ஊடகவியலாளர்களை விரட்டிய கிராம அலுவலர்!

தகவல் பெறுவதற்காகச் சென்ற ஊடகவியலாளர்களை கிராம அலுவலர் ஒருவர் அலுவலகத்தை விட்டு வெளியே போகுமாறு விரட்டியுள்ளார். இந்தச் சம்பவம் வவுனியா பூவரசங்குளத்தில் இடம்பெற்றுள்ளது.

பலபேர் முன்னிலையில் அந்த கிராம அலுவலர் அநாகரிகமான முறையில் ஊடகவியலாளர்களுடன் நடந்து கொண்டார்.

இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தற்போது நிலவுகின்ற வரட்சியான கால நிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசாங்கத்தினால், வரட்சி நிவாரணம் வழங்கப்படுகின்றது.

வரட்சி நிவாரணம் வழங்கலில் பூவரசங்குளம் பகுதியில் பலர் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பாகக் கேட்பதற்காகச் சென்றவர்களை அப்பகுதிக்குப் பொறுப்பான கிராம அலுவலர் அநாகரிகமான முறையில் பேசி அனுப்பியதாகவும் ஊடகவியலாளர்கள் சிலருக்குத் தகவல் கிடைத்திருந்தது.

இந்தத் தகவல் தொடர்பில் உண்மையான நிலைமையை அறிவதற்காக அந்த ஊடகவியலாளர்கள். சம்பந்தப்பட்ட கிராம அலுவலராகிய கி.கஜந்தனை அவருடைய அலுவலகத்தில் சந்திப்பதற்காக அலுவலகத்தில் பிரவேசிக்க முற்பட்ட போது, அலுவலக வாயிலுக்கு வந்த, அந்த கிராம அலுவலர்  ஊடகவியலாளர்களை யார் உள்ளே விட்டது என வினவியதுடன். உடனே அங்கிருந்து வெளியேறுமாறு பலர் முன்னிலையில் அநாகரிகமாக நடந்து, அவர்களை வெளியேற்றியிருந்தார்.

இதனையடுத்து, வவுனியா பிரதேச செயலாளருடன் தொடர்புகொண்ட அந்த ஊடகவியலாளர்கள், இந்தச் சம்பவம் குறித்து அவருடைய கவனத்திற்குக் கொண்டு வந்தனர்.

அதன் பின்னர் வரட்சி நிவாரணம் வழங்காமல் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்ட மக்களைச் சந்தித்த ஊடகவியலாளர்கள், அவர்களிடம் விபரங்களைப் பெற்றுக் கொண்டு திரும்பினர்.

ஊடகசுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதாக நல்லாட்சி அரசாங்கம் பிரசாரம் செய்து வருகின்றது.

ஆனால், மக்களுடைய வரிப்பணத்தில் மக்களுக்கு சேவையாற்றுவதற்hக நியமிக்கப்பட்டுள்ள சில அதிகாரிகள் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் வகையிலும், பலர் முன்னிலையில் அவர்களை அவமானப்படுத்தும் விதத்திலும் நடந்து கொள்வது, ஊடக சுதந்திரத்தை மீறும் செயலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com