சற்று முன்
Home / செய்திகள் / இராணுவத்தளபதி தமிழ்க்கட்சிகளை விமர்சனம் செய்வது ஜனநாயக அரசியலின் குரல்வளையை நெரிக்கும் செயல்

இராணுவத்தளபதி தமிழ்க்கட்சிகளை விமர்சனம் செய்வது ஜனநாயக அரசியலின் குரல்வளையை நெரிக்கும் செயல்


வெசாக் பண்டிகைக்கு மடைதிறந்த வெள்ளம்போல் மக்கள் கூட்டங்கூட்டமாகக் கலந்துகொள்கிறார்கள். இதற்கு வந்த யாழ்ப்பாண மக்களின் ஐந்திலொரு பங்கினர்கூட யாழ்ப்பாணத்தில் உள்ள சில அரசியற்கட்சிகளின் கூட்டங்களுக்கு வருவதில்லை. மக்களின் மனங்களை வெல்லமுடியாத இக்கட்சிகளே இராணுவம் யாழ்ப்பாணத்தைப் பௌத்த மயமாக்கிவருகின்றதாகக் குற்றஞ்சாட்டகின்றன என்று யாழ்.மாவட்டக் கட்டளைத்தளபதி மேஜர் ஜென்ரல் தர்சன ஹெட்டியாராச்சி தெரிவித்ததாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

இராணுவத்தளபதி ஒருவர் இவ்வாறு தமிழ் அரசியற்கட்சிகளை வெளிப்படையாக விமர்சனம் செய்வது ஜனநாயக அரசியலின் குரல்வளையை நெரிக்கும் ஒரு இராணுவ வன்முறையாகும். இவ்வாறு வடக்கு மாகாணசபை உறுப்பினரும் தமிழ்த்தேசியப்பசுமை இயக்கத்தின் தலைவருமான பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

இராணுவத்தளபதி தர்சன ஹெட்டியாராச்சி தெரிவித்தாக ஊடகங்களில் வெளியான கருத்துக்கள் தொடர்பாக பொ.ஐங்கரநேசன் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்திருக்கும் அறிக்கையிலேயே இவ்வாறு தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
அந்த அறிக்கையின் முழுவடிவம் பின்வருமாறு,

வெசாக் பண்டிகைக்கு மடைதிறந்த வெள்ளம்போல் மக்கள் கூட்டங்கூட்டமாகக் கலந்துகொள்கிறார்கள். இதற்கு வந்த யாழ்ப்பாண மக்களின் ஐந்திலொரு பங்கினர்கூட யாழ்ப்பாணத்தில் உள்ள சில அரசியற்கட்சிகளின் கூட்டங்களுக்கு வருவதில்லை. மக்களின் மனங்களை வெல்லமுடியாத இக்கட்சிகளே இராணுவம் யாழ்ப்பாணத்தைப் பௌத்தமயமாக்கி வருகின்றதாகக் குற்றஞ்சாட்டுகின்றன என்று யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜென்ரல் தர்சன ஹெட்டியாராச்சி தெரிவித்ததாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

அரசஊழியர்கள் வெளிப்படையாக அரசியல் பேசுவது அவர்கள் சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட தாபனவிதிக்கோவைக்கு எதிரானது. அத்தோடு, அரசஊழியரான இராணுவத்தளபதி அரசியல் பேசுவது இராணுவ ஒழுக்கவிதிகளுக்கும் முரணானது. அந்தவகையில் இராணுவத்தளபதியின் தமிழ்க்கட்சிகளின் மீதான விமர்சனம் ஏற்றுக்கொள்ள முடியாதது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இராணுவத்தளபதியின் இவ்வாறான அரசியல்கருத்துகளை பௌத்த சிங்கள மேலாதிக்கத்தின் வெளிப்பாடாக மாத்திரம் கருதமுடியாது. இராணுவ அதிகாரியாக இவர் தெரிவித்திருக்கும் விடயங்கள் போருக்குப் பின்னர் தமிழ்மக்கள் மத்தியில் முகிழ்த்துவரும் ஜனநாயக அரசியலின் குரல்வளையை முளையிலேயே நெரிக்கும் ஒரு இராணுவ வன்முறையும் ஆகும்.

மக்களின் மனங்களை வெல்லும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்து ஆலயங்களைப் புனரமைக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கட்டளைத் தளபதி தெரிவித்துள்ளார். ‘ஆமிக்காரன் வாறான், ஓடுங்கள்’ என்று சொன்ன வாயால் ‘ஆமி மாமா வாறார்’ என்று சொல்லவைக்கவேண்டும் என்று அவர் விரும்புகின்றார். ஆனால், இராணுவம் பொதுமக்களுக்கு எவ்வளவுதான் உதவி செய்தாலும் அவர்களால் யுத்தத்தால் கொடூரமாகப் பாதிக்கப்பட்ட தமிழ்மக்களின் மனங்களை வெல்லமுடியாது. வெசாக்கொண்டாட்டத்தை வேடிக்கை பார்க்கவரும் மக்கள் கூட்டத்தைவைத்து இவ்வாறான ஒரு முடிவுக்கு வருவது வேடிக்கையானது.
மக்கள் மனங்களை வெல்லவேண்டியது அரசாங்கத்தரப்பே அல்லாமல் இராணுவத்தினர் அல்லர்.

புதிய அரசியல் அமைப்புக்கான வரைபிலும் பௌத்த மதத்துக்கே முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. நடைபெற்றுமுடிந்த உள்ளுராட்சிசபைத் தேர்தலுக்கான தேர்தல்விஞ்ஞாபனத்தில் ஐக்கிய தேசியக்கட்சி வடக்கு – கிழக்கில் ஆயிரம் விகாரைகளை அமைப்பதற்காக நிதி ஒதுக்குவதாக எவ்வித தயக்கமும் இன்றித் தெரிவித்திருக்கிறது.
இந்நிலையில் வடக்கு – கிழக்கில் பெரும் எடுப்பில் நடாத்தப்படும் வெசாக் கொண்டாட்டங்களைப் பௌத்த மேலாதிக்கமாகத் தமிழ்மக்கள் கருதுவதில் தவறேதுமில்லை.

தமிழ்மக்களின் பிரதிநிதிகளான தமிழ்க்கட்சியினரும் இக்கருத்தை வெளிப்படையாகப் பேசுவதிலும் குற்றங்காண்பதற்கில்லை. இவற்றை அரச அதிகாரியான இராணுவத்தளபதி புரிந்துகொண்டு நா காப்பது அவர் விரும்புகின்ற இன நல்லிணக்கத்துக்கு அவசியமாகும்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com