ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியின் கீழ் புனரமைக்கப்பட்டு வரும் கிளிநொச்சி இரணைமடுகுளத்தின்  அபிவிருத்தி பணியின் 80 வீதமான பணிகள் நிறைவுற்ற நிலையில் இரண்டு வருடங்களின் பின் இவ்வருடம் வழமையைவிட  இரண்டு அடி நீர் மேலதிகமாக சேமிக்கக் கூடிய நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரணைமடுக்குளத்தில் வழமையாக 34 அடி நீர் சேமிக்கப்படும் ஆனால் இவ்வருடம் போதிய மழைவீழ்ச்சி கிடைக்கும்  போது 36 அடி வரை நீரை சேமிக்க முடியும் என நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கிளிநொச்சியில்  கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக  மாவட்டத்தின் பல குளங்களினதும் நீர் மட்டம் உயர்வடையத் தொடங்கியுள்ளது.

அந்த  வகையில் இரணைமடுக்குளம் 14.01 அடியாகவும், அக்கராயன்குளம் 09.00 அடியாகவும், கரியாலை நாகபடுவான்குளம் 00.10அடியாகவும், கல்மடுகுளம் 10.03 அடியாகவும், கனகாம்பிகைகுளம் 07.00 அடியாகவும், வன்னேரிக்குளம் 04.03 அடியாகவும், புதுமுறிப்புக்குளம் 09.06அடியாகவும், பிரமந்தனாறுகுளம் 07.06 அடியாகவும், குடமுருட்டிகுளம் 04.0 அடியாகவும் காணப்படுகிறது.

தொடர்ச்சியாக மழை பெய்து வருவதனால் நாளுக்கு நாள் குளங்களின் நீர் மட்டம் உயர்வடைந்து வரும் எனவும் நீர்ப்பாசனத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.