ஐ.தே.க விற்கு துரோகமிழைப்பது மைத்திரிக்கு களங்கம் – இராஜாங்க கல்வி அமைச்சர் இராதாகிருஸ்ணன்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கிராமத்தில் இருந்து படிப்படியாக உயர்ந்து இந்த நிலையை அடைந்தவர். எனவே அவர் ஒரு பொழுதும் அவரை ஜனாதிபதியாக்கிய ஜக்கிய தேசிய கட்சிக்கு துரோகம் செய்ய மாட்டார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது. அவர் ஜக்கிய தேசிய கட்சிக்கு துரோகம் செய்தால் அது அவருடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திவிடும். இவரும் வழமையான ஒரு ஜனாதிபதியாக மாறிவிடுவார் என கல்வி இராஜாங்க அமைச்சரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10ம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் “யானை” சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு தேடும் முகமாக உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரசாரக் கூட்டம் 28.01.2018 அன்று ஞாயிற்றுகிழமை 12 மணிக்கு அட்டன் டன்பார் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்று உள்ளுராட்சி மன்றங்களின் அமைச்சர் பைசர் முஸ்தபா நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச சபைகள் அதிகரிப்பதற்கு காரணம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்ற ஒரு பொய்யான செய்தியை கூறியிருக்கின்றார். இதனை எங்களுடைய மக்கள் ஏற்றுக் கொள்வார்களா?

அவர்கள் பதவியில் பலத்தோடு இருந்த பொழுது செய்ய முடியாத விடயத்தை தமிழ் முற்போக்கு கூட்டணி இன்று ஒரு குறுகிய காலத்தில் செய்திருக்கின்றது. இதனை பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள். அல்லது தாங்களால் பிள்ளையை பிரசவிக்க முடியாதவர்கள் மற்றவர்களின் பிள்ளைக்கு பெயர் வைத்து இது தங்களுடைய பிள்ளை என மார்தட்டிக் கொள்ள முயற்சி செய்வது எந்தளவிற்கு அவர்களுடைய அரசியல் பின்னடைவை சந்திருக்கின்றது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்;.

இந்த உள்ளுராட்சி மன்ற தேர்தல் காரணமாக கட்சிகள் பல்வேறு பொய்யான விடயங்களை மக்களிடம் கூறி வருகின்றார்கள். அது மட்டுமல்லாமல் ஒரு சிலர் பகல் கனவு கண்டு கொண்டிருக்கின்றர்கள். ஜனாதிபதியும் பிரதமரும் இந்த தேர்தலின் பின்பு வெவ்வேறு பாதைகளில் பயணிப்பார்கள் என்று. அது ஒரு பொழுதும் நடக்காது. ஜனாதிபதியும் பிரதமரும் இணைந்து நல்லாட்சியை முன் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகவே மக்கள் கடந்த இரண்டு தேர்தல்களிலும் ஆணையை வழங்கியிருக்கின்றார்கள். அதனை இரண்டு தலைவர்களும் மீற முடியாது. அது மக்களுடைய தீர்ப்பு அதனை மாற்ற வேண்டுமானால் மீண்டும் மக்களுடைய தீர்ப்பை பெற வேண்டும்.

நான் ஒரு பொழுதும் எதிர்கட்சி அரசியல்வாதிகளை விமர்சித்தது கிடையாது.ஆனால் இன்று ஒரு சிலர் கூறுகின்ற பொய்களை பார்க்கின்ற பொழுது நாங்கள் அமைதியாக இருந்தால் அது உண்மையாகிவிடும் என்ற காரணத்தினால் நான் சில விடயங்களை கூற வேண்டும். நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச சபைகளை அதிகரிக்க முழுமையான முயற்சியை மேற்கொண்டது தமிழ் முற்போக்கு கூட்டணி என்பதை அனைவரும் அறிவார்கள்.ஆனால் இன்று ஒரு சில அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் எத்தனைவிதமான பொய் கூறுகின்றார்கள்.இதனை பார்க்கின்ற பொழுது சிறிப்பதா?அழுவதா?என்ற புரியவில்லை.

கடந்த மகிந்த ராஜாபக்ச ஆட்சி காலத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரதேச சசபைகளை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்த பொழுது அதற்கு மகிந்த ராஜாபக்ச இணக்கம் தெரிவிக்கவில்லை.மாறாக அப்ப செய்தால் நிர்வாக ரீதியாகவும் பண ரீதியாகவும் அரசாங்கத்திற்கு பாரிய சிக்கல் ஏற்படும் என்பதை காரணம் காட்டி அதனை செய்ய முடியாது என கூறினார்.அதற்கு பதிலாக கிராம சேவகர் பிரிவுகளை அதிகரிப்பதாக கூறி கிராம சேவகர் பிரிவுகளை அதிகரித்தார்கள்.

ஆனால் நாங்கள் தமிழ் முற்போக்கு கூட்டணி பிரதமரிடம் இதனை தௌிவாக கூறி அவர் அதனை நன்கு புரிந்து கொண்டு இந்த பிரதேச சபைகளை அதிகரிக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார்.எனவே இதனுடைய முழுமையான பாராட்டுதல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹவையே சாரும்.இன்று பலரும் தன்னுடைய குழந்தை என்று கூறலாம்.ஆனால் குழந்தையை பிரசவித்தவர்கள் தமிழ் முற்போக்கு கூட்டணி என்பதை அவர்கள் மறந்து விடக் கூடாது.

குழந்தை பிறந்ததும் பலரும் பாராட்டி சீராட்டி குழந்தை அழகாக இருக்கின்றது என்று கூறுவது வழமை. ஆனால் அந்த குழந்தையை பிரசவித்த தாய்க்கு மட்டுமே அதன் வழி தெரியும்.அதனை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.நீங்கள் குழந்தையை தூக்கி கொஞ்சு விளையாடுங்கள் ஆனால் அதற்கு உரிமை கோர முடியாது.எங்களுடைய முயற்சியால் பிரதேச சபைகளை அதிகரித்திருக்கின்றௌம்.

அதற்கு உங்களுடைய உறுப்பினர்களையும் தெரிவு செய்து கொள்ளுங்கள் நாங்கள் எதிர்க்கவில்லை ஆனால் பொய்யான விடயங்களை கூறி மீண்டும் எங்களுடைய மக்களை ஏமாற்ற நினைத்தால் நீங்களே உங்களை ஏமாற்றிக் கொள்வதற்கு அது சமனாகிவிடும்.

மக்களை ஏமாற்றி செய்கின்ற அரசியலை விட்டுவிட்டு இனியாவது மக்களுக்கான உண்மையான சேவைகளை செய்ய முயற்சி செய்யுங்கள்.கடந்த காலங்களில் நீங்கள் செய்த சேவைகளை நாங்கள் மறுக்கவில்லை எனவே அதே போல இதனையும் ஏற்றுக் கொள்ளுங்கள்.எல்லா எமது மக்களுக்காகவே என்று சிந்திங்கள்.அதனைவிடுத்து குறுகிய அரசியல் நோக்கத்திற்காக இவ்வாறான பொய்யான தேர்தல் பிரசாரத்தை முன்னெடுக்காதீர்கள். 33 வது பிரதேச சபைகள் சட்ட மூலத்தின்படி பிரதேச சபைகள் ஊடாக தோட்ட பகுதிகளுக்கு நிதி ஒதக்கீடு செய்ய முடியாது என்ற ஒரு நிலைமை இருந்தது.ஆனால் அந்த நிலையை மாற்றி பெருந்தோட்டங்களுக்கும் பிரதேச சபைகள் மூலமாக நிதி ஒதுக்கீடு செய்ய முடியும் என்பதையும் சட்டமாக கொண்டு வந்தது தமிழ் முற்போக்கு கூட்டணி என்பதை நான் இந்த நேரத்தில் சுட்டிக் காட்ட விரும்புகின்றேன்.

எனவே அமைச்சர் பைசர் முஸ்தபாவும் இலங்கை தொழிலாளர் காங்கிரசும் இணைந்து அரங்கேற்றவுள்ள இந்த நாடகம் தோல்விலேயே முடிவடையும் எனவே அதற்காக காலத்தை செலவு செய்யாதீர்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com