சற்று முன்
Home / செய்திகள் / இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் ஏதேனும் நடந்ததா ? – தமிழ் மக்கள் பேரவைக்கு வந்த சந்தேகம் !!!

இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் ஏதேனும் நடந்ததா ? – தமிழ் மக்கள் பேரவைக்கு வந்த சந்தேகம் !!!

எழுகதமிழிற்கு 2 ஆயிரம் பேர்வந்தனர், இல்லை மூவாயிரம் பேர் வந்தனர் என ஒரு சாராரும் இல்லையில்லை பல்லாயிரக் கணக்கில் வந்தனர் என இன்னொரு சாராமும் சமூக வலைத்தளங்களில் சேறுபூசல்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்க தமிழ் மக்கள் பேரவையின் எழுக தமிழ் பிரகடனத்தில் முக்கிய பல விடையங்கள் இலங்கை அரசாங்கத்தைக் காப்பாற்றும் வகையில் நீத்துப்போகச் செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தமிழரின் அடிப்படைக் கோட்பாடான தாயக் கோட்பாட்டை ஏற்கவில்லை என்றும் தாயகம் தேசியம் சுய நிர்ணயம் போன்ற விடயங்கள் எழுக தமிழ் கோசங்களில் இடம்பெற்றிருக்கவில்லை என்றும் பரலவாகக் குற்றஞ்சாட்டப்பட்டு வந்தது.

இந்நிலையில் தமிழ் மக்கள் பேரவையின் 2019 ஆம் ஆண்டுக்கான எழுக தமிழ் பிரகடனத்தில் முள்ளிவாய்க்கால் இன அழிப்பு உள்ளிட்ட பல விடையங்கள் நீத்துப் போகச் செய்யும் வகையில் இணைத்தலைவர்களின் ஒருவரான வைத்திய கலாநிதி இலக்சுமனால் உரை நிகழ்த்தப்பட்டுள்ளது.

முள்ளிவாய்காலில் நடைபெற்றது இன அழிப்புத்தான் என்தை வலியுறுத்தாது. அதனைப் போர்க் குற்றமாக சுருக்கியதோடு அதனை “முள்ளிவாய்காலில் இடம்பெற்றதாகக் கூறப்படும்” என முள்ளிவாய்கால் இன அழிப்பையே சந்தேகத்துடனேயே நோக்குவதாக குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த பிரகடனத்தில்
”முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக் எதிரான குற்றங்களுக்குப் பொறுப்பானவர்கள் என பெயர் குறிப்பிடப்பட்டு………” என்றவாறே உரை நிகழ்த்தப்பட்டமை கடும் விமர்சனங்களைத் தோற்றுவித்தது. – என்றுள்ளது.

குறித்த எழுக தமிழ் பிரகடனத்தின் முழு வடிவம் வருமாறு,

செப்டம்பர் 16, 2019
எழுக தமிழ் – 2019 பிரகடனம்
முற்றவெளி, யாழ்ப்பாணம்

அன்பான தமிழ் மக்களே,
இன்று நாம்; முன்னெப்போதும் இல்லாதவாறு சிங்கள பேரினவாதத்தின் திட்டமிடப்பட்ட ஆக்கிரமிப்புக்குள் சிக்குண்டு கிடக்கின்றோம். தமிழ் மண் சிதைவுற்றுள்ளது. தமிழரின் குடித்தொகை வெகுவாக வீழ்ச்சியடைந்துள்ளது. வடக்கில் இருந்து கிழக்கு பிரித்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

தோற்கடிக்கப்பட்ட மக்கள் என்ற மனநிலையுடன் எமது தாயகம் தேர்தல் அரசியற் சகதிக்குள் மூழ்கியுள்ளது. நம்பிக்கையற்ற நடைபிணங்களாய் ஈழத் தமிழ் மக்கள் அரசியற் பாலைவனத்தில் தள்ளப்பட்டுள்ளனர்.
2015ஆம் ஆண்டு இனப்பிரச்சினைக்கான ஓர் தீர்வாகவும், சர்வதேச சமூகம் நம்புவதுபோல நிலைமாறுகால நீதிக்காகவும் தமிழ் மக்கள் மத்தியில் நல்லாட்சியென அறிமுகப்படுத்தப்பட்டதற்கு தமிழ் மக்கள் வழங்கிய ஆதரவானது கடந்த ழுஉவழடிநச மாதம் ஆட்சிக் குழப்பத்தோடு வழமைபோல தோல்வியில் முடிவுற்றது.

சிங்கள பௌத்த மேலாதிக்க ஒடுக்குமுறைக்கு எதிராக போராடிவரும் தமிழ்த் தேசமானது பல்வேறுபட்ட நெருக்கடிகளையும், அழுத்தங்களையும் சந்தித்த பொழுதும் தனது அடிப்படையான கூட்டுரிமைகளில் எப்போதுமே உறுதியாக இருந்து வருகின்றது.

இவ்வாறான ஓர் சூழலில் இன்றைய எழுக தமிழ் 2019 தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் பொது மக்கள், அமைப்புக்கள், புலம் பெயர் சமூகம், நட்புறவு சக்திகள் மற்றும் அரசியற் கட்சிகள் என அனைத்துத் தரப்பினரதும் பங்குபற்றுதலுடன் தமிழ்த் தேசிய எழுச்சியாக எழுந்து நிற்கின்றது.

இப் பேரெழுச்சியானது நம்பிக்கையிழந்த எம் மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்களின் ஒன்றுபட்ட எழுச்சியாகவும், பல்வேறு நாடுகளில் உலகத் தமிழர்கள் முன்னெடுக்கும் ஒருமைப்பாட்டு; எழுச்சிகளின் திரட்சியாகவும் தென்னிலங்கைக்கும், இலங்கைத் தீவின் மீது கரிசனை கொண்டிருக்கும் சர்வதேச சக்திகளுக்கும் ஒரு வலுவான செய்தியை சொல்லி நிற்கின்றது.

இலங்கையில் தமிழினம் இன்று மிக மோசமான ஒரு சூழலை எதிர் கொண்டுள்ளனர். முள்ளிவாய்க்கால் படுகொலைகளை நிகழ்த்திய அகந்தையோடு சிங்கள பௌத்த விரிவாக்கமானது முன்னெப்போதும் இல்லாதளவில் முன்னெடுக்கப்படுகின்றது. இராணுவ நிலைகளை அதிகரித்தல் அதனைச் சுற்றி பௌத்த விகாரைகளையும், சிங்களக் குடியேற்றங்களையும் நிறுவுதல் உட்பட எமது வழிபாட்டுத் தலங்கள், மற்றும் பண்பாட்டு மையங்களை இல்லாமலாக்கும் செயற்பாடுகள் வனபரிபாலனத் திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம், தொல்பொருள் திணைக்களம், கடல் நீரியல் திணைக்களம், கனிமவியல் திணைக்களம், கமத்தொழில் திணைக்களம், உல்லாசப் பயணத் துறை, மகாவலி அபிவிருத்தி அதிகார சபை போன்றவற்றின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறு சர்வதேச சமூகம் வெளிப்பார்வையில் கண்டுகொள்ள முடியாத நுட்பமான வழிமுறைகளைக் கையாண்டு எமது வாழ்வியல், பொருளாதார, பண்பாட்டு அடையாளங்களை சிதைத்து வருவதுடன் தமிழ் மக்களின் வளங்களையும் ஆக்கிரமிப்பு செய்து வருகின்றது.

கன்னியாவில், தென்னமரவாடியில், பழைய செம்மலையில், வெடுக்குநாறி மலையில், நாவற்குழியில் என தமிழர் நிலமெங்கும் தீவிரப்படுத்தப்படும் ஆக்கிரமிப்புக்கள் கட்டமைக்கப்பட்ட சிங்களப் பேரினவாதத்ததின் தமிழ் மக்கள் மீதான தொடர்ச்சியான இனவழிப்பு நிகழ்ச்சி நிரலை உறுதி செய்து நிற்கின்றது.
தமிழ் மக்கள் தமக்கு இழைக்கப்பட்டுவரும் அநீதிகளுக்கான நீதியையும் அவை மீள நிகழாமைக்கான உறுதிப்பாட்டையும் வேண்டி சர்வதேசத்தின் முன்னிலையில் தொடர்ந்தும் போராடிவருகின்றனர்.

இந்நிலையில் ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைச் சபை தமிழ் மக்களை திருப்திப்படுத்தாத தீர்மானங்களை தமிழ் மக்களின் பலமான எதிர்ப்பின் மத்தியிலும் முன்வைத்து அதனை நடைமுறைப்படுத்தக் கோரி இலங்கை அரசாங்கத்திற்கு இரண்டு தடவைகளாக நான்காண்டு கால அவகாசத்தை வழங்கியிருந்தும், அதனை கிஞ்சித்தும் மதிக்காத இலங்கை அரசு மாறாக சர்வதேச சமூகத்திற்கே சவால் விடும் வகையில் போர்க் குற்றவாளிகளையே மிக உயர் பதவிகளுக்கு நியமித்து வருகின்றது. இதன் உச்சமாக அண்மையில் நடந்த இராணுவத் தளபதியின் நியமனத்தைக் காணலாம்.

முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக் எதிரான குற்றங்களுக்குப் பொறுப்பானவர்கள் என பெயர் குறிப்பிடப்பட்டு ஆதாரங்களோடு இலங்கை இராணுவத்தினர் குற்றச்சாட்டுகளுக்கு உட்பட்டிருக்கின்ற போதும், இன்று வரை ஒருவர் கூட கைது செய்யப்படவோ, விசாரணை செய்யப்படவோ இல்லை என்பதிலிருந்து இலங்கையின் உள்நாட்டுப் பொறிமுறை மீது நாம் நம்பிக்கை கொள்ள முடியாது என்பது தெளிவாகிறது. இந்நிலையில்தான் எமக்கு எதிராக இழைக்கப்பட்ட இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி விசாரணையை கோரி நிற்கின்றோம்.

இலங்கைத் தீவின் சிங்கள பௌத்த அரசக் கட்டமைப்பு பொறுப்புக் கூறத் தயாரில்லை. எனவே பன்னாட்டு விசாரணையை தவிர வேறு வழியில்லை. இதனைச் சர்வதேச சமூகம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

யுத்தம் முடிவுக்கு வந்து பத்தாண்டு காலத்தின் பின்னரும் அரசியல் கைதிகளுக்கு தீர்வு கிடைக்கவில்லை. பயங்கரவாத தடைச்சட்டம் உள்ளவரை அரசியற் கைதிகளுக்கு நீதி கிடைக்கப் போவதில்லை. பயங்கரவாத தடைச்சட்டத்தை ஒரு கருவியாகக் கையாண்டு தமிழ் சிவில் எதிர்ப்புக்களை – தன்னெழுச்சியான மக்கள் போராட்டங்களை அரசு அச்சுறுத்தி வருகின்றது. இது இன்று யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் கைது வரை சென்றிருக்கின்றது.
அரசியல் கைதிகள் விவகாரத்தில் எமது மக்கள் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாக நடாத்தப்படுகிறார்கள் என்பதற்கு போர் முடிந்து பத்தாண்டுகள் கடந்தும் தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலைக்காக காத்திருப்பது வெளிப்படையான எடுத்துக்காட்டாகும். ஜே.வி.பி கிளர்ச்சியின் பின்னர் அவர்களுடைய போராளிகள் எதுவித நிபந்தனைகளுக்கும் அப்பால் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார்கள். மாறாக தமிழ் இளைஞர்கள் போர் முடிந்து பத்தாண்டுகள் கடந்தும் நீதியான விசாரணைகள் ஏதுமின்றி சந்தேகத்தின் பேரில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் அனைவரும் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட வேண்டும். அவ்வாறு விடுதலை செய்யப்படும் போதுதான் இலங்கை அரசானது நீதி, பொறுப்புக் கூறல் மற்றும் நல்லிணக்கம் பற்றிப் பேசமுடியும்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் 900 நாட்களைக் கடந்து விட்டது. அதற்கான தீர்வு எதுவும் கிடைக்கப் பெறவில்லை. பதிலாக அப்போராட்டங்களை நீர்த்துப்போகச் செய்யும் நோக்குடன் அரசாங்கம் காணமல் போனார் அலுவலகங்கள் என்னும் போர்வையில்; அலுவலகங்களைத் திறந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதம் 6000 ரூபா தருவதாக கூறுகின்றனர். காணமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் தமது சொந்தங்களுக்காக நீதி கேட்டு மட்டுமே போராடுகின்றார்களே தவிர நிவராணங்களுக்காக அல்ல.

குறிப்பாக வட்டுவாகல் மற்றும் ஓமந்தைச் சோதனைச் சாவடிகளில் தமது உறவுகளை இராணுவத்திடம் கையளித்த பெற்றோரும், வாழ்க்கைத் துணைகளும், சகோதரரர்களும், உறவினர்களும் இன்றும் கண்கண்ட சாட்சிகளாக இருக்க, அவர்களுடைய சாட்சிகளின் அடிப்படையில் உண்மைகளைக் கண்டறிந்து இப்பிரச்சினைக்கு நீதியான தீர்வினை வழங்குவதற்கு மறுத்து வருகின்ற இலங்கை அரசாங்கம் தற்போது காணாமல் போனோர் அலுவலகங்களைத் திறந்து பாதிக்கப்பட்ட மக்களையும் சர்வதேச சமூகத்தினையும் தொடர்ந்தும் ஏமாற்றி வருகின்றது.

இலங்கை அரசானது இராணுவ மயமாக்கலின் ஊடாக தமிழ் சமூகத்தினைப் பிளவுபடுத்தி, சமூக உறவு முறைகளைச் சிதைத்து, தமிழர் கூட்டாக ஜனநாயக ரீதியில் அணிதிரள்வதற்கு எதிராக திட்டமிட்டு தடைகளை ஏற்படுத்தி வருகிறது. தொடர்ந்தும் மக்களது காணிகளை சுவீகரித்து வைத்திருப்பதன் மூலம் உல்லாச விடுதிகள், விவசாயப் பண்ணைகள், இதர வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்களின் வாழ்வாதாரத்தை பறிப்பதுடன் தொடர்ந்தும் பொதுச் சேவை நிர்வாக விடயங்களிலும் தலையீடு செய்து வருகின்றது.
படைத் தரப்பினரின் ஒத்துழைப்புடன் தென்னிலங்கை மீனவர்களால் எமது பிரதேசக் கடல் வளங்கள் அபகரிக்கப்படுகின்றன. தென்னிலங்கை மீனவர்கள் வடகிழக்கு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைவதுடன், வாடிகளை அமைத்து தமிழ் மீனவர்களது வாழ்வாதாரங்களை ஆக்கிரமிப்பதன் மூலம் எமது மீனவர்கள் சொந்த இடங்களிலிருந்து வெளியேற வேண்டிய சூழல் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது.

மேலும் தென்னிலங்கை மீனவர்கள் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் ஊடாக எமது கடல் வளம் சிதைக்கப்படுகின்றது. இவையாவும் அரச பாதுகாப்புத் தரப்பினரின்; ஊக்குவிப்புடன் முன்னெடுக்கப்படுகின்றது. வடக்கில் சில துறைமுக அபிவிருத்தி திட்ட முன்னெடுப்புக்கள் தமிழருக்கான அபிவிருத்திகளாக காட்டப்பட்டாலும் அது உண்மையில் தென்னிலங்கை மீனவர்களுக்கான பாதுகாப்பான தரிப்பிடங்களுக்காகவே அமைக்கப்படுகின்றன. அங்கு தென்னிலங்கை மீனவர்களின் அதிக பிரசன்னமும் அவர்களுக்கான படைத்தரப்பினரின் ஒத்துழைப்பும் தமிழ் மீனவர்களின் தொழிலை பாதிப்பதுடன் தமிழர் தமது சொந்த வாழ்விடங்களிலேயே தாழ்வு நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

இடம்பெயர்ந்த மக்கள் அவர்களது பாராம்பரிய வாழ்விடங்களில் குடியமர முடியாத நிலை இன்னமும் தொடர்கின்றது.
வடகிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளிலே தொடர்ந்தும் மேற்கொள்ளப்படுகின்ற சிங்களக் குடியேற்றங்கள் மற்றும் பௌத்த மயமாக்கல் செயற்பாடுகளுக்கு பூரண அனுசரணையையும், பாதுகாப்பையும் வழங்குவதினூடாக இலங்கை இராணுவம் தமிழர்களின் இருப்பினை மலினப்படுத்துகின்றது.

இந் நிலையிலேயே எம்மக்கள்; தமிழ் தலைமைகளுக்கும் முன் சென்று தாமாகவே பல போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

கேப்பாப்பிலவு காணி விடுவிப்பு போராட்டம், கிழக்கிலும் வடக்கிலும் முன்னெடுக்கப்படும் காணமால் ஆக்கப்பட்டோருக்கான போராட்டம், தமிழ் அரசியற் கைதிகள் விடுதலைக்கான போராட்டம், நீராவியடிப் பிள்ளையார் கோவில் போராட்டம், கன்னியா வெந்நீருற்றுப் போராட்டம், கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரமுயர்துவதற்கான போராட்டம் என தமது அன்றாடக் கோரிக்ககைகள் தொடக்கம் அரசியல் விடயங்களையும் முன்வைத்து போராட்டங்களை தொடர்ச்சியாக நடாத்தி வருகின்றனர்.

இவ்வாறு இன்று மக்கள் தலைமையேற்றிருக்கும் தமிழ்த் தேசிய அரசியலை மேலும் வலுவாக்கி, இருக்கக் கூடிய சர்வதேச நிலைமைகளையும், சந்தர்ப்பங்களையும் பயன்படுத்தி சிறீலங்கா அரசின் அப்பட்டமான இனவழிப்பு நடவடிக்கைகளைப் பற்றிப் பேசவும், அதனை எதிர்க்கவும், தடுக்கவும,; போர்க்குற்றங்கள் மற்றும் தமிழ் இனவழிப்பு மீதான சர்வதேச விசாரணையை அழுத்தவுமாக நாம் மீண்டும் மீண்டும் தேசமாய் திரட்சி பெற வேண்டியுள்ளது.
மேலும,; தமிழ் மக்களுக்காகன அரசியற் தீர்வு விடயத்தில்: தமிழ் மக்களுக்கான பாதுகாப்பு என்பது அவர்களை சுயநிர்ணய உரிமையடன் கூடிய ஓர் தேசிய இனமாக அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையில் அமைந்தாலே ஒழிய வேறில்லை என்பதை தொடர்ச்சியான வரலாறும் தொடரும் நிலைமைகளும் மீண்டும் மீண்டும் இடித்துரைத்து நிற்கின்றன.

அந்த வகையில், இலங்கையில் தமிழ் மக்களுக்கான எந்தத் தீர்வுத் திட்ட முயற்சியும் தமிழ் மக்கள் பேரவையினால் முன்வைக்கப்பட்ட தீர்வுத் திட்டத்தில் வலியுறுத்தப்பட்டவாறு பிரிக்கப்பட முடியாத வடக்குக் கிழக்குத் தாயகத்தில் தமிழ்த் தேசமும், அதனுடைய இறைமையும் அங்கீகரிக்கப்பட்டு சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான சமஸ்டித் தீர்வாகவே அமைய வேண்டும் என்பதை மீண்டும் ஒரு முறை சர்வதேச சமூகத்திற்கும் சிங்கள அரசியற் தலைவர்களுக்கும் தமிழ் மக்கள் பேரவை வலியுறுத்திக் கூற விரும்புகின்றது.

தற்போது அரசியல் அமைப்புச் சபையினால் தயாரிக்கப்பட்டு பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் புதிய அரசியல் யாப்பிற்கான இடைக்கால அறிக்கையானது உள்ளார்ந்த ரீதியில் 13ஆம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் ஒற்றையாட்சி முறையையும் சிங்கள பௌத்த மேலாதிக்க நிலையையும் மேலும் வலுப்படுத்துவதற்கான ஓர் யோசனையாகும். அதனை தமிழ் மக்களாகிய நாம் முற்று முழுதாக நிராகரிக்கின்றோம் என்பதை எமது இப்பேரெழுச்சியின் மூலம் சிங்கள தேசத்திற்கும், சர்வதேசத்திற்கும் உரத்துச் சொல்லுவோம்.

இந்த வகையிலேயே எம்மக்கள் முன்னின்று நடாத்தும் பேராட்டங்களின் கோரிக்கைகளும் தமிழ் மக்களது அரசியற் தீர்வு தொடர்பில் தமிழ் மக்கள் பேரவையினது தீர்வுத் திட்ட யோசனைகளும் இவ் எழுக தமிழ் பேரெழுச்சியின் பிரகடனங்களாக நிமிர்ந்து நிற்கின்றன.
இலங்கை அரசே, சர்வதேசமே!!
 சிங்கள பௌத்த மயமாக்கலை உடனடியாக நிறுத்து
 பயங்கரவாத தடைச் சட்டத்தை உடனடியாக நீக்கு
 தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்
 வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் நீதியான தீர்ப்பை முன்வை
 வடக்கு-கிழக்கில் இராணுவ மயமாக்கலை நிறுத்து
 இடம்பெயர்ந்த அனைவரையும் அவர்களது பாரம்பரிய இடங்களில் மீளக்குடியமர்த்து
 சர்வதேசமே! இலங்கையில் தமிழர் மீதான இனவழிப்பு விசாரணையை நடத்து

எமது மக்களின் தொடர் போராட்டங்களையும், எழுச்சிகளையும் நமது தேசத்தின் பலமாக மாற்றுவது தொடர்பாக நாம் காத்திரமான யோசனைகளை முன்வைத்துச் செயற்பட வேண்டியுள்ளது. அந்த வகையில் இவ் எழுக தமிழ் பரப்புரையின் போது நாம் சந்தித்த மக்கள் மற்றும் பொது அமைப்புக்களுடனான உரையாடல்களின் போது அவர்கள் முன்வைத்த கருத்துக்களை உள்வாங்குதோடு, தொடர்ந்தும் எமக்கான ஒரு வலுவான மக்கள் இயக்கத்தின் அவசியத்தில் அதற்கான காத்திரமான செயற் திட்டங்களை முன்வைத்து எமது தேசிய அரசியலுக்கான வலுவான மக்கள் இயக்கத்தை கட்டியெழுப்புவோம் என உறுதி பூணுவோமாக….

தமிழ்த் தேசிய அரசியல் அடிப்படைகள் பேரம் பேச முடியாதவை, அவ்வாறே அதனைத் தாங்கி நிற்கும் தமிழ் தேசத்தின் திரட்சியான எழுக தமிழும் என்றுமே பேரம் பேச முடியாதவை.

எழுக தமிழ், எழுக தமிழ், எழுக தமிழ்

பூ.லக்ஸ்மன்
இணைத்தலைவர்

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

எழுச்சிகொண்டது தமிழர் தாயகம் தடைகளை மீறி மாவீரர்களுக்கு அஞ்சலி

தடைகள் , அச்சுறுத்தல்கள் , கண்காணிப்புகள் கெடுபிடிகள் என்பவற்றை தாண்டி வடக்கு கிழக்கு எங்கும் மாவீரர் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com