எமது அபிவிருத்திகளை மத்திய அரசின் திணைக்களங்கள் திட்டமிட்டு தடுக்கிறன – முதலமைச்சர் குற்றச்சாட்டு

CM-1எமது பகுதிகளில் இடம்பெறும் அபிவிருத்திப் பணிகள் பல இங்கு செயற்படும் சில திணைக்களங்களின் முறையற்ற செயல்களினால் முற்றிலும் முடக்கப்படுவதாகத் தெரிவித்துள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் இரணைமடு குளக்கட்டு திருத்த வேலைகள் மாரிகாலத்திற்கு முன்பதாக நிறைவு செய்யப்பட வேண்டும் என முனைப்புடன் செயலாற்ற விழைகின்ற போது வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சு, கனியவள அமைச்சு, மத்திய சுற்றாடல் அதிகார சபை, நகர அபிவிருத்தி அதிகாரசபை, தொல்பொருள் திணைக்களம் என பல்வேறு திணைக்களங்களினதும் அதிகார சபைகளினதும் அளவுக்கு மிஞ்சிய தலையீடுகள் காரணமாக மேற்படி அபிவிருத்தி வேலைகள் முன்னெடுக்கமுடியாத நிலையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்..

யாழ் மத்திய கல்லூரியின் 200வது வருட நிறைவு கொண்டாட்ட

இறுதி நாள் நிகழ்வு கல்லூரியின் றோமெயின் குக் மண்டபத்தில்

வெள்ளிக்கிழமை (09) நடைபெற்றது நிகழ்வில் விசேட அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே முதலமைச்சர் இவவாறு குறிப்பிட்டள்ளார்.

அவரது உரையின் மழு வடிவம் வருமாறு,

குருர் ப்ரம்மா …………..

மாண்புமிகு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களே, மெதடிஸ்ட் தேவாலயத் தலைவர் அவர்களே, மற்றும் இங்கிருக்கும் சமயப் பெரியார்களே, கல்வி அமைச்சின் இராஜாங்க அமைச்சர் அவர்களே, பெண்கள் விவகார உதவி அமைச்சர் அவர்களே, எங்களுடைய கல்வி அமைச்சர் அவர்களே, பாராளுமன்ற கௌரவ உறுப்பினர்களே, மாகாணசபை கௌரவ உறுப்பினர்களே, மற்றும் இங்கு வந்திருக்கும் கல்லூரிப் பழைய மாணவர்களே, இன்றைய மாணவச் செல்வங்களே, ஆசிரியர்களே, எனதருமைச் சகோதர சகோதரிகளே!

சற்று நேரத்திற்கு முன்வரையில் நான் இந்தக் கூட்டத்தில் பேசுவதாக இருக்கவில்லை. கடைசி நேரத்திலேனும் என்னை இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கூட்டத்தில் பேச அழைத்தமைக்கு என் நன்றியறிதல்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். யாழ் மத்திய கல்லூரி இலங்கையின் மிகப் பழமை வாய்ந்த கல்லூரி அல்லது அக்கல்லூரிகளில் ஒன்றாகும்.

மெதடிஸ்ட் இயக்கத்தினால் இலங்கையில் 200 ஆண்டுகளுக்கு முன்னர் மிகச் சிறிய அளவில் தொடக்கப்பட்ட இந்தக் கல்லூரி இன்று பெரு விருட்ஷமாக வளர்ந்து, படர்ந்து தனது நிழலை எங்கணும் பரப்பிக் கொண்டிருக்கின்றது. இக் கல்லூரியின் சகோதரிக் கல்லூரி வேம்படி மகளிர் கல்லூரி என்றறிகின்றேன். அச் சகோதரிக் கல்லூரியிலேயே எனது தாயார் சுமார் நூறு வருடங்களுக்கு முன்னர் படித்ததின் நிமித்தம் நானும் உங்களுடன் சொந்தம் கொண்டாட முடியும் என்று நம்புகின்றேன். என்னுடைய கல்லூரி றோயல் கல்லூரி தொடங்குவதற்கு 20 வருடங்களுக்கு முன்னரே உங்கள் கல்லூரி தொடங்கியுள்ளது என்பதை அவதானிக்கின்றேன்.

கல்லூரிகள் அன்னையர் போன்றவை. அவற்றின் அரவணைப்புக்குள் வளரும் பிள்ளைகள் உலகெல்லாம் பரந்து சென்று இருந்தாலும், வாழ்ந்தாலும் தாய் என்ற தொப்புள் கொடியுறவு அவர்கள் யாவரையும் அக்கல்லூரிகளுடன் இணைக்கும் வல்லமை வாய்ந்தது. வெவ்வேறு வருடங்களில் பிறந்திருந்தாலும், கல்லூரியில் இணைந்திருந்தாலும் யாழ் மத்திய கல்லூரி மாணவர் என்ற முறையில் உங்கள் அனைவரிடையேயும் ஒரு சகோதரத்துவம் மிளிர்வதைக் காணலாம். இதனால்த் தான் இலத்தீன் மொழியில் கல்லூரி என்பது மற்றொரு தாய் என்ற கருத்தில் யுடஅய ஆயவநச என்று அழைக்கப்படுகின்றது.

உங்கள் பாரம்பரியத்தில் எனக்குத் தெரிந்த பலர் உங்கள் பழைய மாணவர்களாக இருந்திருக்கின்றார்கள். காலஞ்செனற் உச்ச நீதிமன்ற நீதியரசர் னுச.ர்.று.தம்பையா அவர்கள், மற்றும் பிரதம நீதியரசர் ர்.னு.தம்பையா அவர்கள், முன்னைய கல்விப் பணிப்பாளர் அருள்நந்தி அவர்கள், நண்பர் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் அவர்கள், சட்டக் கல்லூரி சமகால நண்பர் ஏ.வு.சிவலிங்கம் அவர்கள் மேலும் என்னுடைய மிக நெருங்கிய நண்பர் கனகநாயகம் கனக-ஈஸ்வரன், ஜனாதிபதி சட்டத்தரணி அவர்கள் ஆகியோர் இக் கல்லூரியின் பழைய மாணவர்களே. இன்றிருக்கும் தமிழ்ச் சட்டத்தரணிகளுள் சிரேஸ்ட சட்டத்தரணியாகத் தனது 80வது வயதில்க் கூட சட்டவானில் பவனி வந்து கொண்டிருக்கும் கனக ஈஸ்வரன் அவர்களை எமக்கீந்த இந்தக் கல்லூரிக்கு எங்களுடைய மனமார்ந்த நன்றிகள் உரித்தாகுக.

திரு.கனக ஈஸ்வரன் அவர்களின் நெருக்குதலும் ஆதரவுமே 6 மாதமாக முடியாது என்று இறுக்கமாக இருந்த என்னை அரசியலுக்குள் நுழைய வைத்தது. அதிலிருந்து உங்கள் கல்லூரி மாணவர்களின் கெட்டித்தனம் புலப்படுகின்றது.

உங்கள் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றிய ஆறுமுகநாவலர் பெருமான் அவ்வாறு இங்கு பணியாற்றிய போதுதான் விவிலிய நூலாகிய பைபிளை தமிழில் மொழி பெயர்த்தார். கிறிஸ்தவத்தையும் இந்து மதத்தையும், ஆங்கிலம், தமிழ், சமஸ்கிருதம், இலத்தீன் மொழிகளையும் நன்கு தெரிந்து வைத்திருந்ததால்த்தான் அவரால் அவ்வாறு மொழிபெயர்க்க முடிந்திருந்தது. அந்தத் தகைமையின் நிமித்தம் நாவலர்பெருமானால் இந்து மத மறுமலர்ச்சியை ஏற்படுத்தக் கூடியதாகவும் இருந்தது.

எப்பொழுதும் பன்மொழி, பல் மதத் தேர்ச்சி நன்மை அளிக்கவல்லன. இன்றைய காலகட்டத்தில் நாங்கள் தமிழையும் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் நன்றாகப் படிக்க வேண்டிய ஒரு கட்டத்தில் இருக்கின்றோம். ஒரு தமிழ் மகன் சிங்களத்தையும், ஆங்கிலத்தையும் நன்றாகப் படித்தால்த்தான் சிங்கள மக்களுக்கு தனது குறைகளை, எதிர் பார்ப்புக்களை, தேவைகளை அவர்களுக்கு எடுத்துக் கூறக் கூடியதாக இருக்கும். வெறுமனே தமிழில் பாண்டித்தியம் பெற்று தமிழ் மக்களிடையே எமது கருத்துக்களை கொண்டு செல்வதால் அவை இங்கேயே தேங்கியிருப்பன. அதனால் சிங்கள மக்கள் எமது உணர்வுகளையுந் தேவைகளையும் அபிலாசைகளையுந் நேரடியாக உணராது விட்டு விடுகின்றார்கள். இதையறிந்து தான் தெற்கில் பாடசாலை மாணவ மாணவியருக்குத் தமிழ் ஒரு கட்டாய பாடமாகப் போதிக்கப்பட்டு வருகின்றது.

ஒரே நாட்டிற்குள் எம்முடைய தனித்துவத்தைப் பேணிக்கொண்டு ஒருமித்து வாழப் போகின்றோம் என்ற முடிவுக்கு நாம் வந்துவிட்டோமானால் எமது சகோதர மொழியையும் ஆங்கிலத்தையும் கற்றுத் தேர்ந்து கொள்ளுதல் மிக அவசியம். எம்முடைய இரு இனங்களுக்கிடையே இருக்கும் சந்தேகங்கள், வெறுப்புக்கள், புரிந்துணராமை போன்றவை மற்றையவரின் மொழியை நாம் தெரிந்து கொள்வதால் அவை இல்லாதாக்கப்படுகின்றன அல்லது இல்லாதாக்கப்படுவதற்கு வழிவகுக்கின்றன. ஆகவே சகோதர மொழியைக் கற்பதால் சகோதர மக்களிடையே நிலவும் எம்மைப் பற்றிய தப்பபிப்பிராயங்களை நீக்க அது உதவி புரிகின்றது. எம்முடைய மொழியை நன்றாகப்படித்துப் பேணிப் பாதுகாத்து வரும் அதே நேரத்தில் பிறிதொரு மொழியில் பாண்டித்தியம் பெறுவது பிழை என்று கூற முடியாது.

நான் ஐரோப்பாவுக்கு சென்ற சமயத்தில் சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், இத்தாலி, பெல்ஜியம், நெதர்லான்ட்ஸ் போன்ற நாடுகளில் என் நண்பர்கள் அனைவரும் தங்கள் தாய் மொழியை விட 2 அல்லது 3 அல்லது 4 மொழிகளில் கூட பாண்டித்தியம் பெற்றிருந்ததை நான் கண்டிருந்தேன்.

சிங்கள மொழியைக் கற்றால் தமிழ் புறக்கணிக்கப்படக் கூடும் என்ற கருத்து எம் மக்கள் சிலரிடையே இருக்கின்றது. வட கிழக்கு மாகாணங்களுக்கு உரிய உரித்துக்கள் தரப்படாது மத்தியினுடைய அதிகாரம் இந்த இரு மாகாணங்களில் ஊடறுத்துச் செல்லும் நிலை தொடர்ந்தால் அவ்வாறான ஒரு நிலை ஏற்படக் கூடும். ஆனால் நாங்கள் தற்போது எம்முடைய தனித்துவத்தை ஏற்றுக் கொள்ளும் ஒரு அரசியல் யாப்பை யாத்தளிக்க நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டிருக்கின்றோம். எனவே அடுத்த கட்டமான நல்லிணக்கத்திற்கு சகோதர மொழிப் பாண்டித்தியம் உதவி புரியும் என்று நம்புகின்றேன்.

அரசியல் ரீதியாக நாம் எதிர் பார்க்கும் எல்லாம் கிடைக்கும் என்று நாங்கள் நம்பாவிட்டாலும் எம்முடைய பல கரிசனைகள் மனதிற்கு எடுக்கப்பட்டு உரிய அரசியல்த்தீர்வை நாங்கள் பெறுவோம் என்ற நம்பிக்கையை நாம் வளர்த்துக் கொள்வோம். நம்பிக்கைதான் வாழ்க்கை. இறைவன் மீது பாரத்தைப் போட்டு நம்பிக்கையுடன் முன் செல்ல முன்வருவோமாக!

பல விதமான சிக்கல்களுக்குள்ளும், தடங்கல்களுக்குள்ளும், நெருக்குதல்களுக்குள்ளும் அகப்பட்டு தத்தளித்துக் கொண்டிருக்கும் எங்கள் மாண்புமிகு ஜனாதிபதி அவர்கள் இயற்கையாகவே தம்முள் கொண்டிருக்கும் மனதாபிமான உணர்வின் நிமித்தமும் பௌத்த கொள்கைகளில் அவருக்கு இருக்கும் ஆழ்ந்த ஆர்வம் நிமித்தமும் அவர் இந்த நாட்டை நல்வழியில், நல்லிணக்கத்துடன், நல்ல நிர்வாகத்துடன், நல்லமுறையில் நடத்துவார் என்ற நம்பிக்கை எமக்கெல்லோருக்கும் உண்டு. அவருக்கு இறைவனின் ஆசி எந்நேரமும் இருக்கக் கடவதாக!

இச்சந்தர்ப்பத்தில் ஒரேயொரு சிறிய விடயத்தை மட்டும் மாண்புமிகு ஜனாதிபதி அவர்களின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகின்றேன். எமது பகுதிகளில் இடம்பெறும் அபிவிருத்திப் பணிகள் பல இங்கு செயற்படும் சில திணைக்களங்களின் முறையற்ற செயல்களினால் முற்றிலும் முடக்கப்படுகின்றன. இரணைமடு குளக்கட்டு திருத்த வேலைகள் மாரிகாலத்திற்கு முன்பதாக நிறைவு செய்யப்பட வேண்டும் என முனைப்புடன் செயலாற்ற விழைகின்ற போது வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சு, கனியவள அமைச்சு, மத்திய சுற்றாடல் அதிகார சபை, நகர அபிவிருத்தி அதிகாரசபை, தொல்பொருள் திணைக்களம் என பல்வேறு திணைக்களங்களினதும் அதிகார சபைகளினதும் அளவுக்கு மிஞ்சிய தலையீடுகள் காரணமாக மேற்படி அபிவிருத்தி வேலைகள் முன்னெடுக்கமுடியாத நிலையில் உள்ளன.

சுமார் 25000 ஏக்கர் வயல் நிலங்களில் நெற்பயிர்ச் செய்கை எதிர்வரும் காலபோகத்தில் மேற்கொள்ள முடியாத ஒரு துர்ப்பாக்கிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். மாரிகால கூடுதல் மழை வீழ்ச்சியின் போது இக்குளக்கட்டுக்களின் உறுதித் தன்மை கேள்விக்குறியாகக் கூடுமாதலால் இதன் கீழ் வாழும் குடும்பங்கள் அச்ச நிலையில் வாழ்வது அவதானிக்கப்பட்டுள்ளது. இவை தொடர்பாக எத்தனையோ கூட்டங்கள் மற்றும் கலந்துரையாடல்கள் மாவட்டச் செயலர் மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட போதிலும் ஒவ்வொரு கூட்டங்களிலும் புதுப் புது பிரச்சனைகளை முன்னெடுத்து இதற்கான தீர்வை எட்டவிடாது தடுப்பதில் மேற்குறிப்பிட்ட திணைக்களங்கள் முனைப்புடன் செயற்படுவது எம்மை விசனத்திற்கு உள்ளாக்குகின்றது.

எனவே மாண்புமிகு ஜனாதிபதியவர்களே! இவ்விடயம் தொடர்பில் உங்கள் தனிப்பட்ட கவனத்தையும் செல்வாக்கையும் பிரயோகித்து இவ்வேலைகள் இடையூறின்றி நிறைவு செய்யப்பட ஆவன செய்வீர்கள் என நாம் எதிர்பார்க்கின்றோம்.

சகோதர சகோதரிகளே! 200வது பிறந்த நாளைக் கொண்டாடும் உங்கள் கல்லூரி ஆயிரமாம் பிறந்த நாளைக் கூட ஒரு நாள் கொண்டாடும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. இறை ஆசியிருந்தால் எதுவுமே நடந்தேறும்! உங்களுக்கு இறை ஆசி என்றென்றும் கிடைப்பதாக! இக் கல்லூரியின்; பழைய மாணவர்கள், தற்போதைய மாணவர்கள், இனி வரப்போகும் அத்தனை மாணவர்களுக்கும் இறைவனின் ஆசி என்றென்றும் நிலைப்பதாக! தற்போதைய தலைமை ஆசிரியர் அவர்களும் ஆசிரியர்களும் தங்கள் கடமைகளைச் செவ்வையாகச் செய்து மாணவர்களை முன்னேற்ற இறையாசி என்றென்றும் கிடைப்பதாக! எல்லோரையும் வாழ்த்தி, கடைசி நிமிடத்தில் இந்தப் பெருமையை எனக்களித்துப் பேச வாய்பளித்த அனைவருக்கும் நன்றி கூறி அமர்கின்றேன்.

நன்றி

வணக்கம்

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்

முதலமைச்சர்

வடமாகாணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com