சற்று முன்
Home / செய்திகள் / இலங்கை அரசியல் நெருக்கடியும் இந்தியாவின் கள்ள மௌனமும் !

இலங்கை அரசியல் நெருக்கடியும் இந்தியாவின் கள்ள மௌனமும் !

இலங்கையில் அரசியல் குழப்பங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில், அயல்நாடான இந்தியா எந்தக் கருத்தையும் வெளியிடாமல் கள்ள மௌனம் காத்து வருகிறது.

நேற்றுமுன்தினம் மாலை மகிந்த ராஜபக்சவை புதிய பிரதமராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்தார். அதையடுத்து, அங்கு அரசியல் குழப்பங்கள் தீவிரமடைந்து வருகின்றன.

தாமே பிரதமர் என்று மகிந்த ராஜபக்சவும், ரணில் விக்ரமசிங்கவும் உரிமை கோருகின்ற நிலையினால், குழப்ப நிலை மோசமடைந்து வருகிறது.

இந்த நிலையில், அரசியலமைப்புக்கு அமைய அனைத்து தரப்புகளும் செயற்பட வேண்டும் என்றும், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், சுவிட்சர்லாந்து போன்றன வலியுறுத்தியிருக்கின்றன.

எனினும் இந்தியா எந்தக் கருத்தையும் வெளியிடாமல் மௌனம் காத்து வருவது அரசியல் வட்டாரங்களில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

“அரசியலமைப்பு நெருக்கடிகள் தீவிரமடைந்து வருவதால், புதுடெல்லி தொடர்ந்தும், நிலைமையை ஆய்வு செய்யும் அமைதியை கடைப்பிடித்து வருகிறது.

அதேவேளை, முக்கியமான மூன்று நபர்களான மைத்திரிபால சிறிசேன, மகிந்த ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்க ஆகியோரை உன்னிப்பாக கவனித்து வருகிறது” என்று, சவுத் புளொக் வட்டாரங்களை மேற்கோள் காட்டி சண்டே எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

மூன்று தலைவர்களும் இந்தியத் தலைமைப்பீடத்துடன் தொடர்பு கொண்டுள்ளதால், நீர்த்த அரசியல் நிலவரங்களை புதுடெல்லி அறிந்து வைத்திருப்பதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

அதேவேளை, சிறிலங்காவில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகளை இந்தியா முன்கூட்டியே அறிந்திருந்ததா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

சண்டே எக்பிரஸ் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், “இது எமக்கு ஆச்சரியத்தை தரவில்லை. கொழும்பில் உள்ள எமது தூதரகம், இலங்கைத் தீவில் ஏற்பட்டு வந்த மாற்றங்களை நன்றாகப் புரிந்து கொண்டிருந்தது” என்று உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.

நீர்த்த அரசியல் நிலைமைகள் உள்ளதால், புதுடெல்லி அவசரமாகப் பதிலளிப்பதை தவிர்த்து, பொறுத்திருந்து கண்காணித்து வருவதாக இந்திய இராஜதந்திரிகள் சண்டே எக்ஸ்பிரசிடம், தெரிவித்துள்ளனர்.

“தெற்காசியாவின் அரசியல் மாறுகின்ற தன்மை கொண்டது என்பதை நாங்கள் எப்போதும், அனுபவங்களில் இருந்து கற்று வந்திருக்கிறோம்.

எனவே, ஆரம்பக் கட்டத்திலேயே, ஒரு பக்க சார்பு நிலையை எடுத்து, தவறு செய்ய நாங்கள் விரும்பவில்லை. உண்மைகள் தெளிவான பின்னரே, தேசிய நலன் குறித்து நாங்கள் செயற்பட அல்லது பேசுவோம்.

“இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் எங்களுக்கு முக்கியமான மூலோபாய நலன்கள் உள்ளன. அது சிறிலங்காவிலேயே தொடங்குகிறது. நாங்கள், சிறிலங்கா அரசாங்கத்துடன் வலுவான உறவைக் கொண்டிருக்க வேண்டும்” என்றும் புதுடெல்லி இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வெளிவிவகார அமைச்சின் மூத்த அதிகாரிகளுடன், இந்தியப் பிரதமர் மோடி ஜப்பானுக்கு பயணம் மேற்கொள்கிறார். இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ், வளைகுடாவுக்குச் செல்கிறார். இந்தநிலையில் சிறிலங்கா விவகாரத்தில் சவுத் புளொக் வட்டாரங்கள் முக்கிய பங்காற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிறிலங்கா நிலவரங்கள் தொடர்பான முன்னேற்றங்களை அறிவதில், இந்திய வெளிவிவகாரச் செயலர் விஜய் கோக்ஹலே கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்துவுடன், தொடர்பில் இருக்கிறார் என்றும், புதுடெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.இவரும் கூட, மோடியுடன் ஜப்பான் செல்கிறார்.

சிறிலங்கா அரசியலில் உள்ள முக்கியமானவர்கள், தமது நலன்களுக்காக இந்தியாவின் தலையீடு குறித்த குற்றச்சாட்டை எழுப்பியது தான், புதுடெல்லியில் நிலையை சிக்கலாக்கியுள்ளது என்றும் சண்டே எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com