சற்று முன்
Home / செய்திகள் / ஐந்து கட்சிக் கூட்டுத் தீர்மானத்தை மீறி தமிழரசுக் கட்சி சஜித்துடன் இரகசியத் தொடர்பு

ஐந்து கட்சிக் கூட்டுத் தீர்மானத்தை மீறி தமிழரசுக் கட்சி சஜித்துடன் இரகசியத் தொடர்பு

எதிர்வரும் நவம்பர் பதினாறாம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள உள்ள நிலையில் தேர்தலில் போட்டியிடுகின்ற மூன்று முக்கிய வேட்பாளர்கள் மற்றும் வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கும் தமிழ் மக்களின் பிரதான கோரிக்கைளான அரசியல் தீர்வு,அரசியல் கைதிகள் விடுதலை,காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் உட்பட 13 தீர்மானங்களை ஜந்து கட்சிகளும் மதத்தலைவர்களும் ஒன்றிணைந்து வடக்கு-கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுடைய தலைமையில் முக்கிய தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டு இன்னும் சில நாட்களில் வேட்பாளர்களிடம் கையளிக்கப்பட இருக்கின்றது.

இந் நிலையில் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறின கதையாக தமிழரசுக் கட்சினுடைய பாராளுமன்ற உறுப்பினர்கள் மேற்குறிப்பிட்ட பதின்மூன்று கூட்டு தீர்மானங்களை நீர்த்துபோக செய்யும் வகையில் தன்னிச்சையாகவும் இரகசியமாகவும் சஜித் பிரேமதாசாவை ஆதரிக்கவேண்டும் என்று தேர்தல் வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்கள்.இவர்களின் இவ் நடவடிக்கையானது சம்பந்தன்,மாவைசேனாதிராசா போன்றவர்களின் ஆலோசனையிலும் வழிகாட்டலிலுமே நடைபெறுகின்றது என நம்பத் தகுந்த வட்டாரங்கள் மூலம் தெரியவருகிறது.

கடந்த காலங்களில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களிலும் நிபந்தனையற்ற ஆதரவை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வழங்கியதன் விளைவினால் தமிழ் மக்கள் இன்று நட்டாற்றில் விடப்பட்டுள்ளார்கள்.

காலத்தின் தேவையறிந்து தேசியத்தின்பால் நிற்கின்ற அனைத்து தமிழ் கட்சிகளையும் ஒன்றிணைத்து ஒரு பொது இணக்கப்பாட்டின் கீழ் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்மானங்களாக நிறைவேற்றி அதை பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களிடமும் இராஜதந்திரிகளிடமும் கையளிப்பதற்கு வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள்,மதத்தலைவர்கள் மற்றும் புத்திஜீவிகள் எடுத்த முயற்சி அளப்பரியது ஆகும். இவ் முயற்சிக்கு ஒட்டு மொத்த வட-கிழக்கு வாழ் தமிழ் மக்களிடமிருந்தும் பெரும் வரவேற்பும் ஆதரவும் கிடைத்திருக்கின்றது.ஆனால் தமிழரசுக் கட்சியின் தன்னிச்சையான இவ் நடவடிக்கையானது பல்கலைக்கழக மாணவர்களையும் புத்திஜீவிகளையும் செல்லாக் காசக்கி மறுபடியும் தமிழ் மக்களின் தலையில் மண்ணை அள்ளி போடும் வேலையில் இறங்கியுள்ளார்கள் என்பது தெளிவாகின்றது.

ஜக்கியத்தை கட்டியெழுப்புவதற்கு பல்கலைக் கழக மாணவர்களினதும் சமயத்தலைவர்கள் மற்றும் புத்திஜீவிகளினதும் ஏற்பாட்டில் ஜந்து கட்சிகளும் சேர்ந்து எடுத்த தீர்மானங்களிலிருந்து தமிழரசுக் கட்சியினர் விலகி கடந்த முறைபோன்று நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதற்கு திரைமறைவில் இவர்கள் செயற்பட்டால் இவ் கூட்டு அமைவதற்கு காரணமாகவிருந்தவர்கள் அடுத்துவரும் தேர்தல்களிற்கு முன்பாக இவர்களை மக்கள் முன்னிலையில் அம்பலப்படுத்தவேண்டும்.

மேலும் ஐக்கியத்தின் மூலமே எமது உரிமைகளை வென்றெடுக்க முடியும் என பல்கலைக் கழக மாணவர்கள்,சமயத்தலைவர்கள்,புத்திஜீவிகள் எடுத்த இவ் முயற்சி தொடரவேண்டும் என்பதே ஒட்டுமொத்த தமிழ் மக்களினது எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com