இலங்கை போர்க்குற்றம்… பின்வாங்கிய அமெரிக்கா..!

ழத்தமிழ் மக்களின் கடைசி நம்பிக்கையும் கைவிட்டுச் சென்று கொண்டு இருக்கிறது. பலரிடம் ஏமாந்து பழக்கப்பட்ட ஈழத்தமிழர்களை, மீண்டும் ஏமாற்றத்தில் ஆழ்த்தி உள்ளது அமெரிக்கா.  இலங்கை போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை வேண்டும் என்று ஐ.நா-வில் தீர்மானம் கொண்டு வந்த அதே அமெரிக்கா, இன்று உள்நாட்டு விசாரணையே போதும் என்று கூறி இலங்கை அரசுக்கு காவடி தூக்கத் தயாராகிவிட்டது.

தமிழர் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் அமெரிக்காவின் மாற்றம் குறித்து கூறும்போது, ‘‘போர்க்குற்றவாளியான இலங்கை மீது சர்வதேச விசாரணை நடத்தவேண்டும் என்று ஐ.நா சபையில் மூன்று முறை அமெரிக்க தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால், விசாரணைக்குழுவினர் இலங்கைக்குள் வர ராஜபக்‌ஷே அனுமதிக்கவில்லை. இதை ஐ.நா சபையும் அமெரிக்காவும் கண்டு்கொள்ளவே இல்லை. இதிலிருந்தே ஈழ மக்கள் பற்று காரணமாக அமெரிக்கா இந்தத் தீர்மானத்தைக் கொண்டுவரவில்லை என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது.
இந்திய சுதந்திரத்துக்கு முன்பு இந்துமகா கடல் பிரிட்டனின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியாவின் கட்டுப்பாட்டில் வந்தது. இந்திரா காந்தி மரணமாகும் வரை வேறு எந்த அந்நிய நாடுகளும் இந்துமகா சமுத்திரத்தில் ஆதிக்கம் செலுத்தவிடவில்லை. ஆனால் சோனியா காந்தி – மன்மோகன் சிங் கூட்டணி, ‘புலிகளை ஒழிக்கிறோம்’ என்ற பெயரில் சீனாவை நுழையவிட்டுவிட்டார்கள். இந்தியாவின் ராஜதந்திரம் தோல்வியடைந்து, ராஜபக்‌ஷேவின் உதவியால் சீனா ஆழமாக கால் ஊன்றிவிட்டது. இந்துமகா சமுத்திரத்தை தன் ஆதிக்கத்துக்குள் கொண்டுவரவேண்டும் என்ற சுயநலகாரணத்துக்காகத்தான், போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை தேவை என்று கூறி இலங்கையை அமெரிக்கா மிரட்டி வந்தது.
அதே சமயம், அமெரிக்க உளவுத் துறை செய்த தந்திரத்தால் சீன ஆதரவாளரான ராஜபக்‌ஷே வீழ்த்தப்பட்டு அமெரிக்காவின் விசுவாசியான சிறீசேன பதவியை கைப்பற்றினார். இனி இலங்கையை மிரட்ட வேண்டிய அவசியம் இல்லாததால், உள்நாட்டு விசாரணையே போதும் என்று அமெரிக்கா பின்வாங்குகிறது.
ராஜபக்‌ஷே மட்டும் போர்க்குற்றவாளி இல்லை; அவரது அரசில் அமைச்சராக இருந்த சிறீசேனவுக்கும் பங்கு உள்ளது. இப்போது சிறீசேன அதிபராக  அதிகாரம் பொருந்திய இடத்தில் இருக்கிறார். அதுமட்டுமல்லாமல், தலைமைத்தளபதியாக இருந்து யுத்தக்குற்றவாளியான பொன்சேகாவுக்கு ஃபில்டு மாஸ்டர் பட்டம் கொடுத்து கெளரவப்படுத்துகிறார் என்றால், உள்நாட்டு விசாரணை எப்படி நியாயமாக நடக்கும்” என்றார்.
ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் அமெரிக்காவைக் கண்டித்து அமெரிக்கத் துணைத் தூதரகத்துக்கு எதிரே ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்தனர். ஆனால், போலீஸார் அனுமதி மறுத்ததால் ராஜரத்தினம் ஸ்டேடியத்துக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தை முடித்துவிட்டு அமெரிக்க துணைத் தூதரைச் சந்தித்து கோரிக்கை மனு அளிக்க திட்டமிட்டனர். அமெரிக்க துணைத் தூதரை சந்திக்க இவர்கள் அனுமதி கேட்டபோது கடந்த 1-ம் தேதி மதியம் 12.45 மணிக்கு வரலாம் என்று சொல்லி இருந்தனர். 1-ம் தேதி காலையில் இது தூதரகம் சார்பில் உறுதி செய்யப்பட்டது. ஆனால், ஆர்ப்பாட்டத்தை முடித்துவிட்டு வந்த வைகோவை, துணைத் தூதர் சந்திக்க மறுத்துவிட்டார்.
 தூதரகத்தின் அரசியல் பொருளாதார ஆலோசகர்  வந்து, கோரிக்கை மனுவை என்னிடம் தாருங்கள் என்று சொல்லி இருக்கிறார். ‘தூதரை சந்திப்பதற்காகத்தானே நாங்கள் வந்தோம்’ என்று வைகோ கூறியபோது, ‘அவருக்கு வேறு வேலைகள் இருக்கின்றன, உங்களைச் சந்திக்க இயலாது’ என்று அதிகாரிகள் கூறி அனுப்பிவிட்டனர். ‘இப்போது முடியாது என்றால் எப்போது சந்திக்கலாம் என்று கேட்டுச் சொல்லுங்கள்’ என்று அவர் சொல்ல கேட்டதற்கும் சரியான பதில் இல்லை. ‘நான் ஓர் அரசியல் கட்சியின் பொதுச்செயலாளர். ஓர் இனத்தின் கோரிக்கையை உங்களிடம் சொல்வதற்கு வந்துள்ளேன். அனுமதிக்க மறுப்பது என்ன நியாயம்?’ என்று வைகோ கேட்க, அந்த அதிகாரி அவரை முறைத்துப் பார்த்துள்ளார். ‘நான் கட்டியிருக்கும் உடை உங்களுக்கு விகாரமாகத் தெரிகிறதா?’ என்று வைகோ திரும்பக் கேட்டுள்ளார். ‘இதுவரை இருந்த மூன்று தூதர்கள் எனது வீட்டுக்கு வந்து ஆலோசனை செய்துள்ளார்கள். ஆனால், நீங்கள் உள்ளேகூட அனுமதிக்காமல் வாசலில்வைத்துப் பேசுகிறீர்கள். நான் பிரச்னை செய்யக் கூடாது என்று அமைதியாக இருக்கிறேன்’ என்று சொன்ன வைகோ, அந்த மனுவை அந்த அதிகாரியிடமே கொடுத்துவிட்டு வெளியே வந்தார். 
தூதரகத்தைவிட்டு வெளியெ வந்த வைகோ கூறும்போது, ‘‘ஈழத்தமிழர்களுக்கு பச்சைத் துரோகம் செய்வதை அமெரிக்கா கைவிட வேண்டும். அமெரிக்கத் துணைத் தூதரகத்தினர் என்னை நடத்திய விதத்தை எந்தவிதத்திலும் எவரும் நியாயப்படுத்த முடியாது. துணைத் தூதரகம் அமைந்திருக்கின்ற கட்டடத்துக்குள்ளேயே நாங்கள் செல்ல அனுமதி இல்லை. குறைந்தபட்சம் அலுவலகக் கட்டடத்துக்குள் எங்களை வரச்செய்த திமிரையும், அகம்பாவத்தையும் வெளிப்படுத்தும் விதத்தில் எங்களை அவமதித்தார்கள்” என்று சொன்னார்.
அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானம் என்பதால் சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு முன்பு அளிக்க மறுத்தன. இப்போது அமெரிக்காவே பின்வாங்குவதால், அமெரிக்கா ஆதரவு நாடுகளும் தீர்மானத்துக்கு ஆதரவு அளிக்க மறுக்கும்.
இனி சர்வதேச விசாரணை நடக்குமா என்பதே சந்தேகமே!
(நன்றி – விகடன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com