எதிர்ப்புப் போராட்டங்கள் கூட்டமைப்புக்கு எதிராகவே நடைபெற வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி தமிழ் மக்கள் தமது ஆதங்கங்களையும் அதிப்திகளையும் வெளிப்படுத்தும் அகிம்சைப் போராட்டங்களை ஆதரிப்பதோடு, அதை வளர்த்தெடுக்கவும் தனது முழமையான பங்களிப்பையும் ஈ.பி.டி.பி வழங்கும். ஆனால் அந்த போராட்டங்களால் காட்டப்படும் எதிர்ப்பு யாருக்கு எதிரானது என்பதில் தெளிவு வேண்டும்.

இன்று அரசியல் கைதிகளாக இருப்போரை விடுதலை செய்யப்போவதாகக் கூறி தமிழ் மக்களின் வாக்குகளை அபகரித்தவர்கள் தமிழ்க் கூட்டமைப்பினர். இப்போது அதைச் செய்யாமல் அரசுக்கு நல்லபிள்ளையாகவும், தமிழ் மக்களுக்கு தேசிய வாதிகளாகவும் காட்டிக் கொண்டு தமிழ் மக்களை ஏமாற்றிவருகின்றார்கள். ஆகவே தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் 100 நாட்கள் வேலைத்திட்டத்திலும், அதன் பின்னர் பங்காளிகளாகவும் இருக்கும் புதிய அரசிலும் இவ்விடயத்தில் தீர்வு காணாமல் இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு எதிராகவே இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை தமிழ் மக்கள் நடத்த வேண்டும்.

அதேநேரம் இவ்வாறான போராட்டங்கள் மக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தாமலும், அத்தியாவசியத் தேவைகளை தீர்த்துக் கொள்வதற்கு தடையாக அமையாமலும் நடத்தப்பட வேண்டும் என்றும் ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

இன்றைய தினம் யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் நடத்திய விசேட ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின்போதே மேற்கண்டவாறு கூறியதோடு, தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த  அவர்,

வடமாகாண சபையைப் பொறுப்பேற்றவர்கள் அதை திறம்பட செய்;திருக்க வேண்டும். வடமாகாண சபை ஈ.பி.டி.பியின் கைகளுக்கு வந்துவிடக் கூடாது என்ற நோக்கத்தில் முன்னால் நீதியரசரை வலுக்கட்டாயமாக களத்தில் இறங்கி தமிழ் மக்களின் வாக்குகளை அபகரித்தார்கள்.

முன்னாள் நீதியரசரைக் காட்டி தமிழ் மக்களின் வாக்குகளை அபகரித்தவர்கள் இன்று அதே முதலமைச்சரை கட்சியிலிருந்தும், பதவியிலிருந்தும் தூக்கி எறிய கங்கனம் கட்டிக் கொண்டு நிற்கின்றார்கள். இதைப் பார்க்கின்றபோது, இதுவும் தமிழ் மக்களை ஏமாற்றும் செயலாகவே இருக்கின்றது.

ஆனால் நாங்கள் ஆட்சி அதிகாரத்தில் பங்கெடுத்திருந்த போது எமக்கு வாக்களித்த மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிளை முடியுமானவரை நிறைவேற்றியிருக்கின்றோம். நாம் நடத்திய இணக்க அரசியல் தமிழ் மக்களுக்கு பலாபலன்களையே கொடுத்துள்ளது. இன்று கூட்டமைப்பினர் நடத்தும் இணக்க அரசியலோ தமிழ் மக்களை ஏமாற்றுவதாகவும், சக தமிழ் அரசியல் தலைமைகளை பழிவாங்குவதாகவுமே இருக்கின்றது.

இதுவே இன்றைய யதார்த்தமாக இருக்கின்றபோது, கூட்டமைப்பினரே நடத்தும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் அவர்களுக்கே எதிரானதாகும். இத்தகைய கபடத்தனமான அரசியல் தலைமைகளையும், மக்களை மறந்தவர்களையும் தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும், அவர்களுக்கு எதிராக வன்முறையற்ற போராட்டங்களை முன் நின்று நடத்த வேண்டும் என்றும் கூறினார்.

தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதே ஈ.பி.டி.யின் உறுதியான நிலைப்பாடாகும். எமது இந்த நிலைப்பாடு காரணமாகவே சிறைக்குச் சென்று தமிழ் அரசியல் கைதிகளைப் பார்த்து கலந்துரையாடினேன் என்றும்   அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com