சற்று முன்
Home / செய்திகள் / “இலங்கைக்கு கால நீடிப்பு வழங்கக் கூடாது” ரெலோவின் பிரேரணை – சபைக்கு எடுக்காமலேயே நிராகரித்த ஆர்னோல்ட்

“இலங்கைக்கு கால நீடிப்பு வழங்கக் கூடாது” ரெலோவின் பிரேரணை – சபைக்கு எடுக்காமலேயே நிராகரித்த ஆர்னோல்ட்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கத்திற்கு மேலும் கால நீடிப்பு வழங்கக் கூடாது என்றும் இறுதிப் போரின்போது மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பிற்கு நீதி கோரிய விசாரணையை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் பாரப்படுத்த வேண்டும் என்றும் யாழ் மாநகர துணை முதல்வரான ரெலோ உறுப்பினர் துரைராசா ஈசனினால் யாழ் மாநகரசபையில் சமரப்பிக்கப்பட்ட பிரேரணை விவாரத்திற்கு எடுத்துக்கொள்ளப்படாமலே தமிழரசுக் கட்சி உறுப்பினரான யாழ் மாநகர முதல்வரினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

யாழ் மாநகரசபையின் மாதாந்த அமர்வு இன்று (12.03.2019) செவ்வாய்க்கிழமை யாழ் மாநகரை சபா மண்டபத்தில் நடைபெற்றது. அதன்போது “என்னால் சபைக்கு சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை ஏன் சபை நடவடிக்கைகாக எடுத்துக்கொள்ளப்படாமலே நிராகரிக்கப்பட்டது” என யாழ் மாநகர துணை முதல்வரான ரெலோ உறுப்பினர் துரைராசா ஈசன் சபை முதல்வரை நோக்கி கேள்வியினை மேற்கொண்டதோடு குறித்த பிரேரணையை சபையில் எடுக்கவேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

அதன்போது உடனடியாகவே குறுக்கிட்ட ஈபிடிபி உறுப்பினரான இரா செல்வவடிவேல் சபை நடடிக்கையில் விவாதிப்பது என எடுத்துக்கொள்ளாத எந்தஒரு பிரேரணையையும் சபையில் எடுக்கக் கூடாது என தடுத்தார்.

எனினும் பொது நலன் சார்ந்த எந்த ஒரு பிரேரரணையையும் சபை உறுப்பினர்களில் பெரும்பான்மையுடன் சபையில் விவாதத்திற்கு எடுக்க முடியும் எனவும் அதற்கு மாநகரசபைச் சட்டத்தில் இடமளிக்கப்பட்டிருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்டிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினரான கிருபாகரன் குறித்த பிரேரணையை விவாதத்திற்கு எடுக்கவேண்டும் என வலியுறுத்தினார். அவருக்கு ஆதரவாக குறித்த பிரேரணையை சபையில் விவாத்திற்கு எடுக்கவேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் கருத்துரைத்தனர்.

அதன்போது குறுக்கிட்ட முதல்வர் ஆர்னோல்ட்,
“இந்தப் பிரேரணையை எடுக்கக் கூடாது என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களது தீர்மானம். இது எமது கட்சியின் தீர்மானம். நாங்கள் இலங்கை குறித்து கொண்டுவரப்படவிருக்கும் தீர்மானத்திற்கு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றோம் எனவே கால அவகாசம் வழங்க வேண்டாம் எனக் கோரும் குறித்த பிரேரணை சபையில் விவாதத்திற்கு எடுக்கவேண்டும் என எனக்கு கட்சியின் மேலிடம் உத்தரவிடவில்லை. நான் இதனைச் சபையில் விவாதத்திற்கு எடுக்கமாட்டேன். துணை முதல்வரான ஈசனுக்கு இது தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டபோதும் அவர் குறித்த பிரேரணையைக் கொண்டு வரவேண்டும் என்பதில் ஏன் தீவிரம் காட்டுகின்றார் எனத் தெரியவில்லை. அவரை அழைத்து இந்தப் பிரேரணையைக் கொண்டுவரவேண்டாம். இதனைப் பிரச்சனையாக்க வேண்டாம் எனக் கூறியபோது மௌனமாக இருந்துவிட்டு சபையில் வந்து பிரேரணை வேண்டும் என்கிறார்.

நாம் அவரைத் தெளிவாக இப்போது புரிந்துகொண்டுவிட்டோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்டுப்பாடுகளை மீறி இந்தப் பிரேரணையை சபையில் விவாதிக்கவேண்டும் எனக் கூறுவதை என்னால் ஏற்க முடியாது. நான் இந்தப் பிரேரணையை ஒரு போதும் விவாத்திற்கு எடுக்க மாட்டேன் என்றார்.

இதனையடுத்து ரெலோ உறுப்பினரான ஈசனுக்கு ஆதரவாக குறித்த பிரேரணையை சபையில் விவாத்திற்கு எடுத்துக்கொள்ளவேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்களும் முதல்வருடன் விவாதத்தில் ஈடுபட்டனர்.

அதன்போது குறுக்கிட்ட தமிழரசுக் கட்சி உறுப்பினரான கிறேசியன் தேவையற்ற பிரேரணைகளை விவாத்திற்கு எடுத்து சபையின் நேரத்தை வீணடிக்க வேண்டாம் எனக் கூறினார். அதனையடுத்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினரான பார்த்திபன் நீங்கள் வாக்குக் கேட்கும்வரை வீதியில் போராடும் மக்களின் கண்ணீரைப் பயன்படுத்தி போலி வாக்குறுதிகள் கூறி தேர்தலில் வென்றுவிட்டு இப்போது அந்த மக்களின் வலிகளும் கண்ணீரும் உங்களுக்கு தேவையற்ற விடயங்களாகத்தானே தெரியும் உங்களைது இந்தக் கருத்தைக் கண்டிக்கின்றேன் எனக் கூறினார்.

குறித்த தமிழரசுக் கட்சி உறுப்பினரின் கருத்தால் கோபமடைந்த ரெலோ உறுப்பினரான துணை முதல்வர் ஈசன் அரசியல் சுயநலன்களுக்காக காலத்திற்கு ஒரு கட்சிக்கு தாவும் உங்களைப் போன்றவர்களுக்கு மக்களின் கண்ணீரும் வலியும் வேடிக்கையானதுதான் என்றார்.

அந்நிலையில் குறித்த பிரேரணையை சபையில் எடுக்கக் கூடாது என தமிழரசுக் கட்சி உறுப்பினர்களுடன் இணைந்து ஈபிடிபி உறுப்பினர்களும் குழப்பங்களில் ஈடுபட்டனர். புளொட் உறுப்பினர் தர்சானந்த குறித்த நிகழ்வுகள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது அவசர அவசராமாக யாருடனோ தொலைபே உரையாடலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.

எனினும் குறித்த பிரேரணையை ஏற்காது விடினும் ஜெனீவா அமர்வு நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் பொது நலன் சார்ந்த பிரேரணையாக ஏற்கவேண்டும் என மாநகரசபைச சட்ட ஏற்பாடுகளைச் சுட்டிக்காட்டி புதிதாக தமது பிரேரணையை ஏற்க வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் கிருபாகரன் கேட்டுக்கொண்டார்.

அதனை எழுத்து மூலம் தந்தால் பரிசீலிக்க முடியும் எனக் கூறிய முதல்வர் ஆர்னோல் பின்னர் குறித்த பிரேரணையையும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேளை இது தொடா்பில் ரெலோ கட்சியின் முக்கியஸ்தரும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான என்.கே. சிவாஜிலிங்கத்தைத் தொடர்புகொண்டு கேட்டபோது,
“இந்தத் தீர்மானம் புதிதாக எம்மால் உருவாக்கப்பட்ட தீர்மானம் அல்ல. இது வடக்கு மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம். அதற்கும் தமிழரசுக் கட்சி ஆதரவளித்திருந்தது. அண்மையில் மட்டக்களப்பு மாநகரசபையிலும் குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. யாழ் மாநகரசயில் முதல்வர் ஆர்னோல்ட் தன்னிச்சையாக செயற்பட்டு இதனை விவாத்திற்கு எடுக்க மறுத்திருக்கிறார். இதனை ரெலோ சார்பில் வன்மையாகக் கண்டிக்கின்றோம். யாரைத் திருப்திப்படுத்த ஆர்னோல்ட் இந்த மோசமான செயலைச் செய்தார் எனத் தெரியவில்லை என்றார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com