இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு – தமிழக மீனவர் பலி – மற்றொருவர் படுகாயம்


ராமேஸ்வரத்திலிருந்து கடலுக்கு மீன் பிடிக்கச்சென்ற மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி இலங்கை கடற்படை மீண்டும் தனது அத்துமீறலை அரங்கேற்றியுள்ளது. இந்த தாக்குதலில் மீனவர் ஒருவர் பலியானார். மற்றொரு மீனவர் படுகாயம் அடைந்துள்ளார்.

ராமேஸ்வரத்திலிருந்து நேற்று சுமார் 500 படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச்சென்றனர். மீனவர்கள் மன்னார் வளைகுடா மற்றும் பாக்நீரிணை கடற்பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது இரவு சுமார் 9 மணியளவில் அப்பகுதிக்கு வந்த இலங்கைக் கடற்படையினர் வானத்தைநோக்கி துப்பாக்கியால்சுட்டு மீனவர்களை மீன் பிடிக்கவிடாது விரட்டியடித்தனர். இந்த நிலையில் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த டிட்டோ என்பவரது படகில் சென்ற தேவரகசியம், ஜான்பிரிட்டோ, ஜான்சன், சரவணன், பிரிஜோ, அந்தோணி கிளின்டன் ஆகிய 6 மீனவர்களும் தனுஷ்கோடி அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது மீனவர்கள் படகை நோக்கி இலங்கைக் கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டதில் படகிலிருந்த பிரிஜோ என்கிற 20 வயது மீனவரின் கழுத்தில் துப்பாக்கிக்குண்டு பாய்ந்து அவர் ரத்தவெள்ளத்தில் படகிலிருந்து விழுந்தார். அவரது அருகிலிருந்த மற்றொரு மீனவரான சரவணன் படுகாயமடைந்தார். இதனைஅடுத்து மற்ற 4 மீனவர்களும் வலைகளை வெட்டி கடலில்விட்டு விட்டு படகை வேகமாக திருப்பிச்செலுத்தி கரைதிரும்பமுற்பட்டனர். பாதி வழியில் படகு பழுதானதை அடுத்து அருகிலிருந்த மற்றொரு படகில் ஏறி நள்ளிரவு 12.30 மணிக்கு ராமேஸ்லரம் வந்துசேர்ந்தனர். எனினும் கழுத்தில் குண்டுபட்டு ரத்தம் வெளியேறியதால் மீனவர் பிரிஜோ பலியானார். காயமடைந்த சரவணனை ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

கடந்த 2011 ம் ஆண்டு இலங்கைக் கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தங்கச்சிமடத்தைச்சேர்ந்த 4 பேர் பலியாகினர். அதனைத்தொடர்ந்து கடந்த 2014 ம்ஆண்டு நடந்த துப்பாக்கிச்சூட்டில் நாகபட்டிணத்தைச்சேர்ந்த ஒரு மீனவர் படுகாயமடைந்தார். இந்நிலையில் இலங்கை கடற்படை மீண்டும் துப்பாக்கிச் சூடு என்கிற அத்துமீறலை நிகழ்த்தியுள்ளது ராமேஸ்வரம் மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 4 மற்றும் 5ந்தேதிகளில் மட்டும் தமிழக மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் மூலம் வலியுறுத்தியிருந்த நிலையில் இலங்கை கடற்படை மீண்டும் தனது அத்துமீறலைத் தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com