உன்னிகிருஷ்ணனின் இன்னிசை திடீர் ரத்து! – ஈ.பி.டி.பி எதிர்ப்பே காரணமா?

யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெறவிருந்த தென்னிந்திய திரைப்பட பின்னணிப் பாடகர் உன்னிக்கிருஷ்ணனின் “இன்னிசை பாடிவரும்” இசை நிகழ்வு  திடீரென இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
ஈழ மக்கள் ஜனநாயக் கட்சி ஆதரவாளர்களின் எதிர்ப்பே இசை நிகழ்வு இரத்துச் செய்யப்பட்டதற்கு காரணம் என கூறப்படுகின்றது. எனினும் நிகழ்வு இரத்துச் செய்யப்பட்டமை குறித்து கருத்துத் தெரிவிக்க மறுத்த நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் மறு அறிவித்தல்வரை இரத்துச் செய்வதாக தெரிவித்துள்ளனர்.

குறித்த இசை நிகழ்வு இன்று மாலை ஆறு மணிக்கு யாழ்ப்பாணம் வெலிங்டன் சந்தி மைதானத்தில் நடைபெறவிருந்தது. ரிக்கெற் காட்சியாக நடைபெறவிருந்த குறித்த நிகழ்வில் உன்னிக்கிருஷ்ணனின் மகள் உத்தரா உன்னிக்கிருஷ்ணனும் பாடவிருப்பதாக விளம்பரங்களில் அறிவித்தல் செய்யப்பட்டிருந்தது.

2012 ஆம் ஆண்டு நல்லூர் திருவிழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட இசை நிகழ்வில் பங்கேற்க உன்னிக்கிருஷ்ணன் யாழ்ப்பாணம் வந்திருந்தார். அவ் இசை நிகழ்வு யாழ்ப்பாணம் சங்கிலியன் தோப்பில் நடைபெற்றிருந்தது. அப்போது ஈழமக்கள் ஜனநாயக் கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சராக இருந்தார். நிகழ்வின் மேடையில் உன்னிக்கிருஷ்ணனுக்கு பொன்னாடை போர்த்திய அவர் நினைவுப் பரிசும் வழங்கினார். அதற்கு புலம்பெயர் தமிழர்கள் மற்றும் தமிழகத்தில் எதிர்ப்பு வெளியிடப்பட்ட நிலையில் டக்ளஸ் தேவானந்தாவின் கைகளால் கௌரவம் பெற்றதற்காக வருத்தம் தெரிவிப்பதாக உன்னிக்கிருஸ்ணன் குறிப்பிட்டிருந்தார். அதற்கு டக்ளஸ் தேவான்தாவும் எதிர்ப்பு அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் இன்றைய நிகழ்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்ட உடனேயே ஈழ மக்கள் ஜனநாயக் கட்சி ஆதரவாளர்கள் எனக் கூறப்படுபவர்களால் குறித்த நிகழ்வுக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு யாழ் நகரப்பகுதியெங்கும் உன்னிக்கிருஷ்ணனின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ் மக்கள் எனும் பெயரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com