சற்று முன்
Home / செய்திகள் / இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை தேவை: தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம்!

இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை தேவை: தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம்!

இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை தேவை என்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
 
இலங்கையில் போர்க் குற்றங்கள் நிகழ்த்தியோர் மீது சர்வதேச விசாரணை மேற்கொள்ள கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானத்தை முன்மொழிந்து முதல்வர் ஜெயலலிதா பேசுகையில், 10.2.2015 அன்று, இலங்கை வடக்கு மாகாண சபையில், இலங்கை தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலை நடத்தப்பட்டது குறித்து இலங்கை அரசு விசாரணை மேற்கொண்டால் நீதி கிடைக்காது என்பதால், சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி இலங்கை வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களால் கொண்டு வரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இலங்கை நாட்டில் 21.2.2002 முதல் 15.11.2011 வரை இலங்கைத் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து சுதந்திரமான, சர்வதேச விசாரணை முறை மேற்கொள்ளப்பட வேண்டும் என இலங்கை வடக்கு மாகாண சபையின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அளித்த அறிக்கைகளின் அடிப்படையிலும், இலங்கை வடக்கு மாகாணத்தை  தங்களுடைய தாய் வீடாகக் கருதும் பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கையை ஏற்கும் வண்ணமும், மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் உலகெங்கும் பரவி இருப்பதைக் கருத்தில் கொண்டும், சர்வதேச சமுதாயம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழுவில், உறுப்பினர்களாக உள்ள நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில், 1.9.2015 அன்று இலங்கை வடக்கு மாகாண சபை ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அந்தத் தீர்மானத்தில், சர்வதேசக் குற்றங்கள் புரிந்தவர்கள் மீது இலங்கையிலேயே விசாரணை மேற்கொள்வது என்பது நீதியை பரிகசிப்பது போன்ற செயல் என்றும், இலங்கை மக்களை காத்து அவர்களுக்கு சேவை புரிய வேண்டிய இலங்கை நாட்டின் முக்கியமான தூண்கள் இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களை சுட்டிக்காட்டி நியாயம் வழங்க தவறிவிட்டன என்றும் தெரிவித்து, நீதி கிடைக்கும் வகையிலும், அடித்தமுள்ள இணக்கப் பாதையில் இலங்கை நாடு செல்லும் வகையிலும், இலங்கை தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட, சர்வதேச குற்றங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ள சர்வதேச தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என்று சர்வதேச சமுதாயத்தை கேட்டுக் கொள்வதோடு, சர்வதேச சமுதாயத்துடன் இணைந்து பணியாற்ற இலங்கை நாட்டு தலைவர்கள்  முன் வர வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழுக் கூட்டம் 14.9.2015 முதல் 2.10.2015 வரை நடைபெறுகிறது. 30.9.2015 அன்று இலங்கையில் இணக்கத்தை ஊக்குவித்தல் மற்றும் பொறுப்புடமை பற்றிய மனித உரிமை குழுவின் ஆணையர் அறிக்கை பரிசீலிக்கப்பட்டு விவாதிக்கப்படும். வரைவு தீர்மானத்தின் மீது நடவடிக்கை 1.10.2015 மற்றும் 2.10.2015 ஆகிய தேதிகளில் எடுக்கப்படும் என ஐக்கிய நாடுகளுக்கான மனித உரிமை குழு தெரிவித்துள்ளது.. இலங்கை உள்நாட்டுப் போரின் போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழுனுடைய அறிக்கை மீது இலங்கையின் கருத்து கேட்கப்பட்டு இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன.  இலங்கை அரசு அளிக்கும் பதிலின் அடிப்படையில் இலங்கையே போர்க் குற்றங்கள் பற்றி விசாரித்துக் கொள்ளலாம் என்ற ஒரு தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழுவில் நிறைவேற்றக் கூடிய சூழல் தற்போது எழுந்துள்ளது.  இதனை தடுத்து நிறுத்த வேண்டிய கடமை இந்தியப் பேரரசுக்கு உண்டு. 

இந்தச் சூழ்நிலையில், போர்க் குற்றங்கள் நிகழ்த்தியோர் மீது சர்வதேச விசாரணை மேற்கொள்ள தேவையான நடவடிக்கையை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழு மூலம் இயதியப் பேரரசு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் இந்த மாமன்றத்திலே நிறைவேற்றப்படுவது அவசியம் என நான் கருதுகிறேன். இதைத் தான் ஒட்டுமொத்த தமிழினமும் எதிர்பார்க்கிறது. எனவே, இதற்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில், கீழ்க்காணும் தீர்மானத்தினை தமிழ்நாடு அரசின் சார்பில் நான் முன்மொழிகிறேன்.

தீர்மானம் விபரம்: “ஒரு லட்சியத்தைப் பெறுவதும், அதனை ஈடேற்ற எத்தகைய தியாகம் செய்யவும் தயாராகி விடுவது என்ற உள்ள உரம் பெறுவது என்பதும் சாமான்யமான காரியமல்ல!  அந்தச் சாதனையில் நாம் வெற்றி வாகை சூடுவோம் என்ற திட நம்பிக்கை இருத்தல் வேண்டும்” என்றார் பேறிஞர் அண்ணா. பேரறிஞர் அண்ணாவின் அமுத மொழிக்கு ஏற்ப, ஒட்டுமொத்த தமிழினத்தின் லட்சியத்திற்கும், இலங்கை வடக்கு மாகாண சபையின் தீர்மானங்களுக்கும் வலு சேர்க்கும் வகையிலும், இலங்கை வாழ் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கச் செய்யும் வகையிலும், இலங்கையில் உள்நாட்டுப் போர் நடைபெற்ற போது சர்வதேச சட்டம் மற்றும் ஜெனிவா ஒப்பந்தத்தில் உள்ள போர் விதிமுறைகளை முற்றிலும் மீறி போர்க் குற்றங்கள் மற்றும் இனப் படுகொலை நிகழ்த்தியவர்கள் அனைவர் மீதும் சர்வதேச விசாரணை நடத்தும் வகையிலான வலுவான தீர்மானத்தினை இந்தியாவே ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழு முன்பு அமெரிக்கா உள்பட மற்ற நாடுகளுடன் இணைந்து கொண்டு வர வேண்டும் என்றும், அமெரிக்கா இலங்கைக்கு ஆதரவான நிலையை எடுத்தால், அதனை  மாற்ற ராஜதந்திர ரீதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்தியப் பேரரசை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை கேட்டுக் கொள்கிறது.”

என்னால் முன்மொழியப்பட்ட இந்தத் தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்த பின்னர், இந்தத் தீர்மானத்தினை ஏகமனதாக நிறைவேற்றித் தர வேண்டும் என்று உறுப்பினர்களை வாயிலாக கேட்டுக் கொள்கிறேன்” என்று பேசினார். 

இதனைத் தொடர்ந்து தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com