இருவரும் சந்தித்துப் பேசுவோம் – வடக்கு முதல்வரின் வாழ்த்திற்கு தமிழக முதல்வர் நன்றி

jaya-wigneswaran-300x225சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்த இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரனுக்கு முதல்வர் ஜெயலலிதா நன்றி தெரிவித்துள்ளார். சட்டசபை தேர்தலில் 134 இடங்களில் வென்று அதிமுக ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. முதல்வராக 6-வது முறையாக ஜெயலலிதா பதவியேற்றுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதாவுக்கு இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் வாழ்த்து தெரிவித்திருந்தார். அவர் தமது வாழ்த்து செய்தியில், தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் முதலமைச்சராக தெரிவாகியுள்ளமைக்கு ஈழத்தமிழ் மக்கள் சார்பில் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். வருங்காலத்தில் ஈழத்தமிழ் மக்களுக்கு பலவிதமான நன்மைகளை செய்வார் என எதிர்பார்க்கிறேன். தமிழ் நாட்டு மக்கள் மீண்டும் அவரையே முதலமைச்சராக தேர்ந்தெடுத்துள்ளமை மக்கள் மத்தியில் அவருக்கு இருந்த செல்வாக்கை எடுத்துக் காட்டுகின்றது. அதனால் தொடர்ந்து அவர் தமிழக மக்களுக்கும் ஈழத்து தமிழ் மக்களுக்கும் பல நன்மைகள் செய்ய வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கின்றேன் என கூறியிருந்தார்.
இந்நிலையில் தமக்கு வாழ்த்து தெரிவித்த விக்னேஸ்வரனுக்கு முதல்வர் ஜெயலலிதா நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அனுப்பிய கடிதத்தில், வடகிழக்கு மாகாண தமிழர்கள் உரிய நீதியைப் பெற மத்திய அரசு மூலம் தொடர்ந்து நடவடிக்கை எடுப்போம் இலங்கை தமிழர் நலன் தொடர்பாக இருவரும் நிச்சயம் சந்திப்போம் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com