ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிந்தது பிரிட்டன்

Great Britain and EU, Brexit referendum concept

Great Britain and EU, Brexit referendum concept

இங்கிலாந்து எனப்படும் பிரிட்டன், உலகின் மிகப்பெரிய பொருளாதார சக்தியாக உருவாகியுள்ள அமெரிக்கா, வளர்ந்து வரும் இந்தியா உட்பட 52 நாடுகளை ஆண்டிருக்கிறது என்பது வரலாறு. இத்தகைய மாபெரும் வரலாறு கொண்ட இங்கிலாந்து இன்று, ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறுவதற்கு முடிவு செய்திருக்கிறது. அவ்வாறு வெளியேறலாமா வேண்டாமா என தனது நாட்டு மக்களிடமே வாக்கெடுப்பு நடத்தியதில், வெளியேறுவதை ஆதரித்து அதிகமானோர் வாக்களித்துள்ளனர்.

உலகை ஆண்ட இங்கிலாந்து எதற்காக விடுதலையை கேட்கிறது?

இரண்டாம் உலகப் போருக்குப் பின் 1945-57 காலகட்டத்தில் தொழில் மற்றும் வர்த்தகம் தொடர்பான கூட்டமைப்பாக, ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நாடுகள் ஒன்றிணையத் தொடங்கின. இங்கிலாந்து, ஜெர்மன், இத்தாலி மற்றும் கிரீஸ் உட்பட 28 நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பு நாடுகளாக உள்ளன.

அந்த நாடுகள் தங்களுக்குள் வர்த்தகம், தொழில் கொள்கைகளை வகுத்து அதற்கேற்ப ஒன்றிணைந்து ஒரே கூட்டமைப்பாக செயல்படுகின்றன. யூரோ என்ற பொது கரன்சியை, ஐரோப்பிய யூனியன் நாடுகள் பயன்படுத்துகின்றன, ஒரே ஒரு நாட்டைத் தவிர. ஐரோப்பிய யூனியனின் உறுப்பு நாடுகளின் மக்கள், ஐரோப்பிய யூனியனில் இடம்பெற்றுள்ள நாடுகளுக்குள் விசா இன்றி பயணம் செய்யவும், எந்த நாட்டிலும் தங்கி பணியாற்றவும் முடியும்.

பிரிட்டனுக்கு என்னதான் பிரச்னை?

ஆரம்பத்திலிருந்தே, ஐரோப்பிய யூனியனில் இருந்து தனித்து செயல்படுவதை இங்கிலாந்து வழக்கமாக வைத்திருந்தது. எனவேதான் யூரோ நாணயத்தை ஏற்காமல் தன்னுடைய பவுண்ட் நாணயத்தையே பயன்படுத்தி வந்தது.

மேலும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில், வலுவான நாடுகள் என்று பார்த்தால் இங்கிலாந்து, ஜெர்மனி, உள்ளிட்ட சில நாடுகள் உள்ளன. இவை தவிர பிற நாடுகளில் அதிக அளவிலான வேலை வாய்ப்புகளோ, தொழில் வளமோ, வளர்ச்சியோ இல்லை. இந்த நிலையில் இந்த நாடுகள் ஒட்டுமொத்த ஐரோப்பிய ஒன்றியத்தின் சுமையையும் சுமக்க வேண்டியிருந்தது.

பிரிட்டனில் கணிசமான தொழில் மற்றும் வர்த்தக வாய்ப்புகள் இருப்பதால் வேலைவாய்ப்புகள் அதிகளவில் உள்ளன. இதனால் ஐரோப்பிய யூனியனில் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பல நாடுகளில் இருந்தும் மக்கள் பிரிட்டனுக்குப் புலம்பெயர்ந்து வருகின்றனர். இதனால் பிரிட்டனின் சொந்த மக்களுக்கு அவர்களுடைய நாட்டிலேயே வேலைவாய்ப்புகள் மற்றும் வர்த்தக வாய்ப்புகள் குறையத் தொடங்கின. இதனால் பிரிட்டன் மக்கள், வெளிநாட்டினர் தங்களுடைய வாய்ப்புகளைப் பறிப்பதை விரும்பவில்லை. இதன் விளைவுதான் பிரிட்டன் வெளியேற்றம்.

பிரெக்ஸிட், வெற்றியடைந்த பிரிட்டன்!

இங்கிலாந்து பிரதமராக கேமரூன் பதவி ஏற்றப் பிறகு, கடந்த பிப்ரவரி மாதத்தில் ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறுவது குறித்த விவாதம் தொடங்கியது. அப்போதே அதற்கான வாக்கெடுப்பு ஜூன் 23 ம் தேதி என்று குறிக்கப்பட்டது. அதன்படி ஜூன் 23 அன்று (நேற்று) வாக்கெடுப்பு நடந்தது.

இதில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கு ஆதரவு தெரிவித்து, பிரிட்டன் வாக்காளர்கள் 1 கோடியே 57 லட்சம் பேர் வாக்களித்திருக்கின்றனர். இறுதியாக பிரிட்டன் ஐரோப்பிய யூனியனிலிருந்து வெற்றிகரமாக வெளியேறிவிட்டது. அது எதிர்பார்த்த விடுதலையை அடைந்துவிட்டது.

51.8 சதவிகிதம் பிரிட்டன் மக்கள் வெளியேறலாம் என்றும், 48.2 சதவிகிதத்தினர் வெளியேற வேண்டாம் என்றும் வாக்களித்துள்ளனர். வாக்கு சதவிகிதம் வித்தியாசம் மிகக்குறைந்த அளவே இருந்தாலும், பெரும்பான்மை அடிப்படையில் பிரிட்டன் வெளியேறுவது உறுதியாகிவிட்டது.

ஆனால்… இது எல்லோருக்கும் மகிழ்ச்சியான செய்தியா?

பிரிட்டனின் இந்த வெற்றி யாருக்கும் மகிழ்ச்சிகரமான செய்தியாக இல்லை. ஐரோப்பிய கூட்டணியில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதால் அந்த நாடுகளுக்கிடையில் மிகப்பெரிய வர்த்தக மற்றும் பொருளாதார இடைவேளி உருவாகும். மேலும் நாடுகளுக்கிடையே எல்லை பிரச்சனை, புலம்பெயர்ந்தவர்கள் பாதிப்பு, பாதுகாப்பு போன்ற பல பிரச்னைகள் உருவாகும்.

மேலும் நாணய பரிமாற்றத்தில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். இதனால் பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய சந்தையில் இருந்து இந்திய சந்தையில் செய்யப்படும் முதலீட்டு அளவுகள் கடுமையாகப் பாதிக்கப்படும். உலக நாடுகளின் ஏற்றுமதி வர்த்தகத்தில் பாதிப்பு ஏற்படும்.

உலகச் சந்தைகள் ஆட்டம் கண்டுள்ளன. ஆசியச் சந்தைகள் அனைத்தும் இன்றைய வர்த்தகத்தில் கடும் சரிவை சந்தித்துள்ளன. அதிகபட்சமாக 11.30 மணி அளவில் இந்தியச் சந்தைகள் சென்செக்ஸ் 3.7 சதவிகிதமும், நிஃப்டி 3.8 சதவிகிதம் சரிந்துள்ளன.

ஹாங்செங், ஷாங்காய், டவ்ஜோன்ஸ் உட்பட அனைத்து ஆசியச் சந்தைகளும் வீழ்ச்சி கண்டுள்ளன. அதிகபட்சமாக நிக்கி 8.60 சதவிகிதம் வீழ்ச்சி கண்டுள்ளது.

 

பிரிட்டனிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களின் விலையும் அதிகமாக இருக்கும். இதனால் பணவீக்கம் அதிகரித்துப் பவுண்ட் நாணயத்தின் மதிப்பு 15-20 சதவீதம் வரை கடுமையாகப் பாதிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

இதனால் உலக நாடுகளின் நாணய பரிமாற்றத்தில் ஸ்திரத்தன்மை சீர்குலையும் என்பதால் நிச்சயம் உலகச் சந்தைகளில் இது எதிரொலிக்கும். பொருளாதாரம், பங்குச் சந்தை இரண்டிலும் இதன் தாக்கம் தெரியும்.

இன்று மட்டும் மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் கிட்டத்தட்ட 1000 புள்ளிகள் இறங்கியுள்ளது. இது மேலும் தொடர வாய்ப்புள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com