உலகை உலுக்கிய சிறுமி ஆசிஃபா கொலை – நீதி கோரி போராட்டம்

எட்டு வயதுப் பெண் குழந்தை ஆசிஃபா பானு கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம், இந்தியா முழுவதிலும் கடும் சீற்றத்தை உருவாக்கியுள்ளது.

இமயமலை மலையில் ஆடுகள், எருமைகள் மேய்க்கும் குஜ்ஜர் எனப்படும் முஸ்லிம் நாடோடி மேய்ப்பர் சமூகத்தைச் சேர்ந்த ஆசிஃபா பானு, கடந்த ஜனவரி 17ம் தேதியன்று இந்திய நிர்வாகத்தில் உள்ள காஷ்மீர் பகுதியில் உள்ள கத்துவா நகரத்தின் அருகே உள்ள காட்டுப்பகுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

இது தொடர்பாக எட்டு இந்துக்கள் கைது செய்யப்பட்டதற்கு இந்து வலதுசாரிக் குழுக்கள் எதிர்ப்பு தெரிவித்தன.

ஓர் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி, நான்கு போலீஸ் அதிகாரிகள் மற்றும் வயது முதிராத ஒருவர் உள்ளிட்ட எட்டு ஆண்களை போலீசார் இந்த குற்றம் தொடர்பில் கைது செய்தனர்.

இந்நிலையில், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக நடந்த பேரணியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் பங்கேற்றது, மேலும் அங்குள்ள மக்களின் கோபத்தை அதிகப்படுத்தியது.

அதுமட்டுமில்லாமல் இந்தியாவில் பலரும் #JusticeforAasifa என்ற ஹேஷ் டேகை பயன்படுத்தி ஆசிஃபா வன்புணர்வு-கொலைக்கு நீதிகேட்டு சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.

ஆசிஃபாவை கொலை செய்தவர்களுக்கு தண்டனை பெற்றுத்தர அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக தன் கருத்தை பதிவு செய்துள்ள நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன், “ஆசிஃபா இவ்வாறு கொல்லப்பட்டதற்கு ஒரு மனிதனாக, தந்தையாக, ஒரு இந்தியனாக தாம் கோபம் கொள்வதாக” குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, “ஆசிஃபா கொலை செய்யப்பட்டது மனித குலத்துக்கு எதிரான குற்றம்” என கூறியுள்ளார்.

டெல்லியில் வியாழக்கிழமை இரவு அன்று தலைவர் ராகுல் காந்தி தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் பேரணியாக சென்றனர்.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறுவதை கவனத்தில் கொண்டு வரும் விதமாக பல போராட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு அதிக பாதுகாப்பை வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட உள்ளதாக தில்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மலிவால் தெரிவித்தார்.

இந்நிலையில் ஆசிஃபா வன்புணர்வு- கொலை விவகாரத்தில் ஜம்மு காஷ்மீர் மாநில பாஜக அமைச்சர்கள் இருவர் ராஜினாமா செய்துள்ளனர். குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக நடந்த பேரணியில் அவர்கள் பங்கேற்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com