“இரண்டு கோடி கிடைக்கவேயில்லை” – சிறிதரன் சவால் – “இரண்டு கோடி கிடைத்தது” மாவை பதில் !!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசிடம் இருந்து இரண்டு கோடி ரூபா பணம் வாங்கியதை சிவசக்தி ஆனந்தனால் ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா என, பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் சவால் விடுத்துள்ள  நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நிதி ஒதுக்கீடாக 2 கோடி ரூபா வழங்கப்பட்டுள்ளதை ஒத்துக்கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தனது ஒதுக்கீட்டின் மூலம் மேற்கொள்ளப்படவுள்ள வேலைத்திட்டங்கள் குறித்த தகவலையும் வெளியிட்டுள்ளார்.

நேற்று கிளிநொச்சி – வட்டக்கச்சி பொதுச் சந்தையில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன்,

வவுனியாவில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்ற ஈபிஆர்எல்எப் எந்த வட்டாரத்திலும் வெல்லமாட்டார்கள். இந்த இடத்தில் நீங்கள் அதனை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.

எமது தமிழ் மக்களை ஈபிஆர்எல்எப் கொலை செய்தமையினையும், கொன்று குவித்தமையையும் மக்கள் மறந்து விடமாட்டார்கள்.

அத்தோடு, வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களைக் கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான போராட்டத்தை மேற்கொண்டது சிவசக்தி ஆனந்தன் தான், எனவும் சிறிதரன் குற்றம்சாட்டினார்.

மேலும், நாங்கள் இந்த தேர்தலில் இடைக்கால அறிக்கைக்கு ஆணை வழங்குகள் என்று மக்களிடம் கோரவில்லை. இது அதற்கான தேர்தலும் அல்ல. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எங்காவது இடைக்கால அறிக்கைக்கு ஆணை கோரி இந்த தேர்தலில் வாக்களியுங்கள் என்று வேண்டுகின்றனரா? அதனை உறுதிப்படுத்த முடியுமா? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்நிலையில் நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா நிதி ஒதுக்கீடு குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் குறிப்பிட்ட அவர்,

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவளித்தமைக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு 2 கோடி ரூபா இலஞ்சம் வழங்கியதாக ஓர் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார் .எனக்கு அனுமதிக்கப்பட்ட தொகைக்கான விபரத்தினை தெரிவிக்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை. சேனாதிராயா தெரிவித்தார்.

அதாவது அத்தொகையானது வரவு செலவுத் திட்ட விசேட ஒதுக்கீடாக அனுமதிக்கப்பட்டு மாவட்டச் செயலகம் ஊடாகவே அப்பணிகள் இடம்பெற்றது இதனால் இதன் விபரம் மாவட்டச் செயலக திட்டமிடல் செயலகத்தில் முழுமையாக பெறமுடியும்.

குறித்த நிதியில் 5 லட்சத்திற்கு குறையாமலும் 15 லட்சத்திற்கு மேற்படாமலும் பதிவு செய்யப்பட்ட அமைப்புகளிற்கு மட்டுமே வழங்க முடியும் என்பதால் அதற்கமையவே தொகுகளில் வழங்கப்பட்டன.

இதன் பிரகாரம்

தெல்லிப்பளை ப.நோ.கூ.சங்கம் 5 லட்சம் ,

அளவெட்டி , மல்லாகம் ப.நோ.கூ.சங்கம் 5 லட்சம் ,

தெல்லிப்பளை கூட்டுறவு வைத்தியசாலை 15 லட்சம் ,

அளவெட்டி தெற்கு கிராமச் செயலகம் 10 லட்சம் ,

அளவெட்டி மேற்கு கிராமச் செயலகம் , அளவெட்டி மகாஜன ச.ச.நிலையம் 15 லட்சம் ,

தையிட்டி பராசக்தி ச.ச.நிலையம் 10 லட்சம்

மாவிட்டபுரம் கிராம அபிவிருத்திச் சங்கம் 15 லட்சம் ,

மாவிட்டபுரம் முத்துமாரி அம்மன் ஆலயம் 15 லட்சம்

என சிபார்சு செய்யப்பட்டது. இதேபோன்று நகுலேஸ்வரம் இலந்தகலட்டி வீதி , கருகம்பானை பொது நோக்கு மண்டபம் , குரும்பசிட்டி வளர்மதி ச.ச.நிலையம் மாவிட்டபுரம் பரா சக்தி ச.ச. நிலையம் , தந்தை செல்வாபுரம் கலைவாணி ச.ச.நிலையம் , பலாலி கிழக்கு முன்பள்ளி ஆகிய ஆறு அமைப்புகளிற்கும் 15 லட்சம் விகிதம் 90 லட்சம் ரூபாவும் வலி.வடக்கு இளைஞர் கழகங்களிற்கான விளையாட்டு உபகரணங்களிற்காக 10 லட்சம் என மொத்தமாக இரண்டு கோடி ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான சான்றுகளை பரிசீலிக்க முடியும் என்றார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com