சற்று முன்
Home / செய்திகள் / எங்களை புகழ வேண்டாம் – அவமரியாதை செய்யாமலாவது இருங்களேன் – வங்கி ஊழியர் ஒருவரின் ஆதங்க மடல்

எங்களை புகழ வேண்டாம் – அவமரியாதை செய்யாமலாவது இருங்களேன் – வங்கி ஊழியர் ஒருவரின் ஆதங்க மடல்

வங்கிகளின் சேவை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் அவர்களிற்கான போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் சீர்செய்யப்படாத சூழலில் முகநூல்களில் தமக்கு எதிராக பரப்பப்பட்டுவரும் மிக மோசமாக அவதூறுகளையும் தாண்டி மன உழைச்சலுடனேயே தினமும் பணியாற்றவேண்டியிருப்பதாக வங்கி ஊழியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

வங்கி ஊழியர்கள், கடன் வழங்க மறுக்கிறார்கள், நேரகாலத்துடன் பூட்டிவிட்டு ஓடிவிடுகிறார்கள், கைநீட்டி சம்பளம் வாங்கும் இவர்கள் எதிர்க்கதை கதைக்கக் கூடாது எனவெல்லாம் முகநூல்களில் காரசாரமான அவதூறுகள் குறிப்பாக யாழ் குடாநாட்டை மையமாக வைத்து பரைப்பப்பட்டுவருகின்றது.

இந்நிலையில் தாங்கள் அனுபவிக்கும் இடர்கள் குறித்து எம்மோடு வங்கி ஊழியர் ஒருவர் பகிந்துகொண்ட மடல் இது,

யாழ்ப்பாணத்திலிருந்து நேற்று வெள்ளிக்கிழமை (27/03/2020) எமது மன்னார் வங்கி கிளைக்கு பயணம் செய்து யாழ்ப்பாணம் திரும்பி வரும் போது 2 மணித்தியாலத்திற்கு மேலாக சங்குப்பிட்டி சோதனை சாவடியில் இராணுவத்தினரால் தடுத்து வைக்கப்பட்டோம். யாழ்ப்பாணம் செல்ல எங்களுக்கு அனுமதி இல்லை என கூறப்பட்டது. என்னோடு ஏனைய வங்கிகள் பலவற்றின் ஊழியர்களையும் (சம்பத், செலான், கொமர்சியல், தேசிய சேமிப்பு வங்கி) திருப்பி மன்னாருக்கே சென்றுவிடுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

நாங்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் வங்கி சேவை அத்தியாவசிய சேவையாக கூறப்பட்டுள்ளதால் பணி நிமிர்த்தம் மன்னார் சென்றோம். எங்கள் குடும்பங்கள் யாழ்ப்பாணத்தில் உள்ளன. எங்களை எங்கள் ஊருக்குச் செல்ல அனுமதியுங்கள் என எவ்வளவோ கூறிப்பார்த்தோம். எங்களை மதிப்பதாகவும் இல்லை. எங்கள் கருத்துக்களை அவர்கள் கேட்பதாகவும் இல்லை. .

எமது சேவை அத்தியாசிய சேவை என கூறியும் ஒரு பொருட்டுக்கும் மதிக்கவில்லை. வங்கி அடையாள அட்டையினை காண்பித்து செல்வதற்கு தமக்கு எந்த அறிவுறுத்தலும் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்தனர்.

சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்கு மேலாக சங்குப்பிட்டி வெய்யிலில் நின்று காய்ந்தோம். யார் யாருக்கே எல்லாம் தொலைபேசியில் அழைப்பெடுத்து களைத்துவிட்டோம். ஆனால் எமக்குச் சாதகமாக எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.

எமக்கு கொரோனா தொற்று உள்ளதா என கேள்வி கேட்டவர்கள் எமக்கு காய்ச்சல் உள்ளதா என பரிசோதிக்கப் போவதாகவும் காய்ச்சல் இல்லை என்றால் தமது சொந்த றிஸ்க் இல் எம்மை யாழ்ப்பாணம் செல்ல அனுமதிப்பதாகவும் கூறினர்.

அதன்படி வெய்யிலில் வைத்து எனக்கு உடல் வெப்பநிலை இராணுவ அதிகாரியால் பரிசோதிக்கப்பட்ட போது எனக்கு 99.4 F உம் வேறு சிலருக்கு 95 இற்கு அதிகமாகவும் காணப்பட்டது. அதனால் எமக்கு காய்ச்சல் அறிகுறி உள்ளதாகவும் எம்மை விடுவிக்க முடியாது என்றும் கூறினர்.

இத்தனை மணித்தியாலமா வெய்யிலில் நிற்கிறோம் சிறிது நேரம் நிழலில் அறிவிட்டு வருகின்றோம் எம்மைப் பரிசோதியுங்கள் எனக் கூறி நிழலில் இழைப்பாறி வெப்பநிலையை குறைத்த பின்னரே வீடு செல்ல அனுமதித்தனர்.

இந்த நிலையில் தான் எமது பணி தொடர்கிறது. எமது பணியினை யாரும் புகழந்து எழுதுமாறு நாங்கள் கேட்கவில்லை. அவமரியாதை செய்யாமலாவது இருங்கள் – என்று குறிப்பிட்டுள்ளார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com