சற்று முன்
Home / செய்திகள் / எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்! – தமிழர் தாயகமெங்கும் உணர்வு பூர்வமாக மாவீரர்களுக்கு அஞ்சலி

எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்! – தமிழர் தாயகமெங்கும் உணர்வு பூர்வமாக மாவீரர்களுக்கு அஞ்சலி

தாயக விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்களை நினைவு கூரும் மாவீரர் நாள் நிகழ்வு தமிழர் தாயகமெங்கும் இன்று மாலை உணர்வெழுச்சியுடன் கடைப்பிடிக்கப்பட்டது.

இன்று மாலை 6.05 மணியளவில் மணிஒலி எழுப்பலுடன் ஆரம்பித்து, ஒரு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டது. இதையடுத்து மாலை 6.07 மணியளவில் துயிலுமில்லங்களிலும், நினைவிடங்களிலும், ஒழுங்குபடுத்தப்பட்ட இடங்களிலும், பொதுச்சுடர்கள் ஏற்றப்பட்டன.

மாவீரர்களின் பெற்றோர் பொதுச்சுடரை ஏற்றியதையடுத்து, மாவீரர்களுக்காக நினைவுச்சுடர்கள் ஏற்றப்பட்டன.

தமிழர் தாயகத்தில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் பலவற்றில் சிவப்பு, மஞ்சள் கொடிகள் கட்டப்பட்டு எழுச்சிக் கோலம் பூண்டன.

கிளிநொச்சி கனகபுரம் துயிலுமில்லத்தில் நான்கு மாவீரர்களின் தந்தையான வைத்தியலிங்கம் சண்முகம் முதனமைச் சுடரை ஏற்றினார். 3000 இற்கும் அதிகமான மாவீரர்களுக்கு நினைவுச்சுடர்கள் ஏற்றப்பட்டன. இந்த நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்களும், மாவீரர்களின் உறவினர்களும் கலந்து கொண்டனர்.

அத்துடன் முழங்காவில் துயிலுமில்லத்திலும் பெருமளவு மக்கள் கலந்து கொண்டு மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தினர்.

யாழ்ப்பாணத்தில், உடுத்துறை, சாட்டி, பாசையூர் துயிலுமில்லங்களில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன. வல்வெட்டித்துறை தீருவில் திடலிலும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் இராணுவத்தினர் முகாம் அமைந்துள்ளதால் அதற்கு முன்பாகவுள்ள காணியில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாவீரர் நினைவிடத்தில் மாலை 6.05 மணிக்கு சுடரேற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

முல்லைத்தீவில், இரணைப்பாலை, முள்ளிவாய்க்கால், முள்ளியவளை, அலம்பில், வன்னிவிளாங்குளம் துயிலுமில்லங்களில் மாவீரர்களுக்கு நினைவுச் சுடர்கள் ஏற்றப்பட்டன.

மன்னார் மாவட்டத்தில், ஆட்காட்டிவெளி, பெரிய பண்டிவிரிச்சான் துயிலுமில்லங்களிலும், வவுனியாவில் ஈச்சங்குளம் துயிலுமில்லம் அருகிலும் நினைவுச் சுடர்கள் ஏற்றப்பட்டன.

திருகோணமலை மாவட்டத்தில் ஆலங்குளம் துயிலுமில்லத்திலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் தரவை, மாவடிமுன்மாரி, கண்டலடி, துயிலுமில்லங்களிலும் மாவீரர்களை நினைவு கூரும் நிகழ்வுகள் இடம்பெற்றன.

அம்பாறை மாவட்டத்தில் கஞ்சிக்குடிச்சாறு துயிலுமில்லத்திலும் மாவீரர்களுக்கு நினைவுச் சுடர்கள் ஏற்றப்பட்டன. இந்த நிகழ்வுகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உணர்வுடன் பங்கேற்றனர்.

தமிழ் தாயகத்தில் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும், இம்முறை மாவீரர் நாள் உணர்பூர்மாகக் கடைப்பிடிக்கப்பட்டது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com