எல்லாளனுக்கு நீதிகோரும் டக்ளஸ் தேவானந்தா

blogger-image-1173931580
இலங்கையின் அனுராதபுரத்தில் 44 ஆண்டுகளாக நீதி தவறாது ஆட்சி செய்த தமிழ் அரசன் என எல்லாளன் மன்னன் பற்றி மகாவம்சம் கூறுகின்றது. எல்லாளன் மன்னன், நீதி, நேர்மை தவறாது நல்லாட்சி நடத்தியதாகவும், எல்லாளன் – துட்டகைமுனு அரசர்களுக்கிடையேயான யுத்தத்தின்போது, துட்டகைமுனு மன்னன் வெற்றி பெற்ற போதிலும், துட்டகைமுனு மன்னன் எல்லாளன் மன்னனை ஒரு விரோதியாகக் கருதாமல், மேன்மையானவராகக் கருதி அவருக்கு கௌரவம் செலுத்தியதும் எமது வரலாறாகும். தற்போது அழிவுற்றுள்ள குறித்த மன்னனது உண்மையான சமாதியை இனங்கண்டு, அதனை மீளப் புனரமைப்புச் செய்து மக்களின் கௌரவத்துக்குரிய தளமாக மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் கோரிக்கைவிடுத்துள்ளார்.

இன்றையதினம் நாடாளுமன்ற கேள்வி நேரத்தின்போதே அவர் குறித்த கோரிக்கையை வயம்ப அபிவிருத்தி, உள்துறை மற்றும் கலாசார அமைச்சர் எஸ். பி. நாவின்னவிடம் முன்வைத்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

தன்னிடம் தோல்வி கண்ட எல்லாளன் என்று இறுமாப்புடன் சிந்திக்காத துட்டகைமுனு, எல்லாளன் மன்னனுக்கு அனுராதபுரத்தில், எருக்கலன்காடு எனுமிடத்தில் மாபெரும் சமாதியை அமைத்து, அதை ஒரு கௌரவமான தரத்திற்கு – அதாவது வழிபடும் இடமாக மாற்றினான் எனக் கூறப்பட்டுள்ளது.Ellalan

அதுமட்டுமன்றி, மேற்படி சமாதியைக் கடப்போர், வாகனங்களில் செல்லாது நடந்து செல்ல வேண்டுமென்றும், தலை அணிகளை கழற்றி மரியாதை செலுத்த வேண்டும் என்றெல்லாம் துட்டகைமுனு மன்னன் கட்டளையிட்டிருந்ததாக அறிகின்றோம்.

இக் கௌரவத்தை சிங்கள மக்களும் ஏனைய மக்களும் கடந்த 2000 ஆண்டுகளாக வழங்கி வந்துள்ளனர்.

சிங்கள வரலாற்று ஆசிரியர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ள எல்லாளன் – துட்டகைமுனு ஆகிய மன்னர்களுக்கிடையிலான யுத்தம் பற்றிய அண்மைக்கால ஆய்வுகளுக்கமைய, அது ஓர் இன அடிப்படையிலான யுத்தமல்ல என்றும், அனுராதபுர அரசைக் கைப்பற்றுவதற்கான யுத்தம் என்றும், இதற்கு உதாரணமாக இரு மன்னர்களது படைகளிலும் சிங்கள – தமிழ் படைவீரர்கள் மற்றும் படைத் தளபதிகள் இருந்துள்ளதை எடுத்துக் காட்டப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

இந்த நிலையில், சிங்கள – தமிழ் மக்களிடையே இனவாதக் கருத்துக்களை பேசுகின்றவர்களும், சிங்கள மக்களிடையே இனவாதக் கருத்துக்களை விதைத்து வருவோரும் உண்மையான வரலாற்று நிகழ்வை மறைத்து அல்லது திரிபுபடுத்தி எல்லாளன் – துட்டகைமுனு யுத்தத்தையே அவர்களது இனவாத செயற்பாடுகளுக்கு அடிப்டையாகக் கொள்கின்றனர்.

எமது நாட்டில் இனங்களுக்கிடையில் தேசிய நல்லிணக்கத்தை கட்யெழுப்பும் நோக்குடன் நாம் செயற்பட்டு வருகின்ற நிலையில், துட்டகைமுனு மன்னனின் ஆணைப்படி எல்லாள மன்னனின் சமாதிக்கு உரிய கௌரவத்தை மக்கள் வழங்கக்கூடிய நிலையில் அதனைத் திருத்தி அமைக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

வரலாற்றுச் சின்னம் என்ற வகையிலும் இது முக்கியத்துவம் வாய்ந்த விடயமாகும் என எண்ணுகிறேன். இல்லையேல், துட்டகைமுனு மன்னனின் ஆணையை நாம் உதாசீனம் செய்த நிலைக்குத் தள்ளப்படுவதுடன், துட்டகைமுனு மன்னனின் உயர்ந்த பண்புகளை சிதைப்பதாகவும் அது அமையும் என்பதே உண்மையாகும்.

இந்த நிலையில், தற்போது எல்லாளன் சமாதி எனக் கூறப்படும் சமாதி உண்மையானது அல்ல என்றும், தகணதூபி என்ற பௌத்த தாதுகோபுர அமைவிடமே எல்லாள மன்னனின் சமாதி என்றும் கூறப்படுகின்றது. எல்லாளன் மன்னனின் உண்மையான சமாதியை இனங்கண்டு, அதனை மீளப் புனரமைப்புச் செய்து மக்களின் கௌரவத்துக்குரிய தளமாக மாற்றியமைக்க நடவடிக்கை முடியுமா?

மேற்படி எனது கேள்விக்கான பதிலையும், எடுக்கப்படக்கூடிய நடவடிக்கை தொடர்பான விளக்கங்களையும் அமைச்சர் எஸ்.பி.நாவின்ன வழங்குவார்கள் என எதிர்பார்க்கிறேன் என தெரிவித்துள்ளார்.

(நன்றி – ஈ.பி.டி.பி செய்திகள்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com