எங்களிற்கும் தமிழ்த் தேசியம் கதைக்கத் தெரியும் – தமிழீழமும் உருவாக்கத்தெரியும் – அங்கஜன் இராமநாதன்

(யாழ்-19.07.2015) தமிழ்த் தேசியம் வெறுமனே பேச்சிலும், பேப்பரிலும் இருந்தால் போதாது,  நாங்களும் பச்சைத் தமிழர்கள் தான் நாங்களும் தமிழ்த் தேசியம்தான் கதைக்கின்றோம். தமிழ்த் தேசியம் கதைக்கின்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரளும் ஏனையவர்களும் பிளேன் ரீ கேட்கிறார்கள். நாங்கள் பிளேன் ரி கேட்கவில்லை தேயிலையையும் சீனியையும் சுடுதண்ணியையும் நாங்கள் கேட்கின்றோம். எங்களிற்கும் தமிழீழத்தை உருவாக்க தெரியும். என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பிரதான வேட்பாளர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை (19) அங்கஜன் இராமநாதனின் யாழ். மாவட்ட அலுவலகத்தில்  வேட்பாளர் அறிமுகமும், பத்திரிகையாளர் சந்திப்பும் இடம்பெற்றது. அதன் போதே அவர் இவ்வாறு கூறினார்.
குறித்த செய்தியாளர் சந்திப்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், ‘மாற்றத்தினைக் கொண்டு வருவோம் என கூறும் ஏனைய அரசியல்வாதிகளின் மாற்றத்தினைப் பற்றி கதைக்க முன்வரவில்லை. இதுவரை காலமும் நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தான் இம்முறையும் போட்டியிடுகின்றார்கள்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போட்டியிடும் போது, நாங்கள் கேட்கும் விடயம் இதுவரை காலமும் செய்யாத மாற்றத்தினை இனி மேல் தான் செய்யப்போகின்றார்களாக என்று.
2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் நாங்கள் அரசியலுக்கு வரவில்லை. இன்று மாற்றத்தினைத் தேடி வந்திருக்கின்றோம். அனைவரும் சொல்கின்றார்கள். அரசு துரோகி என்று. அரசு துரோகியாகவே இருக்கட்டும்.
5 வருடங்களில் 4 ஆயிரத்து 500 பேருக்கு வேலைவாய்ப்பினை வழங்கியிருக்கின்றோம். இத்தனை வருடங்களாக அமைச்சர்களாக இருந்தவர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்களும் எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பினை வழங்கியிருக்கின்றார்கள்.
இம்முறை இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்குமாறு மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்கள். தமிழ் தேசியம் பேச்சிலும், பேப்பரிலும், இருந்தால் போதாது. நாங்களும் பச்சைத்தமிழர்கள் தான், தமிழ் தேசியத்தினைப் பற்றித்தான் கதைக்கின்றோம்.
நடைபெறவுள்ள தேர்தல் முக்கியமான தேர்தல் இந்த தேர்தலை தமிழ் மக்கள் ஆதரிக்க வேண்டும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது நாடாளுமன்ற உறுப்பினர் ஊடாக தமிழ் மக்களுக்கான சேவைகள் சென்றடைய வேண்டுமென்று விரும்புகின்றார்.
இதுவரை காலமும் மத்திய அரசு முகவர்களை வைத்து, சேவை செய்து கொண்டிருந்தார்கள். அந்த சேவைகள் சரியான முறையில் மக்களுக்கு செல்லவில்லை என்பதனை உணர்ந்து, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஊடாக மக்களுக்கான சேவைகள் சென்றடைய வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரும்பம் தெரிவித்துள்ளார்.
தற்போது, நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளவர்கள் கல்விமான்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள். இவர்களின் கைகள் ஊழல் அற்றது. கரை படியாத சுத்தமான கைகள்.
பொது நபர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு மாற்றத்தினைக் கொண்டு வருவதற்கு எத்தனித்துள்ளார்கள். இது தான் உண்மையான மாற்றம்.இந்த மாற்றத்தினை எமது பொது மக்களின் விருப்பத்தோடு மாற்றியமைக்க ஆணை தருவார்கள் என நம்புகின்றோம்’ என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com