இலங்கையில் மிகவும் கொடூரமான சித்திரவதைகள் தொடர்பில் கேட்டறிந்தேன்! –ஐநா அறிக்கையாளர்

இலங்கையில் மிகவும் கொடூரமான சித்திரவதைகள் தொடர்பில் வருந்தத்தக்க அனுபவங்களைக் கேட்டறிந்ததாக அண்மையில் இலங்கைக்குப் பயணம் செய்த ஐநாவின் சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சனை மேற்கோள் காட்டி ஐநாவினால் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த வாரம் இலங்கைக்கு வருகை தந்த ஐநாவின் சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன், அனுராதபுரம் சிறைச்சாலைக்குப் பயணம் செய்து அங்கு பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு தடுத்துவைத்துள்ளவர்களைச் சந்தித்திருந்தார்.

ஐநாவின் சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சனின்இலங்கை பயணத்தினையடுத்து ஐநாவினால் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கையில் பயங்கரவாதத் தடைச்சட்டமானது மிகவும் ஆழமான தவறுகளைக் கொண்டுள்ளது. இச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்படுபவர்கள் மீது மேற்கொள்ளப்படும் சித்திரவதையானது வழமையானதும், அதிகளவிலும் காணப்படுகின்றது.

“சட்டம், தமிழ்ச் சமூகத்துக்கு எதிராக ஒப்பீட்டளவில் அதிகமாகப் பயன்படுத்தப்படுவதன் காரணமாக, அரசின் மெருகூட்டப்பட்ட சித்திரவதைக் கருவியின் கடுமையான பாதிப்பை, அச்சமூகம் எதிர்கொண்டுள்ளது.

“பாதுகாப்புத் துறையில், சித்திரவதை என்பது ஆழமாகப் பதியப்பட்டுள்ளது. கொடூரமான சித்திரவதை தொடர்பில், வருந்தத்தக்க, நேரடியான அனுபவங்களை நான் கேட்டறிந்தேன்.

“தடிகளால் அடித்தல், உடலுக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் இருத்துதல், மண்ணெண்ணெயில் தோய்க்கப்பட்ட பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்து மூச்சுத்திணற வைத்தல், விரல் நகங்களைப் பிடுங்குதல், விரல் நகங்களுக்குக் கீழ் ஊசிகளைச் செருகுதல்,

பல்வேறு வகையிலான தண்ணீர்ச் சித்திரவதைகள், பெருவிரல்களில் கட்டிப் பல மணி நேரங்களுக்குத் தொங்க விடுதல், பிறப்புறுப்புகளை சிதைத்தல் ஆகியவற்றை, இந்தச் சித்திரவதைகள் உள்ளடக்குகின்றன”

2016ம் ஆண்டின் இறுதியில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் 80 சதவீதமானோர், சித்திரவதை, பௌதீக ரீதியான தவறான நடத்தை ஆகியவற்றைச் சந்தித்ததாகக் கூறுகின்றனர்.

சித்திரவதை, இவ்வளவு தூரத்துக்கு அதிர்ச்சிகரமாகக் காணப்படுகின்ற போதிலும், பயன்தரக்கூடிய விசாரணைகள் இல்லாமையைக் காணப்படுகின்றது.

12 சந்தேகநபர்கள், விசாரணை எதுவுமின்றி 10 ஆண்டுகளுக்கும் மேலாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். மேலதிகமாக 70 பேர், 5 ஆண்டுகளுக்கும் மேலாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை, அதிகளவிலான பாதுகாப்புச் சவாலைச் சந்திக்கிறது. எனினும், சீர்திருத்தம், நீதி, மனித உரிமைகள், ஏறத்தாள அதே இடத்திலேயே இருக்கின்றது.

நிலைத்திருக்கும் சமாதானத்தை உறுதிப்படுத்துவதற்காக, நிலைமாறு கால நீதிக்கான கட்டமைப்பை உருவாக்குவதற்கும், பாதுகாப்புத் துறையின் அவசரமான சீர்திருத்தத்துக்கும் வழங்கிய சர்வதேச அப்பணிகளை, இலங்கை நிறைவேற்ற வேண்டும் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com