இறுதி யுத்தத்திற்குள் சிக்கியவர்கள் குறிதது தகவலில்லை

கிபிர் தாக்குதலில் கொல்லப்பட்ட 450 க்கும் அதிகமான உடல்களின் மத்தியில் எனது மகனை தேடினேன் என கண்ணீர் மல்க தாய் ஒருவர் சாட்சியம் அளித்துள்ளார்.

மேலும் தனது சாட்சியத்தில் குறிப்பிடுகையில், நாம் இடம்பெயர்ந்து மாத்தளன் பகுதியில் தங்கி இருந்தோம். எம்முடன் எமது மகனான சேவியர் உஷாந்தனும் (காணாமல் போகும் போது வயது 17 ) இருந்தார். யுத்தம் தீவிரமடைந்து இருந்த வேளை பாதுகாப்பு வலயம் என கூறப்பட்ட பிரதேசத்தில் நாம் கொட்டகை போட்டு இருந்த பகுதிகளில் மீது 2009ம் ஆண்டு 3ம் மாதம் 09ம் திகதி காலை மதியம் மற்றும் மாலை என மூன்று நேரத்தில் நாம் இருந்த பிரதேசம் மீது கிபீர் விமானம் குண்டு வீசி தாக்குதல் நடாத்தியது. அந்த தாக்குதலினால் எம்முடன் இருந்த பலரும் பல திசைகளாலும் ஓடினார்கள். அவ்வேளை எமது மகன் காணாமல் போய்விட்டார். 
தாக்குதல் ஓய்ந்த பின்னர் மகனை தேடினோம் எங்கும் இல்லை. அந்த தாக்குதலில் அன்றைய தினம் 450க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட 450 பேரின் உடல்களுக்குள் எனது மகனின் உடலும் இருக்கா என தேடி பார்த்தேன் ஒவ்வொரு உடல்களாக பார்த்தேன். மகனின் உடலை காணவில்லை. காயப்பட்டு வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு இருக்கலாம் என வைத்திய சாலைகளிலும் தேடினோம் எங்கும் இல்லை . அன்றைய தினம் எனது மகன் கிபீர் தாக்குதலில் கொல்லப்படவில்லை எனவே மகன் உயிருடன் இருக்கின்றார் என நம்புகின்றேன். என தனது சாட்சியத்தில் குறிப்பிட்டார்.

இறுதி யுத்தத்தில் அகோர செல் வீச்சு. 

இறுதி யுத்தத்தின் போது அகோர செல் வீச்சு இடம்பெற்றதாகவும் அதன் மத்தியில் தமது உடமைகளை எடுக்க சென்ற மகனை காணவில்லை என தாய் ஒருவர் சாட்சியம் அளித்துள்ளார். மேலும் தனது சாட்சியத்தில் தெரிவிக்கையில், இறுதி யுத்தம் நடைபெற்றுக் கொண்டு இருந்த வேளை நாம் இராணுவ கட்டுப்பாட்டு பகுதியை நோக்கி வந்தோம். 
எனது கணவர் காயம் காரணமாக நடக்க முடியாது இருந்தார். அதனால் மகன் அவரை தனது மோட்டார் சைக்கிளில் ஏறிக்கொண்டு வந்து என்னுடன் வட்டுவாகல் பாலத்திற்கு அருகில் இறக்கி விட்டு எம்மை அங்கு நிற்குமாறு கூறி எமது உடமைகளை எடுத்து வருவதற்காக மீண்டும் நாம் இருந்த பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். மகன் உடமைகளை எடுக்க சென்ற வேளை செல் தாக்குதல் நடைபெறவில்லை. சிறிது நேரத்தில் நாம் இருந்த பகுதியை நோக்கி பல திசைகளில் இருந்தும் அகோர செல் தாக்குதல் நடாத்தப்பட்டது அதனால் நாம் அங்கிருந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. நாம் அங்கிருந்து இராணுவ கட்டுபாட்டு பகுதிக்கு சென்றோம். அவர்கள் எம்மை முகாம்களுக்கு அனுப்பி வைத்தனர். முகாமில் இருந்து பலர் ஊடாக எமது மகனை பற்றி விசாரித்தோம் ஆனாலும் எந்த தகவலும் இல்லை என தனது சாட்சியத்தில் கூறினார்.

பதுங்குகுழியில் இருந்து தலை தூக்க முடியாத அளவு செல் வீச்சும், துப்பாக்கி சூடும்.

இறுதி யுத்தத்தின் போது பதுங்கு குழியில் இருந்து தலை தூக்க முடியாத அளவுக்கு செல் வீச்சும் துப்பாக்கி சூடும் இடம்பெற்றது. அதன் போது மகன் காணாமல் போய்விட்டதாக தாய் சாட்சியம் அளித்துள்ளார். மேலும் தமது சாட்சியத்தில் தெரிவிக்கையில், மாத்தளன் பகுதியில் நாம் இருந்த வேளை 2009ம் ஆண்டு 4ம் மாதம் 12 ம் திகதி நள்ளிரவு வேளை எமது கொட்டகைக்கு அருகில் இருந்த மற்றுமொரு கொட்டகையின் தரபாளின் மீது செல் ஒன்று வீழ்ந்து வெடித்து அதில் எந்த கொட்டகைக்குள் தூங்கி கொண்டு இருந்த எனது சகோதரியின் ஒன்பது வயது மகளின் கால் துண்டாடப்பட்டு படுகாயமடைந்தார். உடனே எனது மகனான சுதாகரன் படுகாயமடைந்த பிள்ளையை உடனே தூக்கிகொண்டு வைத்திய சாலைக்கு கொண்டு சென்றார் கூட எனது சகோதரியின் குடும்பமும் சென்றது. முதல் செல் வீழ்ந்த இடத்தை நோக்கி தொடர்ந்தும் செல் வீச்சு இடம்பெற்றது அத்துடன் துப்பாக்கி சூடும் நடாத்தப்பட்டது. நள்ளிரவு தொடக்கம் காலை 7 மணி வரையில் இடைவிடாது நாம் வசித்த பகுதியை நோக்கி செல் வீச்சும் துப்பாக்கி சூடும் மேற்கொள்ள பட்டது அதனால் நாம் பதுங்கு குழியை விட்டு வெளியில் வர வில்லை. காலை செல்வீச்சும் துப்பாக்கி சூடும் ஓய்ந்த பின்னர் எனது மகனையும் சகோதரியின் குடும்பத்தை தேடி வைத்திய சாலைக்கு சென்றோம் அங்கு எனது மகன் சகோதரி குடும்பம் ஆகியோரை காணவில்லை. அன்றை தினத்தின் பிறகு மகன் குறித்தோ சகோதரி குடும்பம் பற்றிய தகவல் இல்லை என தனது சாட்சியத்தில் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com