சற்று முன்
Home / பிரதான செய்திகள் / ஐ.நா அறிக்கை தமிழர்களுக்கு இன்னொரு வாய்ப்பு – தமிழ்த் தலைமைகள் ஒன்றுபட்டு அதை அணுகவேண்டும் – பொது இணக்கத்திற்கு டக்ளஸ் தேவானந்தா அழைப்பு !

ஐ.நா அறிக்கை தமிழர்களுக்கு இன்னொரு வாய்ப்பு – தமிழ்த் தலைமைகள் ஒன்றுபட்டு அதை அணுகவேண்டும் – பொது இணக்கத்திற்கு டக்ளஸ் தேவானந்தா அழைப்பு !

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகத்தின் இலங்கை தொடர்பான அறிக்கையை தமிழ் மக்களின் இழப்புக்கள் மற்றும் பாதிப்புகளுக்குப் பரிகாரம் காணவும், உண்மைகள் கண்டறியப்படவும், உரிய நியாயம் கிடைக்கவும் மற்றும் அரசியல் தீர்வுக்கான வாய்ப்பாகவும், தமிழ்த் தலைமைகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.கடந்தகாலத்தில் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ள இவ்வாறு கிடைக்கப்பெற்ற பல நல்ல வாய்ப்புக்களை தமிழ்த் தலைமைகள் தவறவிட்டுள்ளனர் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி( ஈ.பி.டி.பி) யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகம் விடுத்துள்ள, இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான அறிக்கை குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணைகள் சர்வதேசப் பங்களிப்புடன் ஒரு உள்ளகப் பொறிமுறையூடாக முன்னெடுக்கப்பட வேண்டுமென அந்த அறிக்கை பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்களாகிய நாம் சர்வதேச விசாரணையா? அல்லது உள்ளக விசாரணையா? என்ற தேவையற்ற தர்க்கத்தில் ஈடுபட்டுக் காலத்தை வீணடித்து விடக்கூடாது. ஏனென்றால் முன்னர் அரசியல் வழிமுறைப் போராட்டங்கள், ஆயுத வழிமுறைப் போராட்டங்கள் என்பவற்றைக் கடந்து இந்தத் தமிழ் மக்கள் அரசியல் அனாதைகளாக நிற்கின்றார்கள்.

இந்தச் சந்தர்ப்பத்தில் தமிழ் மக்களுக்குக் கிடைக்கப்பெற்றுள்ள இன்னொரு வாய்ப்பாகவே மனித உரிமைகள் ஆணையகத்தின் அறிக்கை வெளிவந்துள்ளது. இந்த அறிக்கையை தமிழ் மக்களின் தலைமைகள் மற்றும் சமூகப் பிரதிநிதிகள் சரியான வகையில் அணுக வேண்டும்.

அப்போதுதான் தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைக்கச் செய்யவும், உண்மைகள் கண்டறியப்படவும், இழப்புக்கள், பாதிப்புக்களுக்கு உரிய பரிகாரம் காணவும், அரசியல் அபிலாசைகளை அடைந்துகொள்ளும் கௌரவமான தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ளவும் முடியுமாக இருக்கும்.

விசாரணைகளுக்கான பொறிமுறை எவ்வாறானதாக அமைந்தாலும் அதில் தமிழ் மக்களின் அரசியல் மற்றும் கலாசாரங்களோடு நெருக்கமான உறவையும், தொடர்பையும் கொண்டிருக்கும் இந்திய அரசும் உள்வாங்கப்பட வேண்டும். அப்போதுதான் நீடித்த நிலையான தீர்வொன்றைத் தமிழ் மக்கள் பெற்றுக்கொள்ள முடியும்.

ஆகவே, தற்போதைய முக்கியமான காலகட்டத்தை தமிழ்த் தலைமைகள் ஆளுக்கொரு பக்கமாக நின்று விமர்சிப்பதாலோ, விவாதிப்பதாலோ நன்மையேதும் இங்கே நடந்துவிடாது. எனவே, அரசியல் மற்றும் இதர பேதங்களைக் கடந்து தமிழ் அரசியல் தலைமைகள் பொது இணக்கப்பாட்டுடன் ஒன்றுபட்டு ஐநாவின் பொறிமுறையை எவ்வாறு முன்னெடுப்பது என்பதைத் தீர்மானிக்க வேண்டும்.

இந்த அவசியமான முயற்சிக்கு சக தமிழ் அரசியல் கட்சிகள், தமிழ் மக்களின் நலன்சர்ந்து செயற்படும் அனைத்துப் பொது அமைப்புக்கள் ஆகியோரை பொது இணக்கப்பாடொன்றுக்கு வருவமாறு தமிழ் மக்களின் சார்பாகப் பகிரங்க அழைப்பு விடுக்கின்றேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ஐ.நா பொதுச் சபைக் கூட்டத் தொடரில் ஜனாதிபதி ஆற்றிய உரை !

பயங்கரவாதம் என்பது, உலகளாவிய அச்சுறுத்தல் என்பதோடு, அதனை வெற்றிகொள்ள வேண்டுமாயின், விசேடமாகப் புலனாய்வுத் தகவல்களைப் பரிமாறிக்கொள்வதற்கு, ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com