எங்களை விற்கவே சுமந்திரன் அமெரிக்கா வந்துள்ளார் – அமெரிக்க தமிழ் அமைப்புக்கள் குற்றச்சாட்டு

sumanthiran-இலங்கை அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கும் நோக்கிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அமெரிக்காவுக்கு வந்திருப்பதாக அமெரிக்காவிலுள்ள இரண்டு புலம்பெயர் அமைப்புக்கள் சாடியுள்ளன.

அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசத்துடன் இணைந்து அமெரிக்க காங்கிரசின் உத்தியோகபூர்வமற்ற தரப்பினரை அவர் சந்திக்கவிருப்பதாகவும், தமிழ் மக்களின் பிரச்சினைகள் பற்றிக் கதைக்காமல் இலங்கைத் தூதுவருக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் இவர் சந்திப்புக்களை நடத்தவிருப்பதாகவும் ஒபாமாவுக்கான தமிழர்கள் மற்றும் அமெரிக்க தமிழர் பேரவை என்ற இரண்டு அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. தமிழர்களின் நம்பிக்கையை காண்பித்து உதட்டளவிலான சேவையொன்றை அவர் வழங்கவிருப்பதாக அவ் அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைவதற்கு முன்னர் சுமந்திரன் ஐக்கிய தேசியக் கட்சியில் மிகவும் துடிப்புடன் செயற்பட்டவர் என்றும், இவர் இன்னமும் அக்கட்சியுடன் நெருக்கமான உறவுகளைப் பேணி வருவதாகவும் அந்த அமைப்புக்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.

அவர் தற்பொழுது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இருந்தாலும் அவருடைய நிலைப்பாடுகள் மற்றும் செயற்பாடுகள் என்பன அரசாங்கத்தைக் காப்பாற்றும் வகையில் அமைந்திருப்பதாகவும் அவை குறிப்பிட்டுள்ளன.

இலங்கையில் இன மற்றும் மத சுதந்திரம் தொடர்பான காங்கிரஸ் உட்குழு சுமந்திரனை அழைத்துள்ளது. இந்தக் குழு அமெரிக்க காங்கிரசிலோ அல்லது அமெரிக்க அரசாங்கத்திலோ எந்தவிதமான செல்வாக்கையும் கொண்டிராத குழுவாகும். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கனிஷ்ட உறுப்பினர் ஒருவரால் கொண்டு நடத்தப்படும் குழு இதுவென்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

புதிய அரசாங்கம் தமிழ் மக்களுக்கு ஆதரவான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளது என்ற செய்தியை இங்குள்ள முக்கியஸ்தர்களுக்கு தெரியப்படுத்த இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சுமந்திரன் வொஷிங்டனுக்கு வந்திருப்பதாகவும் அக்குழுக்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.

தமிழ் மக்களின் பகுதிகளில் உள்ள அதிகரித்த இராணுவ பிரசன்னம், பாதுகாப்புத் தரப்பினரால் தொடரும் துஷ்பிரயோகங்கள், காணாமல் போனவர்களின் விடயங்கள் உள்ளிட்ட தமிழ் மக்களால் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகள் குறித்து சுமந்திரன் பேசுவார் என எவரும் எதிர்பார்க்க முடியாது என்றும் அவை சுட்டிக்காட்டியுள்ளன.

அத்துடன், வொஷிங்டனுக்கு சுமந்திரனை அழைத்த குழு அவருக்கான விமானச் சீட்டையோ அல்லது அவர் தங்குவதற்கான ஏற்பாடுகளையோ செய்து கொடுக்கவில்லையென்றும், இலங்கை அரசாங்கத்துக்கு ஆதரவான மற்றுமொரு குழுவே இந்த ஏற்பாடுகளைச் செய்து கொடுத்ததாகவும் ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com