என்ன செய்தாலும் தூற்றுகின்றார்கள். – சி.வி.கவலை

நல்லது செய்தாலும் தூற்றுகின்றார்கள், எதுவுஞ் செய்யாவிட்டாலும் தூற்றுகின்றார்கள், அனைத்தையுந் தூற்றுவதற்கே தமது பொன்னான நேரத்தைப் பாவிக்கின்றார்கள்.  நான் வாழும் சூழல் வித்தியாசமானது. அன்பைச் செலுத்தினால் அதை அழகான நடிப்பென்றே கைதட்டுகின்றார்கள். என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கொழும்பு தமிழ் சங்க மண்டபத்தில் வேலணை வேணியனுக்கு பணி நலன் பாராட்டு சனிக்கிழமை நடைபெற்றது. அந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
 என்னைப்  பொறுத்தவரையில் நான் தற்போது இருக்கும் சூழலில் இதுவரை கண்ட நிகழ்ச்சித் திட்டம் “வாழும்போதே தூற்றுவோம்” என்பதே.
நல்லது செய்தாலும் தூற்றுகின்றார்கள், எதுவுஞ் செய்யாவிட்டாலும் தூற்றுகின்றார்கள், அனைத்தையுந் தூற்றுவதற்கே தமது பொன்னான நேரத்தைப் பாவிக்கின்றார்கள் எம்முட்பலர். உண்மையில் எனக்கு விசித்திரமாக இருக்கின்றது.
உண்மையான அன்பைப் பகிர்ந்து கொண்டால் மற்றவர்களிடமிருந்து அன்பே வெளிவரும் என்று நான் சமய ரீதியாக அறிவுறுத்தப்பட்டிருக்கின்றேன். ஆனால் நான் வாழும் சூழல் வித்தியாசமானது. அன்பைச் செலுத்தினால் அதை அழகான நடிப்பென்றே கைதட்டுகின்றார்கள்.
இரண்டாம் உலக மகா யுத்த முடிவில் நடந்ததாகக் கூறப்படும் ஒரு கதைதான் ஞாபகத்திற்கு வருகின்றது.
பல கைதிகளை ஜப்பானியர் சிறை எடுத்து வைத்திருந்தார்களாம். பாரிய கிடங்குகளைக் கிண்டி அவற்றுள் அவர்களை நிற்க வைத்தார்களாம். அவர்கள் தப்பிச் செல்லாமல் அக் கிடங்குகளைச் சுற்றி ஜப்பானியப் போர் வீரர்கள் காவல் காத்தார்களாம். ஒரு கிடங்கை மட்டும் அவர்கள் காவல் காக்கவில்லை. ஏன் என்று கேட்டதற்கு அங்கு இலங்கைத் தமிழர்கள் இருப்பதாகக் கூறப்பட்டது. அவர்களுக்குக் காவல் வேண்டாமா என்று கேட்டபோது “வேண்டாம்! ஒருவன் தப்பப்பார்த்தால் மற்றவன் அவனைக் கீழே பிடித்து இழுத்து விடுவான். எவருமே வெளியேற மாட்டார்கள்” என்று ஜப்பானிய உயர் அதிகாரி கூறினாராம்.
கடந்த 60, 70 வருடங்களில் எங்கள் குணம் மாற்றமடையவில்லை என்றே தோன்றுகின்றது. இன்னொருவரை எழும்பவிடாது தடுப்பதில் நாங்கள் அசகாய சூரர்கள்! இப்பொழுது நான் கூறியது கூட நாளை விமர்ச்சிக்கப்படும். “எங்கள் முதலமைச்சர் கொழும்பில் சென்று எவ்வாறு எம்மைப்பற்றி அவதூறாகப் பேச முடியும்!” என்று கேள்வி கேட்கப்படும்.
உண்மையைக் கூறுவது அவதூறு என்று அர்த்தப்படுத்தப்படும். “இலங்கைத் தமிழர்” என்று ஜப்பானியர் அன்று கூறிய போது எம் எல்லோரையுந் தான் அது குறித்தது. அன்றிருந்தவர்களையும் இன்றிருந்தவர்களையும் அது குறித்தது.
அது உண்மைக் கதையோ நான் அறியேன். ஆனால் அதிலிருந்து ஒரு முக்கிய கருத்தை நாங்கள் உள்வாங்க வேண்டும். இன்னொருவரின் நல்ல குணாம்சங்களை, நற் சேவைகளை, நல்ல பண்புகளை நாங்கள் பாராட்டப் பழக வேண்டும். “அவர் எதைச் செய்துவிட்டார்? அவர் யார்? அவருக்கு என்ன யோக்கியதை இருக்கு?:” என்று எந்நேரமும் கேட்டுக் கொண்டிராமல் ஒருவரின் நற்பண்புகளை, நற்சேவைகளை, நல்ல உள்ளத்தை நாம் எடைபோட்டு நற்சான்றிதழ் வழங்க முன்வர வேண்டும்.
அப்படி இல்லை என்றால் “அவர் என்னத்தைச் செய்து விட்டார்?” என்ற கேள்வியை விடுத்து “நான் இதுவரை என்னத்தை உருப்படியாகச் செய்து விட்டேன்?” என்ற கேள்வியை எழுப்பலாம். கொழும்பில் வந்து இந்தக் கருத்தை வெளியிடுகின்றேன் என்றால் அதற்குக் காரணம் இங்குதான் “வாழும் போதே வாழ்த்துவோம்” என்ற கருத்து மேடை ஏறியுள்ளது. அதே கருத்துடன் வடக்கில் ஒரு கூட்டம் நடத்தப்பட்டாலும் இதே கருத்தை அங்கும் வெளியிட்டிருப்பேன். இந்த “வாழும் போதே வாழ்த்துவோம்” என்ற கருத்து யார் மனதில் முதன் முதலில் உதித்ததோ அவர் எமது மனமார்;ந்த பாராட்டுதல்களைப் பெறுகின்றார்.
எங்கள் வாழ்க்கையானது ஆகக் கூடியது 100 வருடங்கள் நிலைபெற்றிருக்கும். அதுவும் எமது அந்திம காலம் பல உடற்பாதிப்புக்களால் செயற்திறன் அற்றிருக்கும். ஒரு மனிதனின் சுமார் 80, 85 வருட கால வாழ்க்கையின் போது அதன் கடைசிக் காலங்களில் ஒருவரைப் பாராட்டுவதென்பது சாதாரண விடயமன்று. கரடுமுரடான ஒரு பாதையில் காடுகள், வனாந்தரங்கள், கழனிகள், மலைமேடுகள், புற்றரைகள் என்று பலவிதமான நிலப்பரப்புக்களையுந் தாண்டி வந்த ஒருவருக்குத் தன் பயணத்தின் பாதையைப் பாங்காய் இருந்து பார்க்க அளிக்கும் சந்தர்ப்பமே இது. வயோதிபக் காலத்திலே மனதிலே ஒரு திருப்தியை அளிக்கக் கூடிய ஒரு நிகழ்வே “வாழும் போதே வாழ்த்துவோம்” என்ற நிகழ்ச்சித் திட்டம்.
நேற்றைய தினம் ரிஷி தொண்டுநாதன் சுவாமியிடம் இருந்து ஒரு மின்னஞ்சல் செய்தி எனக்கு வந்தது. நீங்கள் அண்மையில் ஒரு பேச்சில் கூறிய கருத்துக்களுக்கு என் பாராட்டுக்கள் என்று கூறி பல புகழுரைகளைப் பகன்றார். இருக்கும் கோவில்களில் ஆறுகாலப் பூசைகள் செய்ய ஆவன செய்யுங்கள். மேலும் மேலும் ஆலயங்களை அமைப்பதில் அர்த்தமில்லை என்று நான் கூறிய கருத்தே அவரைக் கவர்ந்திருக்கின்றது.
எமது கருத்துக்கள், நடவடிக்கைகள், செயற்பாடுகள் மக்களின் வரவேற்பையும் பாராட்டுக்களையும் பெறுகின்றன என்று காணும் போது மனதில் தானாகவே ஒரு மகிழ்ச்சி உண்டாகின்றது.
எவ்வளவுதான் ஸ்திதப்பிரக்ஞை அல்லது சம நோக்கைப் பற்றி பகவத் கீதை கூறினாலும் புகழ்ச்சி எம்மைப் புல்லரிக்க வைக்கும் ஒரு சந்தர்ப்பமே. நன்மை – தீமை, புகழ்ச்சி – இகழ்ச்சி, வெறுப்பு – விருப்பு ஆகிய இருமைகளுக்கு அப்பால் நின்று கடமையாற்று என்கின்றது பகவத் கீதை. ஆனால் இறைவனைக்கூட நாங்கள் புகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றோம். இருமைக்கு அப்பாற் பட்டவனைக்கூட நாங்கள் புகழ்ந்து எமது நல்லெண்ணத்தை, நற்பாங்கை, நல்லுள்ளத்தைப் பிரதிபலித்துக் கொண்டிருக்கின்றோம்.
எனவே இன்றைய பாராட்டுவிழாவானது வேணியன் மனதைக் குளிர வைப்பதற்கு மட்டும் எடுக்கப்படவில்லை. எங்கள் அன்பையும், பண்பையும், பாராட்டும் மனோநிலையையும் வெளிக்கொண்டுவரும் வகையிலேயே இந்த நிகழ்ச்சி ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. அவரைப் பாராட்டுவதால் எம்மனமும் குளிர்வடைகின்றது.
இன்று ஐக்கிய இலங்கை பற்றிப் பேசப் படுகின்றது. அதற்கு அத்தியாவசியமானது என்னவென்று பார்த்தால் இனங்களிடையே பரஸ்பர அன்பும், மரியாதையும், மதிப்பும் எழுந்தால்த்தான் ஐக்கிய தேசமொன்று உருவாகலாம்.
பாராட்ட வேண்டிய இடத்தில் பாராட்டுவதும், குற்றம் குறை காண வேண்டிய இடத்தில் அவற்றைப் பட்டென்று கூறுவதும் எனது சுபாவமாக மாறிவிட்டது.
ஒரு அமைச்சரின் பணியை நான் அண்மையில் பாராட்டினேன். அப்பொழுது அவர் கூறினார் “எங்களிடையே மனமுவந்து இன்னொருவரைப் பாராட்டும் பண்புள்ள தலைவர்கள் மிகக் குறைவு” என்று. சுயநலத்துக்காகப் பாராட்டுக்கள் பகரப்படக்கூடாது. இவரைப் புகழ்ந்தால் எனக்கு இந்த நன்மை கிடைக்கக் கூடும் என்று புகழ்வது புகழ்ச்சி கிடையாது. அது ஒரு நரிப்புத்தியின் வெளிப்பாடு. புகழ்ச்சி அன்புடன் ஆரம்பமாக வேண்டும். உண்மையை அடித் தளமாகக் கொண்டிருக்க வேண்டும். மனமுவந்து வெளிப்படுத்தப்பட வேண்டும். என மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com