ஊடகவியலாளர் லசந்த துப்பாக்கிச் சூட்டினால் இறக்கவில்லை – தலையில் அடித்தே கொலை…!

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பான விசாரணைகளின் போது உறுதிப்படுத்தப்பட்ட பல தகவல்களை குற்றப் புலனாய்வு திணைக்களம் (CID), கல்கிஸ்சை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (20) சமர்ப்பித்துள்ளது.

அதன் அடிப்படையில், அண்மையில் அவரது உடல் தோண்டி எடுக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட பிரேதபரிசோதனைகளின் அடிப்படையில், அவர் துப்பாக்கிச்சூட்டினால் மரணிக்கவில்லை எனவும், தலையில் பலமாக தாக்கப்பட்டதால் மூளை சிதறியதாலேயே உயிரிழந்துள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்தனர்.

அத்துடன், லசந்த விக்ரமதுங்கவின் கொலை, அரசாங்கத்தின் உளவுப் பிரிவில் பணிபுரிந்த முன்னாள் பணிப்பாளரான மேஜர் ஜெனரல் கபில ஹெந்திரவிதாரணவின் கீழ் செயற்பட்ட விசேட குழுவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சரத் பொன்சேகாவின் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக CID யினர் நீதிமன்றில் தெரிவித்தனர்.

லசந்த விக்ரமதுங்க மாத்திரமன்றி, ஏனைய ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் சித்திரவதைகளையும், மேஜர் ஜெனரல் கபிலவின் தலைமையிலான குறித்த விசேட குழுவினால் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளதாக, குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றில் அறிவித்தனர்.

குறித்த குழுவினால் 5 சிம் அட்டைகள் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படுவதாகவும், இவ்விடயங்கள் தொடர்பான அனைத்து அழைப்புகளையும், குறித்த சிம் அட்டையைப் பயன்படுத்தியே மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

லசந்த விக்ரமதுங்க கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரி 08 ஆம் திகதி கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com