சற்று முன்
Home / செய்திகள் / “இராணுவம் கொன்றதற்கு ஆதாரம் இல்லை” – திருமலை 5 மாணவர் படுகொலை வழக்கிலிருந்து 13 இராணுவத்தினரும் நிரபராதிகள் என விடுவிப்பு

“இராணுவம் கொன்றதற்கு ஆதாரம் இல்லை” – திருமலை 5 மாணவர் படுகொலை வழக்கிலிருந்து 13 இராணுவத்தினரும் நிரபராதிகள் என விடுவிப்பு

திருகோணமலையில் க.பொ.த உயர்தரப் பரீட்சை எழுதிவிட்டு பல்கலைக்கழக தேர்வுக்காகக் காத்திருந்த ஐந்து மாணவர் கொலை வழங்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த பாதுகாப்பு தரப்பினர் அனைவரும் நிரபராதிகள் என திருகோணமலை நீதவான் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

வழக்கு விசாரணையை எதிர்கொண்டிருந்த 12 விஷேட அதிரடிப்படையினரையும் ஒரு பொலிஸ் அதிகாரியையும் அனைத்துக் குற்றச்சாட்டுக்களிலிருந்தும் திருகோணமலை நீதிவான் நீதிமன்றம் இன்று விடுவித்தது.

2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் திகதி மாணவர்கள் ஐவர் கடற்கரையில் நின்றிருந்தவேளை அங்கு வருகைதந்த இராணுவத்தின் சிறப்பு அதிரடிப்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர்.

மனோகரன் ரஜீகர், யோகராஜா ஹேமச்சந்திரா, லோகிதராஜா ரோகன், தங்கதுரை சிவானந்தா மற்றும் சண்முகராஜா கஜேந்திரன் ஆகிய ஐந்து மாணவர்களுமே சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.

படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களுக்கும் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டத்தால் அவர்கள் நாட்டைவிட்டுத் தப்பி வெளிநாட்டில் புகலிடம் கோரியுள்ளனர்.

இந்தக் படுகொலையை அரசும், இராணுவத்தினரும், பொலிஸாரும் மறுத்து வந்ததுடன், பின்னர் இவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் எனவும், இவர்கள் இராணுவத்தினரைத் தாக்கமுற்றபட்ட சமயம் கைக்குண்டு வெடித்தே உயிரிழந்தனர் எனத் தெரிவித்தனர்.

இருப்பினும், மாணவர்கள் அனைவரும் கிட்ட நின்று துப்பாக்கியால் சுடப்பட்டமை சட்ட மருத்துவ பரிசோதனையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.

இது தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் மற்றும் 12 சிறப்பு அதிரடிப்படையினர்கள் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் 2013ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் திகதி கைதுசெய்யப்பட்டனர்.

எனினும், கைது செய்யப்பட்ட அனைவரும் 2013ஆம் ஆண்டு ஒக்டோபர் 14ஆம் திகதி திருகோணமலை நீதிவான் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

13 அரச படையினருக்கும் எதிராக திருகோணமலை நீதிவான் நீதிமன்றால் ஆரம்ப விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது. 36 பேர் சாட்சிகளாக பெயரிடப்பட்டனர். அவர்களில் முக்கிய சாட்சிகள் 8 பேர் மன்றில் முன்னிலையாகி சாட்சியமளிக்கவில்லை. அவர்களில் இருவர் சம்பவத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்தவர்களாவர்.

திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எம்.எம்.மொகமெட் ஹம்சா முன்னிலையில் இந்த வழக்கு இன்று கட்டளைக்காக வந்தது.

“வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 13 எதிரிகள் மீதான குற்றச்சாட்டுக்கள் மன்று திருப்தியடையும் வகையில் சான்றாதாரங்கள் முன்வைக்கப்படவில்லை. அதனால் குற்றவியல் நடைமுறைச் சட்டக்கோவை 153 மற்றும் 154ஆம் பிரிவுகளின் கீழ் எதிரிகள் மீதான குற்றச்சாட்டுக்கள் சான்றாதாரங்களுடன் முன்வைக்கப்படவில்லை. அதனால் 13 எதிரிகளும் அனைத்துக் குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவிக்கப்படுகின்றனர்” என்று நீதிவான் எம்.எம்.மொகமெட் ஹம்சா கட்டளை வழங்கினார்.

இலங்கையின் நீதிப்பொறிமுறை குறித்து சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்த விவகாரமாக காணப்பட்ட குறித்த வழக்கிலிருந்து இராணுவத்தினர் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். இது இலங்கையில் இறுதிப் போரின் போது நடைபெற்ற குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை தேவையில்லை உள்ளக விசாரணையே போதும் என வாதாடும் தரப்பினருக்கு சாட்டை அடியாக அமைந்திருக்கிறது.

இதேவேளை, 13 அரச படையினருக்கும் எதிராக சட்ட மா அதிபர் தனக்குள்ள அதிகாரத்தின் படி மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை செய்ய சட்ட ஏற்பாடுகள் உண்டு. எனினும் அது நடைபெறுமா என்பது கேள்விக் குறிதான்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com