சற்று முன்
Home / செய்திகள் / இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் ஐநாவுக்கும் இந்தியாவிற்கும் அறிக்கை சமர்ப்பிப்பு

இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் ஐநாவுக்கும் இந்தியாவிற்கும் அறிக்கை சமர்ப்பிப்பு

(07.09.2015) இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஆணைக்குழுக்களின் விசாரணைகள், நீதிமன்ற விசாரணைகள் தொடர்பில் சிஎச்ஆர்டி எனப்படும் மனித உரிமைகளுக்கும் அபிவிருத்திக்குமான நிலையம் அறிக்கை ஒன்றை தயாரித்து, ஐநாவுக்கும் இந்தியா உள்ளிட்ட முக்கியமான நாடுகளின் தூதரக அதிகாரிகளுக்கும் கையளித்திருக்கின்றது.
மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்பு கூறல் விடயத்தில் ஐநாவின் விசாரணை அறிக்கை வெளியிடப்படவுள்ள சந்தர்ப்பத்தில், அடுத்து நடத்தப்பட வேண்டியது உள்நாட்டு விசாரணையா அல்லது சர்வதேச விசாரணையா என்ற சர்ச்சைகள் எழுந்துள்ள பின்னணியில் இந்த அறிக்கை தொகுக்கப்பட்டிருக்கிறது.
காவல்துறையினர், இராணுவத்தினர், துணை ஆயுதக்குழுக்கள் போன்றவர்களாலும் வெள்ளை வேன்களில் வந்தவர்களாலும் பகிரங்கமாக காணாமல்போகச் செய்யப்பட்டவர்கள், யுத்தத்தின் இறுதி நாட்களில் அரசாங்கத்தின் உத்தரவாதத்தை ஏற்று இராணுவத்தினரிடம் சரணடைந்ததன் பின்னர் காணாமல் போயிருப்பவர்கள், திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழி விவகாரம் என்று மூன்று பிரிவுகளாக இந்த அறிக்கை தொகுக்கப்பட்டிருப்பதாக சிஎச்ஆர்டி அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் கே.எஸ்.ரட்னவேல் தெரிவித்துள்ளார்.
காணாமல்போனவர்கள் தொடர்பில் விசாணைகள் நடத்திய ஆணைக்குழுக்களின் செயற்பாடுகளில் காணப்படுகின்ற குறைபாடுகள், சீரற்ற நடைமுறைகள் என்பன குறித்தும் மக்கள் இந்த விசாரணைகளில் நம்பிக்கை இழந்திருப்பதற்கான காரணங்கள் பற்றியும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன.
திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழியில், காணமல்போனவர்களின் சடலங்களும் இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டிருப்பதாகவும், அதனால் அது தொடர்பான வழக்கு விசாரணைகள் பற்றியும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாக வழக்கறிஞர் ரட்னவேல் தெரிவித்தார்.
ஐநா மனித உரிமைப் பேரவையின் விசாரணை அறிக்கை, பாதிக்கப்பட்ட மக்களின் உண்மையான உணர்வுகளை உள்வாங்கி சரியான முடிவுகளை மேற்கொள்வதற்குப் பேருதவியாக அமையும் என்றும் ரட்னவேல் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com