அமெரிக்காவில் இரவு கேளிக்கை விடுதியில் துப்பாக்கிச் சூடு… 50 பேர் பரிதாப பலி..!

A2

அமெரிக்காவிலுள்ள கேளிக்கை விடுதிக்குள் ஆயுதம் தாங்கிய நபர் புகுந்து கண்மூடித்தனமாக சுட்டதில், 50 பேர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர். ஆப்கானிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த வாலிபர் ஒருவர் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

அமெரிக்காவில் உள்ள ஃபுளோரிடா மாகாணத்தில் ஆர்லண்டோ நகரில், ‘பல்ஸ்’ என்ற பெயரில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான இரவு விடுதி செயல்பட்டு வருகிறது. அந்த விடுதியில் நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய கேளிக்கை கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில், நேற்று அதிகாலை 2 மணியளவில் திடீரென அங்கு துப்பாக்கியுடன் நுழைந்த வாலிபர் ஒருவர், அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டார். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. அங்கு வந்திருந்தவர்கள் உயிர் பிழைப்பதற்காக அலறியபடி அங்குமிங்கும் ஓடினர். சிலர் கழிவறைகளுக்குள் புகுந்து மறைந்து கொண்டனர். இன்னும் சிலர் வெளியே ஓட்டம் பிடித்தனர். ஆனாலும், ஏராளமானவர்கள் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்தனர்.A3

இந்த தகவல் அறிந்த போலீஸ் படையினர், விரைந்து வந்து, துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை சுட்டுக் கொன்றனர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 20 பேர் உயிரிழந்து விட்டதாகவும், 40-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளதாகவும், இந்த தாக்குதல் தீவிரவாத குழுக்களின் கைவரிசையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் ஆர்லண்டோ போலீஸ் வட்டாரங்கள் முதலில் தெரிவித்தன.

ஆனால் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தின்போது 50 பேர் கொல்லப்பட்டதாகவும், 53 பேர் படுகாயம் அடைந்ததாகவும் ஆர்லண்டோ நகர மேயர் பின்னர் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக எப்.பி.ஐ. என்னும் மத்திய புலனாய்வு படை செய்தி தொடர்பாளர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ”இந்த துப்பாக்கிச்சூடு நடத்திய நபர், போராளி குழுக்களுடன் தொடர்பு வைத்திருந்தவராக இருக்கலாம் என சந்தேகிக்கிறோம். ஐ.எஸ். இயக்கத்துடன்கூட தொடர்பில் இருந்திருக்கலாம்” என்று கூறினார்.

அந்த விடுதியில் நள்ளிரவு 2 மணியளவில் ஒரு நபர் திடீரென துப்பாக்கியால் சரமாரியாக சுடத் தொடங்கினார். தொடர்ந்து ஏற்பட்ட குழப்பத்தில், பலர் அங்கிருந்து தப்பி வெளியேறினர். முப்பதுக்கும் மேற்பட்டோர் விடுதிக்குள் சிக்கிக் கொண்டனர். சுமார் 3 மணி நேரம் அவர்கள் பிணைக் கைதிகளாக இருந்ததாக போலீஸார் கூறினர். துப்பாக்கிச் சூடு விவரத்தை அறிந்து அந்த இடத்துக்கு அதிரடிப் படையினர் வரவழைக்கப்பட்டனர்.A4

பிணைக் கைதிகளின் உயிருக்கு ஆபத்தின்றி மீட்பு நடவடிக்கையில் ஈடுபடுவது குறித்து திட்டமிட்டு, அதிகாலை 5 மணிக்கு விடுதிக்குள் அவர்கள் நுழைந்தனர். அதைத் தொடர்ந்து நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் அந்த நபரை அதிரடிக் காவல் படையினர் சுட்டு வீழ்த்தினர். கேளிக்கை விடுதியில் துப்பாக்கிச் சூடு நடத்திய அந்த நபரின் பெயர் ஒமர் மதீன் என்றும், அவர் ஃபுளோரிடா மாகாணம், போர்ட் செயின்ட் லூசி பகுதியைச் சேர்ந்தவர் என்றும் ஊடகங்கள் தெரிவித்து உள்ளன.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தின்போது இரவு விடுதிக்குள் இருந்த ரிச்சர்டு நெக்ரோனி என்பவர் கூறும்போது, ”துப்பாக்கிக்சூடு சத்தம் கேட்டதுதான் தாமதம், பலர் விடுதியை விட்டு ஓட்டம் பிடித்தனர். இன்னும் பலர் தரையில் குப்புற படுத்துக்கொண்டனர். நானும் அப்படித்தான் படுத்துக்கொண்டேன். அப்போது, என் மீது மற்றொருவர் படுத்திருந்ததை கண்டேன். துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் எத்தனை பேர் என்பதை நான் பார்க்கவில்லை” என தெரிவித்து உள்ளார்.

துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தைப் பார்வையிட்ட நகர மேயர் ஜான் ஹியூ டையர், நகரத்தில் நெருக்கடி நிலையை அறிவித்தார். மேலும், ஃபுளோரிடா மாகாணம் முழுவதும் நெருக்கடி நிலையை அறிவிக்க வேண்டும் என்று மாகாண ஆளுநருக்கு மேயர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்க தேசிய புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ., அந்தக் கேளிக்கை விடுதியிலும், அந்த நபர் தங்கியிருந்ததாகக் கருதப்படும் இடத்திலும் புலன் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

A5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com