ஊடக அமைச்சர் பிரதி அமைச்சருடன் ஊடக அமைப்புக்கள் விசேட சந்திப்பு

ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க, பிரதி அமைச்சர் கருணாரட்ன பரணவிதாரண ஆகியோருடன் நாட்டிலுள்ள 13 ஊடக அமைப்புக்களின் பிரதிநிதிகள் விசேட சந்திப்பொன்றை நடத்தினர்.

இன்று காலை நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் நடைபெற்ற இச்சந்திப்பின் போது வடக்கு மாகாணத்திலிருந்து யாழ்ப்பாண ஊடக அமையப் பிரதிநிதி (Jaffna Press Club) உட்பட தமிழ் சிங்கள முஸ்லிம் ஊடக அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தாங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து அமைச்சரிடம் விரிவாகத் தெரிவித்தனர்.

குறிப்பாக புலனாய்வுத்துறையினரால் (சீஐடி) ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் அச்சுறுத்தல்கள் கொலை மிரட்டல்கள் தொடர்பாக அமைச்சரிடம் தெரிவித்தனர். தமிழ் ஊடகவியலாளர்கள் மட்டுமன்றி சிங்கள ஊடகவியலாளர்களும் அச்சுறுத்தல்களுக்குள்ளாக்கப்படுகின்றனர் என பாதிக்கப்பட்டவர்கள் அமைச்சரிடம் நேரில் தெரிவித்தனர்.

கடந்த காலங்களில் கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள், காணாமல் போன ஊடகவியலாளர்கள் தொடர்பான விசாரணைகளும் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் உறுதிபட தெரிவித்தார். குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு அதனுடன் தொடர்புடையவர்கள் கண்டறியப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் எனத் அவர் தெரிவித்தார். இது தொடர்பாக வடக்கிலுள்ள
ஊடகவியலாளர்களுடன் சந்திப்புக்களை மேற்கொள்ள வேண்டுமென தமிழ் ஊடகவியலாளர்கள் முன்வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அமைச்சர், அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் நடுப்பகுதியில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்வதாகத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com