சற்று முன்
Home / செய்திகள் / உச்ச நீதிமன்றத்துக்கு மேலதிகமாக விசேட அரசியலமைப்பு நீதிமன்றம்

உச்ச நீதிமன்றத்துக்கு மேலதிகமாக விசேட அரசியலமைப்பு நீதிமன்றம்

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டங்களை மீளாய்வுக்கு உட்படுத்தக்கூடிய வகையில் அரசியலமைப்பு நீதிமன்றமொன்றை அமைப்பதற்கான பரிந்துரைகள் புதிய அரசியலமைப்பை தயாரிக்கும் செயற்பாடுகளில் முன்வைக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்துக்கு மேலதிகமாக இந்த விசேட நீதிமன்றம் அமைக்கப்படுவதற்கான பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் ஜனவரி 5ஆம் 6ஆம் திகதிகளில் கூடவிருக்கும் அரசியலமைப்புத் தொடர்பான வழி நடத்தல் குழுவானது, நிறைவேற்று அதிகாரம், அதிகாரப் பகிர்வு மற்றும் தேர்தல் முறை தொடர்பான மூன்று பிரதான விடயங்கள் குறித்து முடிவொன்றை எடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளது.

தற்பொழுது இருக்கும் அரசியலமைப்புக்கு அமைய பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படக்கூடிய சட்டமூலங்கள் அரசியலமைப்புக்கு உட்பட்டதா என்பதை பரிசீலிப்பதற்கான அதிகாரம் மாத்திரமே உச்சநீதிமன்றத்துக்கு உள்ளது. இவ்வாறான நிலையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றக் கூடிய சட்டங்கள் குறித்து ஆராய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கக் கூடிய வகையில் அரசியலமைப்பு நீதிமன்றமொன்று அமைப்பதற்கான ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த நீதிமன்றத்துக்கு ஓய்வுபெற்ற நீதியரசர்கள் அல்லது அரசியலமைப்பு தொடர்பில் அனுபவமுள்ள நீதிபதிகள் நியமிக்கப்படுவார்கள். இவ்விசேட நீதிமன்றத்துக்கும் பிரதம நீதியரசருக்கும் தொடர்பிருக்காத வகையில் அமையவேண்டுமென்ற யோசனைகளும் அரசியலமைப்பை தயாரிக்கும் செயற்பாடுகளில் முன்மொழியப்பட்டுள்ளன.

இது மாத்திரமன்றி மாகாண சபைகளுக்கு வழங்கப்படும் அதிகாரங்களை நடைமுறைப்படுத்தி அவற்றை பலப்படுத்துவதே புதிய அரசியலமைப்பின் நோக்கமாக உள்ளது. மாகாணசபை முறை நடைமுறைக்கு வந்து பல ஆண்டுகளாகியிருக்கின்றபோதும் அதிகாரங்களை நடைமுறைப்படுத்த முடியாத நிலை மாகாண சபைகளுக்கு உள்ளது.

இந்த நிலைமையை மாற்றி மாகாண சபைகளும் தமக்கான அதிகாரங்களை பயன்படுத்துவதற்கான திட்டங்களும் புதிய அரசியலமைப்பில் உள்ளடக்க எதிர்பார்த்திருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். இரண்டாவது சபையொன்றை அமைப்பது அது மத்திய அரசாங்கத்துடன் அதிகாரங்களைப் பகிர்ந்து செயற்படுவது குறித்து பெரும்பாலானவர்கள் விருப்பம் தெரிவித்திருப்பதாக வழிநடத்தல் குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

நிறைவேற்று அதிகார முறை தொடர்பில் அரசியலமைப்பு தயாரிக்கும் செயற்பாடுகளில் பல்வேறு கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக பிரதமர் தெரிவு தொடர்பில் மூன்று யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

பாராளுமன்றத்தில் பெரும்பான்மையானவர்களின் விருப்பத்துடன் பிரதமர் ஒருவரைத் தெரிவு செய்வது அல்லது மக்களே நேரடியாகப் பிரதமர் ஒருவரை தெரிவு செய்வது அல்லது பிரதமர் ஒருவரை நியமித்து அவருக்கு செயற்படுவதற்கு இரண்டு வருட காலங்கள் அவகாசம் வழங்குவது போன்ற மூன்று யோசனைகள் குறித்தும் ஆராயப்பட்டு வருவதாக நம்பகமான தகவல்கள் கூறுகின்றன.

இருந்தபோதும், நிறைவேற்று அதிகாரம், தேர்தல் முறை மற்றும் அதிகாரப் பகிர்வு தொடர்பில் இதுவரை எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை. இவ்வாறான நிலையில் எதிர்வரும் ஜனவரி 5ஆம் 6ஆம் திகதிகளில் கூடவிருக்கும் வழிநடத்தல் குழுக் கூட்டத்தில் இவை குறித்து முடிவொன்றுக்கு வந்தால், ஜனவரி 9, 10, 11ஆம் திகதிகளில் அரசியலமைப்பு சபையில் நடத்தப்படவிருக்கும் விவாதங்களில் இவைபற்றியும் விவாதிக்க எதிர்பார்த்திருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

தற்பொழுதுள்ள அரசியலமைப்பில் பௌத்த மதத்துக்குக் காணப்படும் முக்கியத்துவத்தைக் குறைக்குமாறு எந்தவொரு தரப்பினரும் அழுத்தம் கொடுக்கவில்லை.

இருந்தபோதும் ஏனைய மதங்களைச் சார்ந்தவர்கள் பக்கச்சார்பான முறையில் நடத்தப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என்ற கருத்துக்களும் அரசியலமைப்பை தயாரிக்கும் வழிநடத்தல் குழு முன்னிலையில் முன்வைக்கப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com