ஒரு நிமிடம், கூகுள்.காம் உரிமையாளராக இருந்த இந்தியர்!

இயக்குனர் ஷங்கரின் ஒரு நாள் முதல்வர் போல முன்னாள் கூகுள் ஊழியர் ஒருவர் கூகுள்.காம் இணைய முகவரியின் ஒரு நிமிட உரிமையாளராக இருந்திருக்கிறார். இதை நம்புவதற்கு கடினமாக இருந்தாலும், இணைய உலகிலேயே அதிக போக்குவரத்தை கொண்ட கூகுள்.காம் இணையதளத்தின் முகவரி அமெரிக்க இந்தியரான அந்த நபருக்கு சொந்தமாகி ஒரு நிமிடத்தில் கைவிட்டு போயிருக்கிறது. 

அமெரிக்காவை சேர்ந்த சான்மே அஸ்வின் வேத் என்பவர் கூகுள் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர். தற்போது எம்பிஏ படித்து வரும் சான்மே இணைய முகவரிகளை வாங்கும் பழக்கம் கொண்டவர். பொதுவாக கூகுளின் இணைய முகவரி விற்பனை சேவையான கூகுள் டொமைன்ஸ் மூலம் தான் இணையதள முகவரிகளை வாங்குவது வழக்கம்.


சமீபத்தில் அவர் கூகுள் டொமைன்ஸ் இணையதளத்தில் விளையாட்டாக கூகுள்.காம் இணையதள முகவரியை டைப் செய்திருக்கிறார். வழக்கமாக ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள இணையதளம் என்றால் மன்னிக்கவும் இந்த இணைய முகவரி விற்பனைக்கு இல்லை எனும் செய்தி தோன்றும்.
ஆனால்,கூகுள்.காம் இணையதள முகவரியை டைப் செய்த பிறகு இது போன்ற செய்தி தோன்றுவதற்கு மாறாக இந்த முகவரியை வாங்கலாம் என்னும் செய்தி தோன்றியிருக்கிறது. இதை சான்மேவால் நம்பவே முடியவைல்லை.

இணைய உலகிலேயே அதிகமானவர்களால் விஜயம் செய்யப்படும் கூகுள்.காம் முகவரி விற்பனைக்கு உள்ளதா என்னும் மலைப்புடன் அவர் அதை வாங்குவதற்காக கிளிக் செய்து கிரிடிட் கார்டு விவரத்தை சமர்பித்தார். இப்போது கூட அவருக்கு நம்பிக்கை இல்லை, தனது கிரிடிட் கார்டு விவரம் நிராகரிக்கப்படும் என எதிர்பார்த்திருந்தார். ஆனால் ஆச்சர்யப்படும் வகையில் அவர் கிரிடிட் கார்டு ஏற்கப்பட்டு அந்த முகவரிக்கான 12 டாலர் பிடித்துக்கொள்ளப்பட்டது. ஆக அவர் கூகுள்.காம் இணைய முகவரியின் புதிய உரிமையாளராகி இருந்தார். 

ஆனால் ஒரு நிமிடம் கழித்து கூகுள் டொமைன்சிடம் இருந்து அவருக்கு வந்த இ-மெயில் அவரது ஆர்டர் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்தது. அந்த முகவரி ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஒரு நிமிடத்தில் கைநழுவிப்போனாலும், அந்த ஒரு நிமிடம் அவர் கூகுள்.காம் இணைய முகவரியின் உரிமையாளராக இருந்திருக்கிறார்.’
இந்த விநோதம் பற்றி சான்மே வேத் தன்னுடைய லிங்குடு. இன் பக்கத்தில் விரிவாக எழுதியிருக்கிறார். இது எப்படி நிகழ்ந்தது என்று தமக்குத்தெரியவில்லை என்றும், இதற்கு ஏதேனும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருந்திருக்கலாம் அல்லது கூகுள் முகவரியை புதுப்பிக்க தவறியிருக்கலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 
 

2003ல் மைக்ரோசாப்ட் நிறுவனம் இப்படி தனது ஹாட்மெயில்.யு.கே முகவரியை புதுப்பிக்கத்தவறி அது வேறு ஒருவரால் வாங்கப்பட்டு பின்னர் நிறுவனம் அதை விலை கொடுத்து வாங்க வேண்டியிருந்ததையும் அவர் சுட்டுக்காட்டியுள்ளார். ஒரு வேளை கூகுள் தனது முகவரியை புதுப்பிக்க தவறியிருந்தால் இந்த விற்பனை நிகழ்ந்திருந்தாலும், கூகுள் தளம் மூலமே அது நிகழந்த்தால் உடனே சரி செய்யப்பட்டு விட்டது.

இணைய உலகில் நிறுவனங்கள் இணையதள முகவரிகளை புதுப்பிக்க மறந்து சங்கடத்திற்கு இலக்காவது அடிக்கடி நடப்பது தான். ஆனால் இணைய உலகின் முன்னணி தேடியந்திரமாக இருக்கும் கூகுள் இவ்வாறு கோட்டை விட்டிருக்கும் என்பதை நினைத்துப்பார்ப்பதே விநோதமாக இருக்கலாம்.
எது எப்படியோ சான்மே வேத், ஒரு நிமிட கூகுள் உரிமையாளராக இருந்திருக்கிறார். இந்த அதிர்ஷ்டசாலி(!) இந்திய அமெரிக்கர் என அறிய முடிகிறது. லின்க்டு இன் தளத்தில் இந்த அனுபவம் பற்றி எழுதியுள்ள பதிவில் அவர்,” இந்திய பிரதம அமெரிக்கா வருகை தந்த போது அவரது மாநிலமான குஜராத்தின் கட்ச் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு இணையதள முகவரியை கூகுள் விற்பனை செய்ய முன்வந்தது (ஒரு நிமிடத்திற்கு தான்) என்று அவர் முத்தாய்ப்பாக குறிப்பிட்டுள்ளார்.

சான்மே வேத்தின் லிங்க்டு.இன் பதிவு:https://www.linkedin.com/pulse/i-purchased-domain-googlecom-via-google-domains-sanmay-ved

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com