்ளடங்குகின்றனர்.

இவ்வாறாக ஒருமாதகாலப்பகுதியில் நிகழ்த்தப்பட்ட கைதுகள் தொடர்பில் தம்மிடம் ஆறு  முறைப்பாடு பதிவு செயப்பட்டுள்ளதாக யாழ்.மனித உரிமை ஆணைக்குழுவின் இணைப்பாளர் ரி.கனகராஜ் தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் 30ம் திகதி சாவகச்சேரி மறுவன்புளவு பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து தற்கொலை அங்கி ஒன்றும் நான்கு கிளைமோர் குண்டுகளும் கைப்பற்றபட்டன.

அதனை தொடர்ந்து குறித்த வீட்டில் வாடகைக்கு இருந்த நபர் கைது செய்யப்பட்டார். அவரின் கைதினைத் தொடர்ந்து யாழ்.மற்றும் கிளிநொச்சி மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் பலர் பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிசாரினால் கைது செய்யப்பட்டு வருகின்றார்கள்.

அக் கைதுகள் தொடர்பில் இதுவரை (புதன் கிழமை மதியம்) ஆறு முறைப்பாடுகள் தமக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும். சாவகச்சேரி பகுதியை சேர்ந்த இருவரும் , கிளிநொச்சி , கல்வியங்காடு , நீர்வேலி , மற்றும் மானிப்பாய் ,ஆகிய பகுதிகளை சேர்ந்த தலா ஒருவரும் கைது செய்யப்பட்டு உள்ளதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக யாழ்.மனித உரிமை ஆணைக்குழுவின் இணைப்பாளர் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் அமைப்பில், முன்னர் கிழக்கு மாகாணத் தளபதிகளில் ஒருவராக இருந்த  ராம் கடந்த 24ம் திகதியும் விடுதலைப் புலிகள் அமைப்பின் சாள்ஸ் அன்டனி படைப்பிரிவின் சிறப்பு தளபதியாக இருந்த  நகுலன் 26ம் திகதியும் விடுதலைப் புலிகளின் திருகோணமலை புலனாய்வுப் பொறுப்பாளராக இருந்த கலையரசன் 26 ம் திகதியும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அதேவேளை இன்று மதியம் (புதன் கிழமை) மன்னார் பகுதியில் வைத்து தமிழரசு கட்சியின் இளைஞரணி செயலாளரும் புதியவன் பத்திரிக்கை ஆசிரியருமான வி.எஸ். சிவகரன் கைது செய்யப்பட்டார். அதேநேரம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு முள்ளியான் பகுதியை சேர்ந்த சேர்ந்த ஜோர்ஜ் ராஜநாயகம் (வயது 42) மற்றும் வீ.மைக்கல் (வயது 45) ஆகிய இருவரும்  கடத்தப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com