ஐ.பி.எல். தொடரில் சென்னை இருக்காது; தோனி இருப்பார்!

சென்னை அணியின் நிர்வாகியாக இருந்த குருநாத் மெய்யப்பன் சூதாட்டத்தில் ஈடுபட்டதையடுத்து, அவருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. அதேபோல், சென்னை அணிக்கும் 2 ஆண்டுகள் ஐ.பி.எல். தொடரில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டது.
இதனால் வரும் 2016, 17-ம் ஆண்டுகளுக்கான ஐ.பி.எல். தொடரில் சென்னை அணி இடம் பெறாது. அதேபோல் ராஜஸ்தான் அணிக்கும் தடை விதிக்கப்பட்டிருப்பதால், அந்த அணியும் இரு ஆண்டுகளுக்கு ஐ.பி.எல். தொடரில் தலைகாட்ட முடியாது. இந்த இரு அணிகளுக்கும் பதிலாக இரண்டு மாற்று அணிகளை உருவாக்க ஐ.பி.எல். நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 

இந்நிலையில் , சென்னை அணியின் கேப்டன் தோனி நேற்று  இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் தலைவரும் சென்னை அணியின் முன்னாள் நிர்வாகியுமான ஸ்ரீனிவாசனின் பங்களாவுக்குச் சென்றார். அவரது வீட்டில் காலை உணவு அருந்திய தோனி, சில முக்கியமான விவகாரங்களை ஸ்ரீனிவாசனுடன் பேசியதாகத் தெரிகிறது. சுமார் 45 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடந்தது. 

இந்தச் சந்திப்பின்போது,  தற்போதையை நிலையில் தோனி சென்னை அணியை விட்டு விலகி அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு வேறு ஐ.பி.எல். அணியில் விளையாட முடிவு செய்திருப்பதாகவும், இதுகுறித்து நேரில் பேசவே ஸ்ரீனிவாசனை அவர் நேரில் சந்தித்தாகவும் கூறப்படுகிறது. இரண்டு ஆண்டு காலம் சென்னை அணி விளையாட முடியாமல் போனால், தோனி மட்டுமல்ல அணியில் உள்ள அனைத்து வீரர்களுமே பாதிக்கப்படுவார்கள்.

சென்னை அணியில் பிரன்டென் மெக்கல்லம், சுரேஷ் ரெய்னா, அஸ்வின் போன்ற இன்னும் பல நட்சத்திர வீரர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரையுமே விடுவிப்பது குறித்து தோனியிடம் ஸ்ரீனிவாசன் விவாதித்தாகத் தெரிகிறது.  ஆனால் அதே வேளையில் தடைக் காலம் முடிந்த பின்னர், விடுவித்த வீரர்களை  மீண்டும் அணிக்கு கொண்டுவருவது, அதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் குறித்தும் தோனியுடன் ஸ்ரீனிவாசன் விவாதித்துள்ளார். 

இரு ஆண்டு காலத்துக்கு தோனி, மெக்கல்லம் உள்ளிட்ட வீரர்களை விடுவிப்பதுதான் நல்லது என்பதை ஸ்ரீனிவாசன் உணர்ந்திருப்பதாகவே தெரிகிறது. ஏனென்றால் தோனி, மெக்கல்லம் போன்றவர்கள் விளையாட முடியாத பட்சத்தில் ஐ.பி.எல். தொடரே சுவாரஸ்யத்தை இழந்துவிட வாய்ப்பிருக்கிறது என்பதையும் அவர் உணர்ந்திருப்பதாகக்  கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com