சற்று முன்
Home / செய்திகள் / “ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகம்” – புதுக்கட்சி தொடங்குகிறார் அனந்தி ! – விக்கினேஸ்வரன் நிழல் தலைவர் ?

“ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகம்” – புதுக்கட்சி தொடங்குகிறார் அனந்தி ! – விக்கினேஸ்வரன் நிழல் தலைவர் ?


வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனை நிழல் தலைவராகக் கொண்டு
“ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகம்” எனும் பெயரில் வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் புதிய கட்சியொன்றை ஆரம்பித்துள்ளார். அதற்கான அறிவிப்பு விரைவில் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவுள்ளது.

தேர்தல் அறிவிப்பு வெளியாகி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதலமைச்சர் வேட்பாளர் ஒருவரை அறிவிக்கும் வரை அனந்தி சசிதரன் ஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தின் தலைவராக இருப்பார் எனவும் அதுவரை சி.வி.விக்கினேஸ்வரன் நிழல் தலைவராக இருந்து கட்சியை வழிநடத்துவார் என்றும் கூறப்படுகின்றது.

வடக்கு மாகாண சபையின் ஆட்சிக் காலம் நிறைவடைந்ததும், காணாமல் ஆக்கப்பட்டோர் அமைப்புக்களைச் சேர்ந்த சிலரையும் இணைத்து இந்தக் கட்சியை அவர் ஆரம்பிக்க உள்ளதாக தெரியவருகின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலனின் துணைவியான அனந்தி, வடக்கு மாகாண சபைக்கான முதலாவது தேர்தலில் தமிழ் அரசுக் கட்சி சார்பில் போட்டியிட்டு யாழ்ப்பாண மாவட்டத்தில் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு அடுத்தபடியாக அதிகூடிய வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார்.

தமிழ் அரசுக் கட்சியின் உறுப்புரிமை மூலம் அந்தக் கட்சியில் போட்டியிட்ட அவர், கட்சியின் வட்டுக்கோட்டைத் தொகுதி நிர்வாகத்தின் பழிவாங்கலுக்கு உள்பட்டு தமிழ் அரசுக் கட்சியிலிருந்து புறக்கணிப்பட்டார். அத்துடன், தமிழ் அரசுக் கட்சியின் அதிருப்தியாளர்கள் சிலருடனும் அவர் இணைந்து கருத்துக்களைத் தெரிவித்துவந்தார்.

இதனால் அவர் மீது தமிழ் அரசுக் கட்சி தலைமை ஒழுக்காற்று நடவடிக்கையை எடுத்தது. அத்துடன், தமிழ் அரசுக் கட்சிக்கும் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு இடையே ஏற்பட்ட முரண்படு நிலையில் அனந்த சசிதரன் முதலமைச்சர் ஆதரவு அணியில் செயற்பட்டார்.

இனி தமிழரசுக்கட்சியில் இணைந்து செயற்பட முடியாதென்ற முடிவிற்கு வந்ததன் பின்னர் அனந்தி சசிதரன் புதிய கட்சியொன்றை ஆரம்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். முதலமைச்சரும் புதிய கட்சியை ஆரம்பிக்க முயற்சித்து வரும் நிலையில், அனந்தி பதிவுசெய்யப்பட்ட கட்சியொன்றை வாங்கினால் அந்த கட்சியின் ஊடாக களமிறங்கலாமென திட்டமிட்டதாகவும் தெரிகிறது. ஏற்கனவே பதிவுசெய்யப்பட்ட கட்சியொன்றை வாங்கும் முயற்சியில் அனந்தி சசிதரன் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது தனது புதிய கட்சிக்கு ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகம் என்ற பெயரை வைக்க தீர்மானித்துள்ளதாக நம்பகரமாக அறியமுடிந்தது.

இந்நிலையில் எதிர்வரும் மாகாணசபை தேர்தலில் இந்த கட்சியின் ஊடாக க.வி.விக்னேஸ்வரன் அணி களமிறங்கும் வாய்ப்பை நிராகரிக்கவும் முடியாதென, முதலமைச்சருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com