சற்று முன்
Home / பிரதான செய்திகள் / ஒரு சில தனி நபர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளைத் தீர்மானிக்க முடியாது – எம்.கே. சிவாஜிலிங்கம்

ஒரு சில தனி நபர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளைத் தீர்மானிக்க முடியாது – எம்.கே. சிவாஜிலிங்கம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நான்கு அரசியற் கட்சிகளை உள்ளடக்கிய கூட்டமைப்பாகும் ஒரு கட்சியை மட்டும் சார்ந்த ஒருசில தனிப்பட்ட நபர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவுகளை தீர்மானங்களைத் தீர்மானிக்க முடியாது எனத் தெரிவித்துள்ள ரெலோ அமைப்பின் உயர்மட்டத் தலைவர்களுள் ஒருவரான எம்.கே. சிவாஜிலிங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழுவான இணைப்புக்குழுவை உடனடியாகக் கூட்ட வேண்டும் என்று அந்த அமைப்பைச் சேர்ந்த மூன்று கட்சிகள்கொழும்பில் இன்று கூடி முடிவெடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த பொதுத் தேர்தலை அடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரண்டு தேசிய பட்டியல் இடங்களுக்கான ஆட்களை நியமிப்பதில் எற்பட்டிருந்த அதிருப்தி நிலைமையை அடுத்து, தமிழரசுக் கட்சி தவிர்ந்த ஏனைய 3 கட்சிகளின் முக்கியஸ்தர்கள் கொழும்பில் இன்று கூடி இரண்டாவது கட்டமாகப் பேச்சுக்களை நடத்தியுள்ளனர்.
இதற்கு முன்னதாக யாழ்ப்பாணத்தில் இவர்கள் கூடி தேர்தலுக்குப் பின்னரான நிலைமைகள் குறித்து ஆராய்ந்திருந்தார்கள்.
இந்தக் கூட்டத்தில் டெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், சிவாஜிலிங்கம் உள்ளிட்ட 6 பேரும், ஈபிஆர்எல்எஃப் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், செயலாளர் சிவசக்தி ஆனந்தன் உள்ளிட்ட 5 பேரும், புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் உள்ளிட்ட இருவருமாக 13 பேர் கலந்து கொண்டிருந்தனர்.
செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐநா மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள ஐநா விசாரணை அறிக்கை, அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படவுள்ள விசாரணை சர்வதேச விசாரணையாக அமைய வேண்டியதன் அவசியம், அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிறுவன ரீதியாகச் செயற்பட வேண்டியதன் தேவைகள், முக்கியத்துவம் என்பன உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டதாக எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
தமிழரசுக் கட்சி தவிர்ந்த ஏனைய 3 கட்சிகளும் நாடாளுமன்றத்தில் தனித்து இயங்குவது குறித்து எதுவும் இங்கு பேசப்படவில்லை என்று கூறிய சிவாஜிலிங்கம், இந்தக் கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்கள் குறித்து தமிழரசுக் கட்சிக்கு எடுத்துக் கூறி கலந்துரையாடவுள்ளதாகவும், அதற்காகவே இணைப்புக் குழு கூட்டத்தைக் கூட்டுமாறு அழைப்பு விடுத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழரசுக் கட்சியின் செயற்பாட்டில் அதிருப்தி கொண்டுள்ள ஏனைய 3 கட்சிகளும் தனித்து இயங்குவது குறித்து தேர்தலின் பின்னர் தீவிரமாகச் சிந்தித்து வருவதாகவும் அதுபற்றி அவர்கள் கலந்துரையாடியதாகவும் முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ஐ.நா பொதுச் சபைக் கூட்டத் தொடரில் ஜனாதிபதி ஆற்றிய உரை !

பயங்கரவாதம் என்பது, உலகளாவிய அச்சுறுத்தல் என்பதோடு, அதனை வெற்றிகொள்ள வேண்டுமாயின், விசேடமாகப் புலனாய்வுத் தகவல்களைப் பரிமாறிக்கொள்வதற்கு, ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com