ஐ.நாவின் செயற்பாடு இலங்கைக்கு திருப்தி: ஜனாதிபதி தெரிவிப்பு

இலங்கையில் கடந்த ஆட்சியில் இருந்த அரசு ஐக்கிய நாடுகள் சபைக்குச் சவால்விடுத்து உறவுகளைச் சேதப்படுத்தி இருந்தது. தற்போதைய அரசு ஐ.நா. உட்பட சர்வதேசத்தின் முக்கிய தரப்புகளுடன் நட்புறவை மீளக்கட்டியெழுப்பி வருகின்றது. இலங்கையில் அபிவிருத்தி மற்றும் மனிதாபிமானச் செயற்பாடுகளில் பங்காளியாக உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாடுகள் தொடர்பில் நாம் முழுமையான திருப்தி அடைகின்றோம்.” இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

மனித உரிமைகளைப் பேணுதல் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் ஆகியன ஐக்கிய நாடுகள் சபையின் பிரதான நோக்கங்களாக இருக்கின்றன. இவற்றைப் பூரணமாக பொறுப்புடன் நிறைவேற்ற இலங்கை தயாராக இருக்கின்றது என்றும் அவர் உறுதியளித்தார். ஐக்கிய நாடுகள் சபையின் 70ஆவது வருட நிகழ்வு மற்றும் உறுப்புநாடு என்ற வகையில் இலங்கை இணைந்து 60 ஆவது வருட நிகழ்வு நேற்றுக் கொழும்பில் உள்ள ஐ.நா. அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்திரிபால மேற்கண்டவாறு கூறினார்.

கடந்த அரசின்போது தாம் அமைச்சராக இருக்கையில் நடைபெற்ற சம்பவத்தையும் இதன்போது ஜனாதிபதி கூறியதுடன் முன்னைய அரசில் அமைச்சராக இருந்த ஒருவர் ஐ.நா. தலைமைக்காரியாலயத்துக்கு முன்பாக உண்ணாவிரதம் இருந்தததையும், அவருக்கு முன்னாள் ஜனாதிபதி இளநீர் பருக்கியதையும் நினைவுபடுத்தினார். இப்படியாக நாம் ஐ.நா. நட்புறவை சேதமாக்கியிருந்தோம். கடந்த 10 மாதங்களில் இந்த நட்புறவை மீண்டும் கட்டியெழுப்ப முனைந்ததையிட்டு நாம் மிக்க மகிழ்ச்சியடைகின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அவர் தனது உரையில் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு நீண்டகால உறுப்பினராக இலங்கை இருப்பதோடு அண்மையில் நாங்கள் ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினராகிய 60ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடியிருக்கின்றோம். எனவே, இந்த ஐக்கிய நாடுகள் தினத்தில் இங்கு உரையாற்றுவதையிட்டு நான் பெருமையடைகின்றேன். ஒரு உறுப்பு நாடு என்றவகையில் இலங்கை இந்த அமைப்பில் செயல்திறமும் பொறுப்பும் வாய்ந்த ஒரு பாத்திரத்தை வகித்து வருகிறது. ஐக்கிய நாடுகள் சபை ஸ்தாபிக்கப்பட்டு 70 வருடங்கள் ஆன நிலையிலும் இலங்கை அதில் உறுப்பினராகி 60 வருடங்கள் பூர்த்தியாகியிருக்கின்றது.

கடந்த மாதம் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் நான் உரையாற்றியவேளையில் குறிப்பிட்டதுபோல் இலங்கை ஒரு தேசமாக ஐக்கிய நாடுகள் சபையினுடைய சாசனம், சர்வதேச மரபுகள் மற்றும் கொள்கைகளை மதிக்கின்றது. மனித உரிமைகளைப் பேணுதல் மற்றும் பாதுகாப்பினை உறுதிப்படுத்துதல் ஆகியன ஐக்கிய நாடுகள் சபையின் பிரதான நோக்கங்களாக இருக்கின்றது. இவற்றைப் பூரணமாகப் பொறுப்புடன் நிறைவேற்ற இலங்கை தயாராக இருக்கின்றது. இதன் பிரகாரம் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கு நாம் இலங்கையில் ஒரு புதிய நிகழ்ச்சித் திட்டத்தையும் செயற்திட்டத்தையும் நடைமுறைப்படுத்த எண்ணியுள்ளோம்.

இலங்கை ஐக்கிய நாடுகள் சபையில் ஒரு பன்முகத்தன்மையான பங்கு வகிக்கிறது. 1960களில் தொடங்கிய ஐ.நா. அமைதி காக்கும் பணிக்காக நம்முடைய பங்களிப்பு தொடர்கின்றது. எதிர்காலத்திலும் ஐ.நா. அமைதி காக்கும் பணிக்கு எமது அர்ப்பணிப்புமிக்க பங்களிப்பை மேலும் அதிகரிக்க நாம் எதிர்பார்த்துள்ளோம். நாட்டுக்கான எம்முடைய புதிய குறிக்கோளானது நிலையான வளர்ச்சி மற்றும் நல்லிணக்கம் ஆகிய இரட்டை நோக்கங்களை அடைவதற்கானதாகவே காணப்படுகின்றது. இது இந்தச் சூழலில் அடிப்படை தேவையாக இருக்கின்ற நேர்மையாக கடந்த காலத்தினை கையாள்வதனூடாக ஒரு நவீன இலங்கை தேசத்தைக் கட்டியெழுப்பும் நோக்கத்தைக் கொண்டது.

சமூக ஜனநாயகத்தின் பாதையைப் பின்பற்றி, இலங்கை மோதல் ஆண்டுகளில், மனிதவள மேம்பாட்டு குறியீட்டு உயர்ந்த இடத்தில் வைத்திருப்பதில் வெற்றி அடைந்துள்ளது. இந்த வெற்றியை ஐக்கிய நாடுகள் சபையின் புத்தாயிரம் ஆண்டு வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கான நமது உறுதிப்பாட்டுக்கான சான்றாகும்.

இலங்கை அரசு முன்னுரிமை ரீதியில் வரையறுக்கும் செயற்திட்டங்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் உதவியைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு 2012ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபைக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் ‘2013 – 2017 ஐ.நா. அபிவிருத்தி உதவி கட்டமைப்பு’ உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டது. இதனூடாக புத்தாயிரமாம் ஆண்டில் நிலையான அபிவிருத்தி மற்றும் தரமான சமூகசேவையினை வழங்கும் பொருட்டு உள்ளக பொருளாதார வளர்ச்சி, மனித திறன்கள் மற்றும் நல்லிணக்கததை பலப்படுத்துவதனூடாக சமாதானத்தை உறுதிப்படுத்துதல் ஆகியவற்றை அடைந்துகொள்ள எதிர்பார்க்கப்பட்டது.

இலங்கையர்களுக்கு ஒரு சிறந்த வாழ்க்கையை வழங்கும் பொருட்டு சமூக,பொருளாதார, மனிதாபிமான மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றில் உள்ள சவால்களை இனங்கண்டு அதுதொடர்பான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்காக இலங்கையில் அபிவிருத்தி மற்றும் மனிதாபிமான செயற்பாடுகளில் பங்காளியாகக் செயற்படும் ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாடுகள் தொடர்பில் நாம் முழுமையான திருப்தி அடைந்திருக்கின்றோம்- என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com