உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் தொடர்பில் வாக்குவாதங்கள்!

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் தொடர்ந்தும் தாமதமடைவது தொடர்பில் நாடாளுமன்றத்தில், நேற்று (23) கடுமையான வாக்குவாதங்கள் இடம்பெற்றதுடன், தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டமைக்குக் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

வாக்குவாதங்கள் மற்றும் எதிர்ப்பு மத்தியில், அந்தத் தேர்தல்களை விரைவாக நடத்துவதற்கான யோசனைகளையும் அவர்கள் முன்வைத்தனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை எம்.பி.க்களும், ஒன்றிணைந்த எதிரணி உறுப்பினர்க​ளுமே வாக்குவாதங்களில் ஈடுபட்டனர்.

ஏற்கெனவே, இருந்த விகிதாசார முறைமையின் பிரகாரம் தேர்தலை நடத்துமாறு, ஐ.தே.க. எம்.பி.க்களும் ஜனாதிபதியால் முன்னதாக வெளியிட்ட ஆரம்ப வர்த்தமானிக்கு அமைவாக தேர்தலை நடத்துமாறு, ஒன்றிணைந்த எதிரணியினரும் இதன்போது யோசனை தெரிவித்தனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா மாவட்ட எம்.பி.யான கவிந்த ஜயவர்தன, நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை எழுப்பிய ஒழுங்குப் பிரச்சினையை அடுத்தே, இது தொடர்பான சர்ச்சை உருவானது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நாளுக்கு நாள் பிற்போடப்பட்டு வருவதாகவும் ஐ.தே.க. என்ற வகையில், அதன் பின்வரிசை எம்.பி.க்கள் அதை எதிர்ப்பதாகவும் கவிந்த ஜயவர்தன இதன்போது தெரிவித்தார்.

இதன்போது எழுந்த சபை முதல்வரான அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, “உண்மையில் அது நீதிமன்றத்தின் தீர்மானமாகும். அதைச் சபாநாயகரோ அல்லது தாமோ மாற்ற முடியாது” என்று தெரிவித்தார்.

இருப்பினும், இந்தத் தேர்தல்கள் ஒத்திவைக்கப்படுவதன் மூலம் தாங்கள் அனைவரும் இதைக் காலம் தாழ்த்துவதாக கருதப்படுவதாகவும் உண்மையில் தேர்தலை நடத்தும் தேவையிருப்பின் பழைய முறைமையிலாவது அதை நிறைவேற்றிச் செய்வோம் என்றும், ஐ.தே.க.வின் கொழும்பு மாவட்ட எம்.பி.யான எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார்.

அத்துடன், இந்தத் தேர்தலை தொடர்ந்தும் காலம் தாழ்த்துவதானது சபாநாயகருக்கும் அதேபோல், இந்த நாளுமன்றத்துக்குமே பெரும் அகௌரவமாக அமையும் என்றும் சபை முதல்வரின் யோசனையை ஏற்றுக்கொள்ளும் அதேநேரம், மரிக்கார் எம்.பி. கூறுவதைப் போன்று நாம் பழைய முறைமையை நிறைவேற்றி நடவடிக்கையொன்றுக்குப் பிரவேசிக்க முடியும் என்றும் கவிந்த ஜயவர்தன எம்.பி. மீண்டும் தெரிவித்தார்.

இதேநேரம், கருத்துத் தெரிவித்த ஒன்றிணைந்த எதிரணியின் உறுப்பினர் தினேஷ் குணவர்தன,  “தேர்தல் நடத்தப்படும் என்று பிரதமரும் அமைச்சரும் இந்த நாடாளுமன்றத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் தெரிவித்திருந்தனர். சிறு பிரதேசங்கள் சிலவற்றில் தேர்தலை நிறுத்துமாறு மட்டுமே சிலர் தற்போது நீதிமன்றம் சென்று கோரியுள்ளனர். அத்துடன், திருத்தம் செய்யப்பட்ட வர்த்தமானியை நிறுத்துமாறு மட்டுமே கேட்டுள்ளனர்.

“அப்படியென்றால், ஜனாதிபதி ஏற்கெனவே வெளியிட்ட ஆரம்ப வர்த்தமானி செல்லுபடியாகும். அதற்கமைய தேர்தலை நடத்துங்கள். அதற்கமைய, தேர்தல்கள் ஆணையாளருக்கும் அரசாங்கத்துக்கும் தேர்தல் நடத்த முடியும். மாற்றம் செய்யப் போனதால் தான் இந்தப் பிரச்சினை ஏற்பட்டது” என்று தெரிவித்தார்.

அத்துடன், ஒரு வர்த்தமானி தொடர்பில் மட்டுமே நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் முன்னைய வர்த்தமானியின் அடிப்படையில் தேர்தலை நடத்துமாறும் ஒன்றிணைந்த எதிரணியின் பந்துல குணவர்தன எம்.பி.யும் இதன்போது வலியுறுத்தினார்.

சர்ச்சையின் பின்னர் கருத்துரைத்த சபாநாயகர் கரு ஜயசூரிய,

“இது பற்றித் தனியாகப் பேசுவோம். நாடாளுமன்றத்தின் சபாநாயகருக்குத் தேர்தல் நடத்த முடியாது. தேர்தலை நடத்துவது சபாநாயகரின் பொறுப்பல்ல. பிரதமரும் வருகை தந்தவுடன் இது பற்றி நாம் பேசுவோம். தற்போது சற்றுப் பொறுமையாக இருங்கள்” என்று தெரிவித்தார்.

அத்துடன், இந்த விடயத்தை கவனத்தில்கொண்டு அது பற்றி பேசுவதற்காக இன்று வெள்ளிக்கிழமை கட்சித் தலைவர்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com