இலங்கையின் கடற்படை தளபதியாக தமிழர் நியமனம்! (2 ஆம் இணைப்பு)

இணைப்பு 02

இலங்கை கடற்படையின் 21வது கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரால் ட்ரவிஸ் சின்னையா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று (18) முற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடமிருந்து தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.

1982ஆம் ஆண்டு இலங்கை கடற்படையில் இணைந்த ட்ரவிஸ் சின்னையா, வீர விக்ரம விபூஷ, ரணவிக்ரம, ரணசூர (மூன்று முறை) மற்றும் உத்தம சேவா ஆகிய விருதுகளைப் பெற்ற கடற்படையின் சிரேஷ்ட அதிகாரியாவார்.

புதிய கடற்படைத் தளபதியின் சேவைக் காலம் இம்மாதம் 22ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் கபில வைத்யரத்ன, ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

இணைப்பு 01

கடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை கடற்படையின் 21 ஆவது தளபதியாக ரியர் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை மத்திய பிரதேசமான கண்டியை சொந்த இடமாகக் கொண்ட ரியர் அட்மிரல் ட்ரெவிஸ் ஜெரமி லியான்ந்துரு சின்னையா கண்டி ரினிட்டி கல்லூரியில் ஆரம்பக் கல்வியை கற்றுள்ளார்.

இதனையடுத்து கடற்படையின் திருகோணமலை கல்லூரியில் கெடட் அதிகாரியாக 1982 ஆம் ஆண்டு இணைந்து கொண்டு 1984 ஆம் ஆண்டு தனது கடற்படை அதிகாரி பட்டப்படிப்பை முடித்துக் கொண்டுள்ளார்.

பிரித்தானியாவின் டார்ட்மவுத் ரோயல் கடற்படைக் கலாசாலைக்கு தெரிவான அவர் கடற்படை அதிகாரிக்கான விசேட பயிற்சிகளையும் பட்டப்படிப்பையும் முடித்துள்ளார்.

இதன்போது பிரித்தானிய கடற்படையின் போர்க் கப்பல்கள் பலவற்றிலும் களநிலைப் பயிற்சிகளை முடித்துள்ளார். இதற்கமைய பிரித்தானிய போர்க் கப்பலான டெனரில் நில காலம் கடமையாற்றியும் உள்ளார்.

அதேவேளை கப்பல்களுக்கிடையிலான தகவல் பரிமாற்றம் மற்றும் அதிநவீன இலத்திரனியல் யுத்தம் குறித்தும் சிறப்புப் பயிற்சிகளை பிரித்தானிய கடற்படையிடம் பெற்றுக் கொண்டுள்ள ட்ரெவஸ் சின்னையா இறுதிக்கட்ட போரின் போது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கடற்படை நடத்திய பெரும்பாலான தாக்குதல்களிலும் முக்கிய பங்கு வகித்துள்ளார்.

அதேவேளை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவினால் ஓரம் கட்டப்பட்டிருந்த சின்னையாவிற்கு, இலங்கையின் தற்போதைய மைத்திரி – ரணில் தலைமையிலான தேசிய அரசாங்கம் ஆட்சிபீடம் ஏறியதும் முக்கிய பதவி வழங்கப்பட்டது.

இதற்கமைய கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஷீர் அஹமட்டிற்கும் – கிழக்கு மாகாண கடற்படைத் தளபதிக்கும் இடையில் ஏற்பட்ட முறுகலை அடுத்து கிழக்கு மாகாண கடற்படைத் தளபதியாக 2016 ஆம் ஆண்டு மே மாதம் ரியர் அட்மிரல் ரெவிஸ் சின்னையா நியமிக்கப்பட்டிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com