இலங்கை அரசின் அடக்குமுறை இன்னும் அதிகரித்தால் ‘தமிழன் மீண்டும் ஒரு ஆயுதப்போரை நடத்துவான்!’ – சிவாஜிலிங்கம் பேட்டி

sivajilinkamவிடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாள் இன்று! அதேசமயம் நாளை (27-11-2016) மாவீரர் நினைவு தினம்! விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக்கும் இடையிலானப் போரில் தேசத்துக்காக உயிரிழந்த விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களின் நினைவைப் போற்றும் வகையில், இந்த மாவீரர் நினைவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம் நல்லு’ர் ஆலயம் முன்பாக நடைபெற உள்ள நிகிழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிவாஜிலிங்கம் உள்ளிட்டோர் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில், இலங்கையின் தற்போதைய சூழல் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் இந்தியாவிலிருந்து வெளிவரும் விகடன் சஞ்சிகைக்கா தொலைபேசி ஊடக வழங்கிய நேர்காணல்.

”மாவீரர் தினத்தையொட்டி அங்கு என்ன மாதிரியான சூழல் நிலைவுகிறது?”

”இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில், மாவீரர் தினத்தை முழுமையாகக் கடைப்பிடிப்பதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. யாழ் பல்கலைக் கழகத்தில் சுமார் 1,000 மாணவர்கள் அதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஆண்டு மாவீரர் தினத்தை நடத்த விடாமல் செய்வதற்கான அனைத்து சூழ்ச்சிகளையும் இலங்கை அரசு செய்தது. இந்த ஆண்டு எத்தனை தடைகள் போட்டாலும் நாங்கள் இந்த மாவீரர் தினத்தை உறுதியாக நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.

ஏற்கெனவே இதனைத் தடுக்க இலங்கை அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வவுனியா மற்றும் விடுதலைப்புலிகள் வசம் இருந்த தமிழர்கள் வாழும் பகுதிகள் முழுவதும் ரோந்துப் பணியை தீவிரப்படுத்தியுள்ளது. இதையெல்லாம் நாங்கள் கண்டு அஞ்சமாட்டோம். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர் .இவர்களுடைய உயிர் தியாகத்துக்கு ஈடாக ஒரு தீர்வு எங்களுக்கு தேவை. சர்வதேச விசாரணை, நிலையான அரசியல் தீர்வு ஆகியவற்றை நோக்கியே எங்கள் பயணம் இருக்கும். மாவீரர் தின நிகழ்ச்சியை நடத்துவதன் மூலம்தான் எங்களுக்கான உரிமையை இங்கு நிலைநாட்ட முடியும்.”

”தமிழர்கள் மீது எந்தவிதமானக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது?”

”நேரடியாகவும் மறைமுகமாகவும் இலங்கை அரசாங்கம் பலவித நெருக்கடிகளை எங்கள் மக்களுக்குக் கொடுத்து வருகிறது. செல்வாக்கு மிக்கத் தலைவர்களை தமிழ் மக்களோடு கூட விடாமல் செய்வதற்கு என்னென்ன சதிகளைச் செய்ய வேண்டுமோ அத்தனையையும் சர்வ சாதாரணமாக இலங்கை அரசாங்கம் செய்து வருகிறது.”

”ராஜபக்‌ஷே அரசுக்கும் தற்போதைய சிறீசேனா அரசுக்கும் என்ன வித்தியாசத்தை உணருகிறீர்கள்?”

”தமிழர்களைக் கோர முகத்துடன் கொன்று குவித்தார் ராஜபக்‌ஷே. தற்போது அதிபராக உள்ள சிறிசேனாவோ அதே வேலையை சிரித்துக்கொண்டே செய்கிறார். இரண்டு பேருக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.”

”போரின்போது காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா? இது தொடர்பாக தமிழ் அமைப்புகள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்?”

”தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபையில் இது குறித்துத் தெரிவித்து வருகிறோம். 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காணாமல் போய் உள்ளனர். கடைசிக் கட்டப் போரில் சரணடைந்தவர்கள் என்ன ஆனார்கள் என்பது குறித்துப் பதில் சொல்ல இந்த அரசு மறுக்கிறது. இது அரசப் படைகளால்தான் நிகழ்ந்துள்ளது. இது குறித்து ஐ.நா மனித உரிமை அமைப்புகளிடம் பேசியுள்ளோம்.

புதிய ஆட்சி மலர்ந்தால் படிப்படியாக ராணுவக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று எண்ணினோம். ஆனால், அது நடக்கவில்லை. காணாமல் போனவர்கள் குறித்துப் பேசியபோது ‘அதனை ராணுவம் பார்த்துக்கொள்ளும்’ என்று நா கூசாமல் சொல்கிறார் ராஜபக்‌ஷே. இப்போது நடப்பது ராணுவ ஆட்சியா? ஏழரை ஆண்டுகளாக தேடிக்கொண்டிருக்கிறோம். அரசாங்கமும் தேடுவதாக நடித்துக் கொண்டிருக்கிறது. சர்வதேச சமூகமோ இதனையெல்லாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.”

”போர்க் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்ட வீரர்களைக் கண்டுபிடிக்க இலங்கை மனித உரிமை ஆணையம் அமைத்தக் குழு என்ன ஆனது?”

”அப்போது ஆணையக் குழு அமைக்கப்பட்டு அந்தக் குழு விசாரணை நடத்திவருகிறது. ஆனால், இந்த விசாரணை அறிக்கைகளைக் கொடுத்தால் அவை குப்பைக் கூடைக்குத்தான் செல்கிறது. சர்வதேச விசாரணை நடத்தப்பட்டால் மட்டுமே இதற்கு நீதிகிடைக்கும். மற்றபடி உள்ளூர் குழுக்களால் எந்த நீதியும் கிடைக்காது.”

”இலங்கையின் தற்போதையச் சூழலில் தமிழர்கள் எவ்வாறு நடத்தப்படுகின்றனர்?”

”தமிழர்கள் உயர் பதவியில் இருந்தாலும் தமிழர்களுக்கான எந்த நல்ல நடவடிக்கையும் நடக்காது. உச்ச நீதிமன்ற நீதிபதி, பொலிஸ்மா அதிபர், அட்டர்னி ஜெனரல் என முக்கியப் பொறுப்புகளில் தமிழர்களே இருந்தபோதிலும், தமிழர்களுக்கான எந்த நல்லதும் நடக்கவில்லை. இவர்கள் பதவிப் பொறுப்புகளில் இருந்தபோதே போர்க்குற்றம் செய்த இலங்கை அரசப் படையினரில் 10 பேர்களுக்காவது தண்டனை வாங்கிக் கொடுக்கும் சூழ்நிலை இருக்கவில்லை. இதுதான் இலங்கை நீதித்துறையின் லட்சணம்!

இறுதிக்கட்டப் போர்க்குற்றம் குறித்து விசாரிப்பதற்காக அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நீதிபதிகளைக் கொண்ட பகவதி கமிஷன் குழுவை அமைத்தார் அப்போதைய அதிபர் ராஜபக்‌ஷே. அந்தக் குழுவோ, ‘இலங்கை அரசு இனப்படுகொலை தொடர்பாக எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை’ என்று புகார் சொல்லிவிட்டுப் போனது. எனவே, உள்நாட்டு விசாரணைகளால் எந்தப் பயனும் இல்லை. சர்வதேச விசாரணை மட்டுமே இங்குள்ள தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுத்தரும். அதேபோன்று அரசியல் தீர்வுக்கான நடவடிக்கையை இங்கிருந்துகொண்டு சிறு துளி அளவு கூட முன்னெடுக்க முடியாது. சர்வதேச சமூகங்களால் மட்டுமே அதை செய்து தர முடியும்!”

”அரசியல் தீர்வுக்கான வழிவகையாக எதனைக் கருதுகின்றீர்கள்?”

”அரசியல் தீர்வைத் தருகிறோம்’ என்று இலங்கை அரசு சொல்லிவருவது வெறும் கண்துடைப்பு. அப்படியே நடவடிக்கை எடுப்பதாகச் சொன்னாலும் எங்கள் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்கிற வகையில் உரிமைகளை வழங்க மாட்டார்கள். சிங்களப் பௌத்த பேரினவாதம் அதனை ஒருபோதும் அனுமதிக்காது என்பதே உண்மை!”

”தமிழர்களது நிலம் கையகப்படுத்தப் படுவதும் கோவில், நினைவு சின்னங்கள் இடிக்கப்படுவதுமான ராணுவ நடவடிக்கைகள் தொடர்வதாகக் கூறப்படுகிறதே?”

”உண்மைதான். ஏற்கெனவே மாவீரர்களின் நினைவுத் தூண்களை இலங்கை ராணுவத்தினர்தான் இடித்தார்கள். மாவீரர்கள் வாழ்ந்த பெரும்பாலான இடங்கள் ராணுவ முகாம்களாக மாற்றப்பட்டுவிட்டன.”

”இந்த மாவீரர் தினத்தில் உலக நாடுகளில் உள்ள தமிழர்களுக்கு நீங்கள் வைக்கும் கோரிக்கை என்ன?”

“ஈழத் தமிழர்கள், தாய்த் தமிழக மக்கள், உலக நாடுகளில் வாழக்கூடிய புலம் பெயர் தமிழர்கள் என அனைவரும் ஒன்று சேர்ந்து எங்களுடையப் பிரச்னைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு ஒன்றிணைந்து செயல்பட்டால்தான் எங்களை நாங்களே ஆளக்கூடியத் தீர்வை வென்றெடுக்க முடியும்.”

”ஈழத் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், ஐ.நாவின் நடவடிக்கைகள் நல்லதொரு தீர்வைப் பெற்றுத்தரும் என எதிர்பார்க்கிறீர்களா?”

“இலங்கையில் ஐ. நா முழுமையான விசாரணையை நடத்தவில்லை. இங்கு நடந்த போர்க் குற்றங்களுக்கும் இனப்படுகொலைக்கும் சரியானத் தீர்ப்பை வழங்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசியல் தீர்வின் மூலமாகத்தான் நிவாரணம் வழங்க முடியும். அதைத் தவிர்த்துவிட்டு இலங்கை அரசாங்கம் நிர்ணயிக்கும் அரைகுறையானத் தீர்ப்பை எங்கள் மீது திணித்தால் அவற்றை ஏற்க முடியாது. இங்கு நடைப்பெற்ற போர்க் குற்றங்களுக்கும், மனித உரிமை மீறல்களுக்கும் சரியானத் தீர்ப்பைத் தரவில்லை என்றால், இந்த நாட்டில் மதநல்லிணக்கமோ, சமாதானமோ ஏற்படாது என்று எச்சரிக்கிறேன்.”

”தமிழ்க் குழுக்களிடையே இலங்கை அரசாங்கம் வன்முறைகளைத் தூண்டுவதாகக் கூறப்படுகிறதே?”

“எல்லா நாடுகளிலும் இருப்பதைப் போன்றுதான் நிழல் உலகக் குழுக்கள் இங்கும் செயல்படுகின்றன. விடுதலைப் புலிகள் மீள எழுச்சிக் குழுக்கள் என்ற பெயரில், இலங்கை அரசாங்கமே இதுபோன்ற குழுக்களை நடத்தி வருவதாகத் தகவல் வருகிறது. இந்தக் குழுக்கள் தமிழ் மக்களிடையே வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிடும் வேலைகளைச் செய்வதாகவும் சொல்கிறார்கள். இலங்கை அரசின் இதுபோன்ற சூழ்ச்சிகள் மற்றும் அடக்கு முறைகள் தொடர்ந்து கொண்டிருந்தால் எதிர்காலத்தில் மக்களும் மாணவர்களும் கற்களை வீசும் புரட்சிகர சம்பவங்கள் நிகழும் சூழ்நிலை உருவாகும். அல்லது மீண்டும் ஓர் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்கும் நிலையும் தோன்றும் என்று எச்சரிக்கிறேன். இதனைத் தீர்மானிப்பது சிங்கள பௌத்த பேரினவாதத்தின் கையில்தான் உள்ளது.”

”எதிர்காலத்தில் விடுதலைப் புலிகள் போன்ற அமைப்புகள் உருவாக சாத்தியமா?”

“இலங்கை அரசின் அடக்குமுறை இன்னும் அதிகரித்தால், மீண்டும் ஓர் ஆயுதப் போராட்டம் நிச்சயம் உருவாகும். ஜனநாயக ரீதியாக நாங்கள் நடத்திவரும் போராட்டங்களுக்கு தீர்வு கிடைக்காதபோது ஆயுதம் ஏந்துவதைத் தவிர வேறு வழியில்லை.”

”தமிழகத்தில் உள்ள ஈழ ஆதரவாளர்களுக்கு உங்களது கோரிக்கை என்ன?”

“ஓரணியில் திரண்டு உங்களுடைய உறவுகளுக்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்க முழு ஆதரவு தர வேண்டும். அதேபோன்று இந்திய அரசு ‘நாங்கள் இருப்போம்’ என்று உணர்வுப்பூர்வமாக சொல்வதை விட்டுவிட்டு அறிவுப் பூர்வமாக அதன் செயல்பாடுகளை அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை.”

”தமிழகத்தில் இருந்து எழும் ஆதரவுக் குரல்கள் உங்களுக்குப் போதுமானதாக உள்ளதா?”

”இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு தமிழகத்தில் இருந்து கிடைக்கும் ஆதரவு திருப்தி அளிக்கும் வகையில் இல்லை. அங்குள்ள 6 கோடி மக்களின் முழு ஆதரவு பல்கிப் பெருக வேண்டும். இங்கு கொத்துக்கொத்தாக மடிந்தபோது அதற்கு எதிராகக் குரல் கொடுத்தார்கள். ஆனால், உயிரைக் காப்பாற்ற எந்த ஸ்திரமான நடவடிக்கையும் இல்லையே என்பது இங்குள்ளவர்களின் ஆதங்கமும், வேதனையுமாக உள்ளது. தற்போது இங்குள்ள தமிழர்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்க அங்குள்ள ஈழ உணர்வாளர்கள் தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதே இங்குள்ளவர்களின் எண்ணமாக உள்ளது.”

”மத்திய அரசுக்கு உங்களுடைய கோரிக்கை என்ன?”

”இந்திய அரசு விடுதலைப்புலிகளை அழிக்க வேண்டும் என்று எண்ணியே அழித்தார்கள். இலங்கை பகுதியில் இந்தியாவுக்கு எதிராக சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் செல்வாக்கு உயர்ந்து கொண்டுவருகிறது. குறிப்பாக இந்தியாவுக்கு ஈழத் தமிழர்கள்தான் பாதுகாப்பு அரணாக இருப்பார்கள். இந்தியா, இலங்கையில் உள்ள பௌத்த ஆட்சியாளர்களை நம்புவார்கள் எனில், அது இந்தியாவுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.”

(நன்றி – விகடன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com