ஏழு அம்ச கோரிக்கையை முன் வைத்து லங்கா சித்த ஆயர்வேத மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பகிஸ்கரிப்பு

sitha-medicineலங்கா சித்த ஆயர்வேத மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஏழு அம்ச கோரிக்கையை முன் வைத்து , கடந்த மாதம் 4ம திகதி முதல் வகுப்பு பகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக தாம் போராட்டத்தை நடாத்தி வரும் போதும் , தமது கோரிக்கைகள் தொடர்பில் எவரும் கவனம் செலுத்தவில்லை எனவும் , இது தொடர்பில் வடமாகாண முதலாமைச்சர் மற்றும் சுகாதார அமைச்சரை சந்தித்த போதிலும் அவர்களும், உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை என மாணவர் தரப்பில் குற்றம் சாட்டப்படுகின்றது. அதேவேளை வடமாகாண சுதேச மருத்துவ சபையில் உள்ள சிலர் தம்மை அச்சுறுத்தும் வகையில் செயற்படுவதாகவும் , நிர்வாகத்தின் குறைபாடுகளை எடுத்து சொல்லி நிஜாயம் கோரும் போது , கல்வி செயற்பாட்டில் , பழிவாங்கல் நடைபெறுவதாகவும் மாணவர்கள் தெரிவித்தனர்.

இவை குறித்து மாணவர்கள் ஊடகங்களுக்கு கையளித்துள்ள அறிக்கையில் ,

லங்கா சித்த ஆயர்வேத மருத்துவக் கல்லூரியில் அனைத்து மாணவர்களாலும் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டம் தொடர்பானது லங்கா சித்த ஆயர்வேத மருத்துவக் கல்லூரி மாணவர்களாகிய நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து கல்லூரி நிர்வாகத்தின் திருப்தியற்ற போக்கு மற்றும் பிழையான நடவடிக்கைகளைக் கண்டித்தும் பொறுப்பற்ற வடமாகாண சுதேச மருத்துவ சபையை மாற்றக் கோரியும் போராட்டம் ஒன்றைக் கடந்த 04.08.2016 முதல் முன்னெடுத்து வருகின்றோம் என்பதைதங்களின் கவனத்தின் கீழ் கொண்டுவருகின்றோம். இக்கல்லூரியின் 5வருட கற்கை நெறிக்காக தெரிவு செய்யப்பட்டு நாங்கள் கல்லூரியினுள் உள்வாங்கப் பட்ட போது (2010ம் ஆண்டில் இருந்து) இக் கல்லூரி அரசகல்லூரி எனவும் வைத்தியர் தகுதிக்கான பட்டம் பெற்றுத் தருவதாகவும், அரச துறையில் வைத்தியராக பணிபுரிய முடியும் எனவும் நம்பிக்கை அளித்து இக்கற்கை நெறிக்காக எவ்வித கட்டணமும் கட்டத் தேவையில்லை என வாக்குறுதி வழங்கியும் எம்மை இக் கல்லூரியில் இணைத்துக் கொண்டனர். ஆனால் இக்கல்லூரி சரியான விதி முறைகளுக்கு அமைவாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இந்நிலையில் கல்லூரி சம்பந்தமாக எமக்குச் சொல்லப்பட்ட அனைத்து விடயங்களும் கல்லூரி அங்கீகாரம், பாட நெறிக்கான அங்கீகாரம், அரசதுறையில் வைத்தியருக்கான வேலை வாய்ப்பு என்பன பற்றிய வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யானதாகவே இன்று அறியப்படுகின்றது. இது சம்பந்தமாக மாணவர்கள் பிரச்சினைகளுக்கான தீர்வைக் கேட்கும் சந்தர்ப்பங்களில் வாய்மொழி மூலமான குழப்பமான பதில்கள் வழங்கப்படவதுடன் அவ்வாறான கேள்வி கேட்கும் மாணவர்கள் பழிவாங்கப்படுகின்றனர். அத்துடன் இக்கல்லூரியில் 5வருடம் கற்று இறுதிப்பரீட்சையில் தோன்றி சித்தியடைந்து வெளியேறிய மாணவர்கள் கூட எதிர்கால நல்வாழ்க்கையை இழந்து பட்டமும் அங்கீகாரம் இன்றி அரச வைத்தியருக்கான சேவையில் இணைத்துக் கொள்ளப்படாமல் உள்ளனர். இந் நிலை எமது எதிர்காலம் கருதிய பேரச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மாணவர் மன்றத்தினூடாக இதற்கான விளக்கங்கள் பலதடவைகள் கேட்கப்பட்டும் வகுப்புப் புறக்கணிப்புக்கள் நடாத்தியும் நிர்வாகத்திடம் இருந்து எவ்வித சரியானபதிலும் விளக்கங்களும் மாணவர்களிற்கு இதுவரையில் வழங்கப்படவில்லை. கல்லூரியை தற்காலத்திற்கு ஏற்றாற்போல் மாற்றியமைக்க எவ்வித முயற்சியும் எடுக்கப்படாத நிலையில் இப்பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணவும், மாணவர்களாகிய எங்கள் எதிர்காலம் கருதியும், வெளியேறிய மாணவர்களின் நலன் கருதியும், புதிதாக இணையவுள்ள மாணவர்களின் நலன் கருதியும் மாணவர் மன்றத்தால் மாணவர் போராட்டம் ஒன்றை நடாத்தி வருகிறோம்.

இப் போராட்டத்தில் மாணவர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்

1 > கல்லூரியில் கற்பிக்கப்படும் பாடத்திட்டம் ஆயுள்வேத திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்டிருத்தல் வேண்டும்.

2 > இக்கல்லூரியில் இறுதியாண்டு கற்று வெளியேறிய மருத்துவமாணவர்களிற்கான உள்ளகப்பயிற்சி ஒழுங்கு செய்து தரப்படவேண்டும்.

3 > 5வருட கற்கைநெறி கற்று முடித்தபின் மேற்படிப்பை தொடர ஒழுங்கு செய்து தரப்பட வேண்டும்.

4 > நிறுத்தப்பட்ட அரச வேலைவாய்ப்பு பெற்றுத்தரபட வேண்டும்.

5 > கல்லூரியை இடம் மாற்றல் வேண்டும்.

6 > மருத்துவக் கல்லூரிக்கான அத்தியாவசியமான வளங்களை பெற்றுத்தர வேண்டும்.

7 > கல்லூரியின் வளர்ச்சியில் பொறுபற்ற அசமந்தப்போக்குடைய வடஇலங்கை சுதேச மருத்துவசபை மற்றும் கல்லூரி முதல்வர் மாற்றியமைக்கப்பட வேண்டும்.

இக் கோரிக்கைகள் அனைத்தும் நிறை வேற்றப்படும் வரை மாணவர் போராட்டமானது கால வரையறையின்றித் தொடரும் என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறோம். என அந்த ஊடக அறிக்கையில் குரிப்பிடப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com