உள்நாட்டில் பிரச்சனை தீர்க்கபடாவிட்டால் சர்வதேச அழுத்தத்தை தவிர்க்க முடியாது!-சம்பந்தன்

“தேசிய பிரச்சினையானது உள்நாட்டில் தீர்க்கப்பட வேண்டும். அதனூடாக, நாட்டின் மீதான சர்வதேச அழுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டுமென நாங்கள் விரும்புகின்றோம். இந்தப் பிரச்சினையை அவ்வாறு உள்நாட்டில் தீர்க்கப்படாவிட்டால், இலங்கை மீதான சர்வதேச அழுத்தம் மேலும் மோசமடைவதைத் தவிர்க்க முடியாது” என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

“இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விவாதமாகும். நாடாளுமன்றம் அரசமைப்புச் சபையாக மாற்றப்பட்டு, அனைத்துத் தரப்பினரதும் கருத்துகள் உள்வாங்கப்பட்டு, 40 வருடங்களின் பின்னர் அரசமைப்பு மாற்றம் குறித்து கலந்துரையாடி வருகிறோம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

அரசமைப்புச் சபையின் வழிப்படுத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பான விவாதம், நேற்று (01) மூன்றாவது நாளாகவும் இடம்பெற்றது.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இந்த நாட்டில் மீயுயர் சட்டம், மக்களுக்காக உருவாக்கப்படல் வேண்டும். அது அனைத்து மக்களின் அங்கிகாரத்தைப் பெற்றிருக்க வேண்டியது அவசியமாகும். அது, பிரிக்கப்படாத நாட்டில் சகலரது உரிமையையும் உறுதி செய்யக் கூடிய வகையில் அமைந்திருக்க வேண்டும்” என்றார்.

“ஜனநாயகமும் பன்மைத்துவமும் என்பன ஒன்றோடு ஒன்று பிணைந்துள்ள விடயங்களாகும். ஒன்றோடு ஒன்றைப் பலப்படுத்தும் வகையில் இவை அமைக்கப்பட வேண்டும். இவற்றின் ஊடாகவே பிரிக்கப்படாத நாட்டை உறுதிப்படுத்த முடியும்” என்றும் குறிப்பிட்டார்.

“இவ்வாறான நிலையில் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் அரசமைப்புத் தயாரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வரலாற்றில் முதல் தடவையாக அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்திருக்கின்றோம்” என்றார்.

“நாம், கடந்த 70 வருடங்களாக பல பாடங்களைக் கற்றுள்ளோம். முப்பது வருட யுத்தத்தைக் கண்டிருக்கிறோம். இந்த நாட்டில் பல்வேறு அரசாங்கங்கள் யுத்தத்தில் ஈடுபட்டமையானது பொருளாதார அபிவிருத்திக்குத் தடையாக அமைந்தது” என்றார்.

“கடந்த 25 வருடங்களாகப் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும் இரு பிரதான கட்சிகளுக்கிடையில் தேசிய பிரச்சினை விடயத்தில் இணக்கப்பாடு ஏற்படவில்லை. இதற்கு யுத்தமும் காரணமாக இருந்தது. இப்போது யுத்தம் என்ற தடை நீங்கியுள்ளது. ஆனால், யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட காரணத்துக்கான தீர்வுகள் இன்னும் எட்டப்படவில்லை” என்றார்.

“தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு வேண்டி யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இன்னும் அவை தீர்க்கப்படாதிருப்பது, துரதிர்ஷ்டவசமானதாகும். வளர்ச்சி, முன்னேற்றம் மற்றும் சர்வதேச அந்தஸ்தைப் பெறுவதற்கான தீர்வை நோக்கி நாம் பயணிக்க வேண்டும். இதனைக் குழப்புவதற்குப் பலர் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் நாட்டு நலனுக்காகவன்றி சொந்த அரசியல் இலாபத்துக்காக அவ்வாறு செயற்படுகிறார்கள்” என்றார்.

“எமது நடவடிக்கைகள் சர்வதேச நாடுகளால் அவதானிக்கப்பட்டு வருகின்றன. இதனை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். ஜனநாயகம் என்பது, நாட்டில் உயர்ந்த நிலையில் இருக்க வேண்டும். நிர்வாகக் கட்டமைப்புகள், அதற்கு ஏற்ற வகையில் அமைக்கப்பட வேண்டும்” என்றார்.

“புதிய அரசமைப்பைத் தயாரிப்பதற்குப் பொதுவான விடயங்களில் இணக்கப்பாடு அவசியமானது. சாத்தியப்பாடுமிக்க ஒருமித்த கருத்துகளுடன் புதிய அரசமைப்பைத் தயாரிக்க வேண்டும் என்பதே, எமது எதிர்பார்ப்பாகும். அது, பொதுமக்களின் கருத்துகளையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்” என்றார்.

“யுத்தத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கைச் சேர்ந்த தமிழ்பேசும் மக்கள் அதிகபட்ச அதிகாரங்களைப் பகிரக்கூடிய தீர்வை எதிர்பார்க்கின்றார்கள். இலங்கை, பல்லின, பன்மொழி பேசும் சமுதாயங்கள் வாழும் நாடு. இங்கு சட்டவாக்கம், நிறைவேற்று அதிகாரம் என்பன உரிய முறையில் முழு நாட்டிலும் சமமான முறையில் பகிரப்பட வேண்டும். எந்தவொரு காரணத்துக்காகவும், ஏதாவது விசேட காரணங்கள் இருந்தாலேயொழிய இது மாற்றப்படக் கூடாது” என்றும் சுட்டிக்காட்டினார்.

“ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, “தனது ஆட்சிக்காலத்தில், எந்தவொரு தீர்வும் அதியுச்ச அதிகாரப் பகிர்வை வழங்கக் கூடியதாக இருக்க வேண்டும். அது நாட்டின் இறையான்மைக்குப் பங்கம் விளைவிக்காததாக இருத்தல் வேண்டும். பெரும்பான்மையினர் சமாதானத்தை நாடுவதில் ஈடுபட வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்” எனவும் அவர் தெரிவித்தார்.

“இந்தச் செயன்முறையில் தான் நாம் ஈடுபட்டு வருகிறோம். துரதிர்ஷ்டமாக அவருடன் இணைந்திருந்த அரசியல் கட்சி உறுப்பினர்கள், இன்று மாற்றுக் கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள். ஒஸ்லோவில் ஜி.எல். பீரிஸ் கருத்துவெளியிட்டிருந்த போது, “உள்ளக சுயநிர்ணயம் தொடர்பான சமஷ்டிக் கோட்பாட்டின் அடிப்படையில், ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு காணப்பட வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்” என்றார்.

“இவர்கள், கடந்த காலங்களில் என்ன கூறியிருந்தார்கள் என்பதை நாட்டு மக்கள் உணர வேண்டும் என்பதற்காகவே நான் இதனை இங்கே குறிப்பிடுகிறேன்” யுத்தம் முடிவடைந்துள்ளது. இப்போது மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்று முன்வைக்கப்பட வேண்டும் என்பதை அரசாங்கமே, சர்வதேசத்துக்கு எடுத்துக் கூறியிருந்தது. ஆகையால், அவ்வாறான தீர்வை முன்வைப்பதற்கு நடவடிக்கைகளை எடுப்பது கட்டாயமாகும்” என்றார்.

“சர்வதேசத்துக்கு,இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். சர்வதேச மட்டத்தில் இலங்கை எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com