எம்மைச் சுற்றி தவறான செயற்பாடுகள் நிகழ்த்தப்படுகின்றன – முதலமைச்சர் விக்கினேஸ்வரன்

CM-1வடக்கில் அண்மைய காலப்பகுதியில் நடைபெற்றுவரும் செயற்பாடுகள் எம்மைச் சுற்றி ஏதோ ஒரு தவறான செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருவதையே எமக்கு உணரத்துவதாக உள்ளது என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

கரைத்துறைப்பற்று பிரதேச செயலக கலாச்சார விழா – 2016  முள்ளியவளை
வித்தியானந்தா கல்லூரியில் 01.11.2016 செவ்வாய்க்கிழமை நடைபெற்றது நிகழ்வில்
பிரதம விருந்தினராக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவரது உரையின் மழு வடிவம் வருமாறு,
குருர் ப்ரம்மா………………………………………………
இன்றைய நிகழ்விற்கு தலைமை தாங்குகின்ற கரைத்துறைப்பற்று பிரதேச செயலர் திரு.சி.குணபாலன் அவர்களே, சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்து இவ் விழாவை அலங்கரித்துக் கொண்டிருக்கின்ற கௌரவ வடமாகாணசபை உறுப்பினர்களே, மாவட்டச் செயலாளர் திருமதி.றூபவதி கேதீஸ்வரன் அவர்களே, கௌரவ விருந்தினர்களாக கலந்து கொண்டிருக்கும் பண்பாட்டலுவல்கள் திணைக்கள உதவிப்பணிப்பாளர் திருமதி. வனஜா செல்வரட்ணம் அவர்களே, மற்றும் இங்கே வருகை தந்திருக்கும் உயர் அதிகாரிகளே, அரசியல் பிரமுகர்களே, எனதினிய சகோதர சகோதரிகளே, குழந்தைகளே!
கரைத்துறைப்பற்று பிரதேச செயலகம் தமது ஆளுகைக்குட்பட்ட முல்லைத்தீவுப் பிரதேசத்தின் கலை கலாச்சார பொருளாதார விழுமியங்களை எடுத்தியம்புவதற்கும் இப் பகுதிகளில் காணப்படும் சிறப்புக்களையும் வரலாற்றுச் சின்னங்களையும் ஆவணப்படுத்தி எதிர்கால சந்ததிக்கு ஒரு வரலாற்றுக் குறிப்பாக வழங்குவதற்கும் ஏற்ற வகையில் இந்தக் கலாச்சார விழாவையும் அதனோடிணைந்த “சிலம்போசை” என்ற மலர் வெளியீட்டினையும் மேற்கொண்டிருக்கும் இச் சந்தர்ப்பத்தில் உங்கள் முன் உரையாற்றுவதில் மிக்க மகிழ்வடைகின்றேன்.
ஒரு பிரதேசத்தின் வாழ்வியல் முறைமைகள், அதன் சிறப்பியல்புகள் மற்றும் அங்கு காணப்படும் வரலாற்றுப் படைப்புக்கள், கலை இலக்கியங்கள் ஆகியன போற்றிப் பாதுகாக்கப்படுவது அவசியம். கலைவடிவங்களின்; சிறப்புக்கள் பற்றியும் பண்டையகால வாழ்வியல் முறைமைகள் பற்றியும் எமது இளம் சந்ததியினரும் எதிர்கால சிறார்களும் அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் அத்தியாவசியமானதொன்றாகும். எமது பண்டைக்கால கலை வடிவங்கள், அவற்றின் தோற்றங்கள் மற்றும் அதனோடிணைந்த சிறந்த பாரம்பரிய நாடகங்கள், நாட்டுக் கூத்துக்கள் ஆகியன வாய்மொழி செய்திகளாக ஒரு சந்ததியில் இருந்து அடுத்த சந்ததிக்கு எடுத்துச் செல்லப்பட்டமையால் காலப்போக்கில் அவை மருவியும் அவற்றுள் பல அழிவடைந்தும் காணப்பட்டுள்ளன.
எமது இலக்கியங்கள் எழுத்து வடிவில் பொறிக்கப்படாமையால் அவற்றின் தோற்றம் பற்றியோ அல்லது அவற்றில் கூறப்பட்ட கருத்துக்கள் பற்றியோ அறிந்துகொள்வதற்கு எதுவித ஆவணங்களும் எமது கைகளுக்கு எட்டாமல் போய்விட்டன. இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதிகளில் வாழ்ந்து வரும் தமிழ் மக்கள் தமது மண்ணில் பல்லாயிரக் கணக்கான வருடங்களுக்கான வாழ்வியல் முறைகளையும் தமது தனித்துவமான கலாச்சாரங்களையும் பேணிப் பாதுகாத்து வந்தனர் என்பதே வரலாற்று உண்மை. ஆனால் மண்பாங்கான வடகிழக்கு மாகாணங்களில் நிரந்தரமான கல்வெட்டுக்களைக் காண்பது குதிரைக் கொம்பாக இருந்தது. தெற்கில் கருங்கல்லில் செய்திகளைப் பொறிக்க வடகிழக்கு மாகாணங்களில் கருங்கற்களுக்குத் தட்டுப்பாடு இருந்ததாலேயே கல்லில் செதுக்கும் பக்குவத்தை எமது மக்கள் மறந்து விட்டார்கள். கல்வெட்டுக்கள் இல்லாமையால் பல சரித்திர ரீதியான செய்திகள் எம்மை வந்தடையவில்லை. ஆனால் அண்மையில் ஒருசில கல்வெட்டுக்கள் கண்டெடுக்கப்பட்டதாக பேராசிரியர் பு~;பரட்ணம் அவர்கள் குறிப்பிட்டிருந்தார்.
பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் சைவக் கோவில்கள் அனைத்தும் அழித்தொழிக்கப்பட்டு இந்துக்களின் வழிபாட்டு உரிமைகள் கூட மறுக்கப்பட்ட போதும் அவர்கள் சிறிய விக்கிரகங்களையும் சூலங்களையும் தமது வீட்டின் பின்புறத்தில் காணப்படட்ட வேப்ப மரங்களுக்கு அருகிலோ அல்லது மறைவிடங்களிலோ ஸ்தாபித்து அவற்றை வழிபாடு செய்து வந்தார்கள் என்பது வரலாறு.
இன்று ஐரோப்பிய நாடுகளில் பல தேவாலயங்களும் மற்றும் பிற மத வழிபாட்டு தலங்களும் எம்மவர்களால் விலை கொடுத்து வாங்கப்பட்டு அவை இந்துக் கோவில்களாக மாற்றப்பட்டு வழிபாடுகள் இயற்றப்படுவதை காண்கின்றோம். சென்ற கிழமை ஈலிங் துர்க்கை அம்மன் கோவிலுக்கு சென்றிருந்தேன். அம்மன் கோயில் கொண்டிருக்கும் கட்டடம் முன்னர் கிறிஸ்தவ தேவாலயம்மாக இருந்தது என்றறிந்தேன். எனவே வரலாறு சுழலும் சக்கரம் போன்று சுற்றிச் சுற்றி வருகின்றது. ஒரு காலத்தில் மத வேட்கையால் ஏனைய மதங்களை அழித்தொழிக்க முற்பட்ட மேலாதிக்க அரசுகள் தமது தவறை நன்கு புரிந்துகொண்டு இன்று அனைத்து மதங்களுக்கும் “வழிபடும் சம உரிமையை” வழங்குவதற்கு முன்வந்துள்ளனர். இதன் காரணத்தினால் கூடிய விரைவில் பிரித்தானியாவிற்கு கூடிய ஆசியர்கள் குடியிருக்கக்கூடிய ஒரு நிலை ஏற்பட்டுள்ளது என்று காணப்படுகின்றது.

ஐக்கிய அமெரிக்காவின் தலைவராக விளங்கக்கூடிய பராக் ஓபாமா அவர்கள் அமெரிக்காவில் தீபாவளி தினத்தை விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தியிருந்ததை இணையத் தளங்கள் ஊடாக அவதானித்திருப்பீர்கள். எனவே “மாற்றங்கள் மட்டுமே மாறாதவை” என்ற கோட்பாட்டிற்கமைவாக எமது அரசியல் சூழ்நிலைகள் விரைவில் நல்ல மாற்றங்களை கொண்டுவருவன என நாம் நம்புகின்றோம். தற்போதைய அரசாங்கம் இரண்டு பிரதான கட்சிகளின் ஒரு சங்கமமாக உருவாகியுள்ளதால் இனப் பிரச்சனைகள் தொடர்பாக கூடுதலாகக் கவனம் எடுத்துவர வாய்ப்பிருப்பது எமக்குச் சற்று மன ஆறுதலைத் தருகின்றது.
எனவே இவ் அரிய சந்தர்ப்பம் நழுவ விடப்படக்கூடாது என்ற காரணத்தினாலேயே எமது கோரிக்கைகளை எடுத்துக்கூறுகின்ற அல்லது உலகுக்கு தெரிவிக்கின்ற ஒரு நிகழ்வாக “எழுக தமிழ்” என்ற நிகழ்வை யாழ்ப்பாணத்தில் நாடாத்தியிருந்தோம். தமிழ் மக்களின் கோரிக்கைகள் நியாயமானதென்ற கருத்து வெளிநாடுகளில் பரவி வருவதை நான் அண்மையில் ஐரோப்பா சென்ற போது கண்ணாரக் கண்டு கொண்டேன்.
எமது இளைய தலைமுறையினரின் போக்கு பற்றி ஒரு வார்த்தை. பலரின் நடவடிக்கைகள் எமக்கு மிகுந்த மன வேதனையைத் தருவதாக அமைகின்றது. வடமாகாணத்தைப் பொறுத்தவரையில் ஒரு படித்த பண்பட்ட சமூகம் என்ற சிறப்புப் பெயரை கொண்டிருந்த சமூகம் இன்று பல வழிகளிலும் சீரழிக்கப்பட்டு வருகின்றது என்பதே உண்மை. வாள் வெட்டுக் கலாச்சாரம், போதைப்பொருள் கலாச்சாரம் பாலியல் முறைகேடுகள் என பல்வேறு வழிகளில் எமது வாழ்வியல் பண்பாடுகள் சீரழிக்கப்படுகின்றன. இவை தொடர்ந்தும் அனுமதிக்க முடியாதவை. இவற்றின் பின்னணியில் யார் இருக்கின்றார்கள் என்று தெரிந்தும் நடவடிக்கைகள் எடுக்க முடியாத நிலை. அண்மையில் இராணுவ வீரர்கள் ஒரு கருத்தை தெரிவித்திருந்தார்களாம். பாதுகாப்பு கடமைகளை எமது கைகளில் ஒப்படையுங்கள் நாம் வாள்வெட்டுக் கலாச்சாரத்துடன் தொடர்புடைய ஆவா குழு மற்றும் சனா குழு ஆகியவற்றை முழுமையாக எமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து இல்லாதொழிக்கின்றோம் என்று கூறியிருந்தார்கள். குறித்த குழுவினர் பற்றிய செயற்பாடுகள் பற்றி இராணுவ வீரர்கள் ஏற்கனவே தெரிந்து வைத்திருக்கிறார்களோ என எண்ணத் தோன்றுகின்றது. அவ்வாறாயின் அவர்களைக் கைது செய்வதற்கும் ஏற்ற சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் ஏதுவாக பொலீஸாருடன் இணைந்து அவர்கள் ஏன் செயற்படக்கூடாது என்ற கேள்ளி எழுகின்றது. ஆவா குழு சனா குழு என்பவை இராணுவத்தினரால் அடையாளப்படுத்தப்பட்ட குழுக்கள். அவற்றைக் கட்டுப்படுத்த இராணுவத்தினரால் முடியுமென்றால் அவர்கள் பற்றிய சகல விபரங்களும் இராணுவத்தினரிடம் உண்டு என்பதே உண்மையாகின்றது. மற்றும் வடபகுதியில் தமிழ் பேசுகின்ற பொலீஸாரின் எண்ணிக்கை அளவில் மிகச் சிறியது எனவும் கூடுதலான தமிழ் இளைஞர்களை பொலீஸ் சேவையில் அமர்த்துமாறும் நாம் பொலீஸ் திணைக்களத்தைத் தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றோம். இன்னும் அது நடைபெறவில்லை. ஆனால் பயிற்சிகள் 400 தமிழ் இளைஞர்களுக்குக் களுத்துறையில் ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் வடபகுதியில் இருக்கும் தமிழ் பொலீஸ் உத்தியோகத்தர்களை வடபகுதியை விட்டு வெளியே செல்லுமாறு அனாமதேய அறிவிப்புக்களும் விடுக்கப்படுவதாக கூறப்படுகின்றது. இவை அனைத்தும் எம்மைச் சுற்றி ஏதோ ஒரு தவறான செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருவதையே எமக்கு உணரத்துவதாக உள்ளது. தெற்கில் பிரபாகரன் படை என்று ஒன்று துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து இராணுவத்திற்கு எதிரான சுலோகங்களைக் கக்கிவருகின்றது. இவை நம்மவரா அல்லது வேறு சக்தியா என்ற ஐயப்பாடு எழாமல் இல்லை. எனவே நாம் இச் சந்தர்ப்பத்தில் எமது உணர்ச்சிகளுக்கும் மனக்கிலேசங்களுக்கும் இடம் கொடுக்காது எமது வருங்கால சந்ததியின் நன்மை கருதியும் அவர்களை முறையாக நெறிப்பத்த ஏற்ற வகையிலும் திட்டங்களை வகுத்து அதற்கமைவாக செயற்பட அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டிய ஒரு தருணம் இது என்பதை நாம் மனதில் கொள்ளுதல் அவசியம்.
அரசியல் என்ற நிலைக்கு அப்பால் தமிழர்கள் இன்னும் 25 அல்லது 50 வருடங்களில் இப் பகுதிகளில் எவ்வாறு வாழ வேண்டும். அவர்களுக்கு எழுச்சி மிக்கதும் சுகாதாரமானதுமான ஒரு வாழ்க்கை முறைமையை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு அவர்கள் எவ்வாறு வழிநடாத்தப்பட வேண்டும். என்ற பல கேள்விகள் தற்போது எம்மை வாட்டி வதைக்கின்றன. எமது தூரநோக்குச் சிந்தனையின் கீழ் எமது மக்களுக்கு ஆற்றப்படவேண்டிய அத்தியாவசிய சேவைகள் முன்னெடுக்கப்பட்டு அவற்றில் வெற்றி காணப்படல் வேண்டும் என்ற எண்ணமும் எம்மை வாட்டி வருகின்றன.
எனவே அரசியல் தொடர்பான முன்னெடுப்புக்களை அரசியல் தலைவர்கள் அவதானமாக முன்னெடுக்க வேண்டும் என இச் சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். ஒரு புறம் அரசியல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட மறுபுறத்தில் அரச திணைக்களங்கள் மற்றும் சமூக நலன் சார்ந்த அமைப்புக்கள் எம் மக்களின் இருப்பிடங்கள் மற்றும் வாழ்வாதார நிலைகளில் முன்னேற்றங்களை ஏற்படுத்துவதற்குத் தொடர்ந்தும் பாடுபட வேண்டும். பொது மக்களுக்கு ஏற்ற உதவிகளையும் ஒத்தாசைகளையும் வழங்கவேண்டிய பல திணைக்களங்கள் பொது மக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்துகின்ற திணைக்களங்களாக மாறிவருவது மனவருத்தத்தை தருகின்றது.
இருப்பிடம் இல்லாதவருக்கு ஒரு இருப்பிடத்தைத் தேடி வழங்குவதற்குப் பதிலாக தனது சொந்த இருப்பிடத்தில் இருக்கின்ற ஒருவரை இருப்பிடம் இல்லாதவராக்குவது என்பது ஏற்றுக் கொள்ள முடியாததொன்று.
அவ்வாறான காரியங்கள் இங்கு நடைபெற்று வருகின்றன. கரைத்துறைப்பற்றில் தற்போது பிரதேச செயலாளராகக் கடமையாற்றுகின்ற திரு.சி.குணபாலன் அவர்களை துணுக்காய் பிரதேச செயலகத்தில் கடமையாற்றுகின்ற போதே அறிந்திருந்தேன். இவரின் சேவைகள் துணுக்காய் பிரதேசத்தில் வெகுவாக பாராட்டப்பட்டிருந்தன. அதே போன்று கரைத்துறைப்பற்றிலும் இவர் ஏனைய பிரதேச செயலர்களுக்கு ஒரு முன்மாதிரியாக விளங்குவார் என எதிர்பார்க்கின்றேன். முன்னைய காலங்களில் பிரதேச செயலகங்களுக்கு இவ்வாறான நிகழ்வுகளை நடாத்துவதற்கும் கலைஞர்களை கௌரவிப்பதற்கும் கலை வடிவங்களை வெளிக் கொணர்வதற்கும் ஏற்ற நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்படாமையால் இவ்வாறான நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட முடியாதிருந்தது. ஆனால் இப்போது அதற்கான ஆளணி மற்றும் ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் இவற்றை நாம் ஒப்புக்காக மேற்கொள்ளுகின்ற ஒரு காரியமாகக் கருதாது அப் பிரதேசங்களின் சிறப்புக்கள் மற்றும் தனித்துவங்கள் பற்றி ஆழமாக ஆராய்ந்து வருடா வருடம் வெளியிடுகின்ற நூல் வடிவங்களில் புதிய புதிய துறைகளில் ஆழமாகச் சிந்தித்துச் செயலாற்றுமாறு வேண்டிக் கொள்கின்றேன். விபரங்களை நூல் வடிவம் பெற நடவடிக்கைகள் எடுப்பதன் மூலம் உங்கள் படைப்புக்கள் நீண்டகாலங்களுக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் மற்றும் அறிவுத்தேடல் ஆர்வலர்களுக்கும் ஒரு உசாத்துணை நூலாக அமையும் என்று எதிர்பார்க்கின்றேன். உங்கள் முயற்சி வெற்றி பெற எனது நல்லாசிகளைத் தெரிவித்து நிறைவு செய்கின்றேன்.
நன்றி
வணக்கம்

நீதியரசர். க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com